Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 25

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

பல நூற்றாண்டுகளாக ஆடப்பட்டுவரும் விளையாட்டு என்றாலும், மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் சதுரங்கத்துக்கு எப்போதும் ரசிகர்கள் குறைவு தான்

ஜனவரி மாதத்தின் புதிய வரவு Angry Birds Journey. கோபக்காரப் பறவைகள் வெர்சஸ் மகிழ்ச்சியான பன்றிக்குட்டிகள் என்பதுதான் Angry birds கேம்களின் ஒன்லைன். நம்மிடம் இருக்கும் ஆயுதத்தால் மறைந்து நிற்கும் பன்றிகளை குறி பார்த்து அடிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் Angry birds விளையாட்டு வெளியான போது, ஊரே அதைத்தான் விளையாடிக்கொண்டிருந்தது. ஐந்து வாய்ப்புகள் முடிந்ததும், அடுத்த வாய்ப்புகளுக்காக அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல், அதிலிருக்கும் கழுகை வைத்து எல்லாக் கட்டடங்களையும் ஒரே அடியில் தகர்த்துவிட முடியும். அதன்பின் இரண்டு சினிமாக்களே ஆங்கிரி பேர்ட்ஸை வைத்து வந்துவிட்டன. தற்போது 12 ஆண்டுகள் கழித்துப் புதியதொரு வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ரோவியோ எண்டர்டெய்ன்மென்ட். இரண்டு வயதுக் குழந்தைகூட ஆர்வம் காட்டும் விளையாட்டாகவே இதையும் வடிவமைத்திருக்கிறார்கள். அதே சமயம், கழுகுக்குப் பதில் சில பல பூக்களைச் சேர்த்திருக்கிறார்கள். பன்றிகளின் கூடாரத்தை நிலைகுலையச் செய்ய நீங்கள் ரப்பர் வாத்துகளையோ, பூக்களையோ பயன்படுத்த முடியும். ஆனாலும், கழுகு அளவுக்கு ஒரே அழுத்தில் இவை எல்லாவற்றையும் காலி செய்ய மறுப்பதால் சற்று கடுப்பாகிறது. விளையாட ஆரம்பித்த இரண்டு தினங்களில் நாற்பது லெவல்களைக் கடந்துவிட்ட உறுதியில் சொல்கிறேன். இரண்டாவது சீசனிலும் ஆங்கிரி பேர்ட்ஸின் குறி தப்பவில்லை.

கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25

Chess

பல நூற்றாண்டுகளாக ஆடப்பட்டுவரும் விளையாட்டு என்றாலும், மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் சதுரங்கத்துக்கு எப்போதும் ரசிகர்கள் குறைவு தான். ‘அதை யாருப்பா உட்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்குறது’ என்கிற ரீதியில் டீல் செய்பவர்கள் அதிகம். அதே சமயம், இன்னமும் சின்ன சின்ன நகரங்களில்கூட செஸ் கோச்சிங் சென்டர்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லோரும் தங்களின் பிள்ளைகள் விஸ்வநாதன் ஆனந்த் போல் வந்துவிடமாட்டாரா என்கிற ஏக்கத்தில், நான்கு வயதிலிருந்து செஸ் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். இந்தியாவில் ஆனந்துக்குப் பின், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுவிட்டார்கள். ஆனால், இன்னமும் கண்ணாடியின் வழி கூர்ந்து நோக்கும் ஆனந்தின் புகைப்படம்தான் செஸ்ஸுக்கான விற்பனைப் புகைப்படம். சரி, விஷயத்துக்கு வருவோம். போர்டுகளில் செஸ் ஆடுவது, கிளாக்குகளுடன் செஸ் ஆடுவது, இரண்டு போர்டுகளில் ஒரே சமயத்தில் காய்களை மாற்றிக்கொண்டு செஸ் ஆடுவது போன்ற பழைய புராணங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டது இணையம்.

உலக சாம்பியனான கேரி கேஸ்பரோவை 1997-ம் ஆண்டு 3.5-2.5 என்கிற கணக்கில் IBM நிறுவனத்தின் Deep Blue வென்றபோது, உலகின் மிகப்பெரிய வைரல் செய்தி அதுதான். மூளையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு விளையாட்டில், எப்படி ஒரு மெஷின் வெல்லும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் மெஷின்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. டீப் புளூவால் ஒரு நொடியில் 200 மில்லியன் ஆப்ஷன்களை யோசிக்க முடியும். மனிதர்கள் யோசிப்பதுபோல் Deep blue யோசிக்கும். ஏன் அதற்குப் பின்னர் வெளிவந்த Stockfish, komodo போன்ற சதுரங்க எஞ்சின்கள்கூட யோசிக்காது. இத்தகைய மெஷின்களுக்கான கோடிங்குகளை இன்புட் செய்தது மனிதர்கள். ஒரு போட்டியை எப்படி அணுக வேண்டும், கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடிய போட்டிகள், ஒரு மூவ்க்கு எதிராக எது சிறப்பான மூவ் என்பதையெல்லாம் மனிதர்கள் டீப் புளூவுக்குச் சோறாக ஊட்டியிருந்தார்கள். ஆனால், மெஷின்களின் அடுத்த கட்டம் இன்னும் அசுரத்தனப் பாய்ச்சலாக உருவானது. எது பெஸ்ட் மூவோ, அதைத்தான் டீப் புளூ ஆடும். அது ரிஸ்க் எடுக்காது. மனிதர்களை சோதித்துப் பார்க்காது. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்க ஆசை காட்டாது.

இந்தச் சூழலில்தான் ஆல்ஃபா ஜீரோ உருவானது. மனிதர்களைப்போலவே ரிஸ்க் எடுக்கத் தொடங்கியது ஆல்ஃபா ஜீரோ. StockFish உடனான நூறு ஆட்டங்களில் 28 போட்டிகளில் வெற்றி பெற்றது ஆல்ஃபா ஜீரோ. 72 போட்டிகளை சமன் செய்தது. ஒவ்வொரு காயும் எப்படி விளையாடும் என்பதைத்தவிர ஆல்ஃபா ஜீரோவுக்கு எந்த இன்புட்டும் இல்லை. அது தன் தவற்றில் இருந்து மட்டுமே தன்னைத் திருத்திக்கொண்டது. StockFishபோல 60 மில்லியன் ஆப்ஷன்களை ஒரு நொடியில் அது யோசிக்கவில்லை. மாறாக 60,000 ஆப்ஷன்களை மட்டுமே யோசித்தது. எவற்றைப் புறந்தள்ள வேண்டும் என ஆல்ஃபா ஜீரோவுக்குத் தெரிந்திருந்தது. ஆல்ஃபா ஜீரோவால், Stockfish வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாது. ஆனால், விவேகத்தில் ஆல்ஃபா ஜீரோவை அடிக்க ஆளில்லை. ‘‘ஆல்ஃபா ஜீரோ நமக்குக் கற்றுக்கொடுப்பது ஒன்றுதான். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட க்ளிஷே அது. கடுமையாக உழைக்காதீர்கள், ஸ்மார்ட்டாக உழையுங்கள்’’ என்றார் கேரி கேஸ்பரோவ். இப்போது இணையம் முழுக்க இருக்கும் ஓராயிரம் தளங்களும் இத்தகைய எஞ்சின்களைக் கொண்டுதான் இயங்குகின்றன. அவற்றில் Stockfish தான் பெஸ்ட்.

பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு செஸ் தொடர்பான செயலிகளைக் குறித்துச் சின்ன பயோ இங்கே:

கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25

Chess (by AI factory limited)

ஆரம்ப லெவலிருந்து அட்டகாச லெவல் வரை 12 கடின முறைகளில், இந்தச் செயலியில் உங்களால் செஸ் ஆட முடியும். அதன் செஸ் என்ஜினான Treebeard மனிதர்கள் யோசிக்கும் அளவில் இயங்குவதால், பல சமயங்களில் நமக்கு மெஷினுடன் ஆடும் உணர்வு வராது. இந்த சாதா வெர்ஷனில் விளம்பரங்கள் வரும் என்பதால் சிலர் இதே நிறுவனம் வெளியிட்டிருக்கும் செஸ் ப்ரோ வெர்ஷனைத் தேர்வு செய்வதுமுண்டு. 180 ரூபாய்க்குக் கிடைக்கும் ப்ரோ வெர்ஷன்தான் பிளே ஸ்டோரில் அதிக ரேட்டிங் கொண்ட செஸ் செயலி. நீங்கள் எப்படி காய்களை நகர்த்த வேண்டும், மெஷின் அடுத்து யோசித்து வைத்திருக்கும் வெவ்வேறு மூவ் போன்றவற்றையும் இந்தச் செயலி காட்டும். 2D, 3D போர்டுடன் பல மாடல்களில் போர்டு இருப்பதால், ஆரம்பக்கட்ட செஸ் விளையாடுபவர்களுக்கு இந்தச் செயலிதான் பொருத்தமானதாக இருக்கும்.

Chess.com

செஸ்ஸுக்கு மொத்த பிராப்பர்ட்டியே நாங்கதாங்க, மத்ததெல்லாம் வெறும் சைடு தான் என்பதாக Chess.com வெளியிட்ட செயலிதான் செஸ் பயிலும் பலரது ஃபேவரைட் செயலி. ஒரு நிமிடத்துக்குள் (இரண்டு பக்கமும் ஒவ்வொரு நிமிடம்) விளையாடும் போட்டிகளில் இருந்து பதினான்கு நாள்களுக்கு ஒரு மூவ் விளையாடும் போட்டிகள் வரை எல்லாமே Chess.com-ல் உள்ளன. செஸ் குறித்த செய்திகள், போட்டிகள் என செஸ் வீரர் பின்தொடர வேண்டியவை இதில் உண்டு. தினசரி நடக்கும் டோர்னமென்ட், லைவ் டோர்னமென்ட், புதிர்கள், ஓப்பனிங், எண்ட் கேம், உலகின் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடிய போட்டிகள் எனப் பல அம்சங்கள் இருப்பதால் chess.com நம் மொபைலிலேயே என்றைக்குமான செயலியாகத் தங்கிவிடக்கூடும். அதேபோல், உலகில் நடக்கும் பல்வேறு சர்வதேசப் போட்டிகளை நாம் லைவாகப் பார்க்கவும் முடியும். ஓர் ஆண்டுக்கான குறைந்தபட்ச மெம்பர்ஷிப் 1,099 ரூபாய் என்றாலும், இலவசமாகவும் இதை விளையாட முடியும். நானெல்லாம் பத்தாண்டுகளாக இலவசமாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் இத்தருணத்தில்...

இதே தளம் வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு செயலிகளை வடிவமைத்திருக்கிறது. Chess Kid உலக அளவில் இருக்கும் சிறுவர்களுடன் செஸ் விளையாட முடியும். ஆயிரக்கணக்கான புதிர்களும், சிறுவர்கள் சம்பந்தப்பட்ட செஸ் வீடியோக்களும் இதில் உண்டு. இவர்கள் வெளியிட்டிருக்கும் Learn Chess with Dr.Wolf செயலி மூலம், ஒவ்வொரு மூவுக்கும் பின்னால் இருக்கும் விஷயங்கள் விளக்கப்படும். ஒரு போட்டியில் நாம் என்ன என்ன மூவ்களைத் தவறாக விளையாடியிருக்கிறோம். அதற்கான மாற்று மூவ்கள் என்ன என்ன போன்றவற்றையும் இந்தச் செயலி விளக்குகிறது. அதேபோல், Dr.Worf-உடன் போட்டிகளிலும் நாம் விளையாடலாம்.

கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25

Lichess

டெஸ்க்டாப், ஆண்டி ராய்டு, ஆப்பிள் என எல்லாத் தளங்களிலும் லிச்சஸ் ஆட முடியும். Chess.com-ல் தொடர்ச்சி யாகத் தோற்றுக்கொண்டே இருந்தால், அந்தத் தளத்துக்கு டூ விட்டுவிட்டு இந்தத் தளத்துக்கு பிளே ஸ்டோர் பிடித்து வந்துவிடலாம். chess.com, lichess இரண்டுமே Stockfish எஞ்சினின் துணை கொண்டு இயங்குபவை. கூகுளின் AlphaZeroவால் தோற்கடிக்கப்படும் வரை ஸ்டாக்ஃபிஷ் தான் உலகின் மிகச்சிறந்த சதுரங்க செயற்கை நுண்ணறிவு மெஷின். நாம் விளையாடிய மூவ்களை, உலகின் முன்னணி மாஸ்டர்களில் யாரெல்லாம் விளையாடியிருக்கிறார்கள் என்பதையும் லிச்சஸ் செயலியில் கண்காணிக்க முடியும்.

கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25
கேம்ஸ்டர்ஸ் - 25

Really Bad Chess

வலப்பக்கம் ஒயிட் ஸ்குயர் என்பதுதான் சதுரங்க போர்டை வைப்பதற்கான முதல் தகுதி. பல சினிமாக்களில் இன்றளவும் இதுவே தவறாகத்தான் இருக்கும் என்பது தனிக்கதை. அடுத்தது, காய்களைச் சரியாக அடுக்குவது. செஸ்ஸுக்கென உங்கள் மூளையை நீங்கள் ட்யூன் செய்திருந்தால், அதை முற்றிலுமாக மறந்துவிட்டு விளையாட வேண்டிய ஆட்டமிது. இதில் எல்லாக் காய்களுமே இடம் மாறித்தான் இருக்கும். 16 காய்கள்தான் என்றாலும், நம் ராசிக்கு ஒரே சமயத்தில் ஐந்து யானைகள்கூட நமக்குத் தரப்படும். அவற்றைக்கொண்டு இதில் மெஷினை வெல்ல வேண்டும். ஆம், இதில் மனிதர்களுடன் விளையாட முடியாது. அதே போல், இதில் டிரா என்கிற வசதியே கிடையாது. கடைசி வரையில் ஆட வேண்டும்.

Magnus Trainer

உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்ஸனே, அதாவது அந்த சரஸ்வதி தேவியே வந்து உங்களுக்கு இதில் சின்னச் சின்னப் பாடங்களை எடுப்பார். ஆனாலும், ரொம்பவே காஸ்ட்லி என்பதால், இதைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்வது சாலவும் நன்று.

- Downloading