
எனக்கெதுக்குங்க வேலண்டைன் என கெத்தாகத் திரியும் முரட்டு சிங்கிள் என்றால், நீங்கள் ஆட வேண்டிய கேம் Cricket league. ஒரு ஓவரில் யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்கள் வின்னர்.
ஜனவரி மாதம் முழுக்கவே பெரிய கேமிங் நிறுவனங்கள் மிகப்பெரிய ஷாப்பிங்கில் ஈடுபட்டிருக்கின்றன. ‘எட்டு ரூபாயா, அப்படின்னா பத்து ரூபாயா வச்சுக்கோ’ என்பதாக சோனியும் மைக்ரோசாப்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு சின்னச் சின்ன மீன்களை விழுங்கியிருக்கின்றன. சோனி நிறுவனம் பங்கியை 3.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க, மைக்ரோசாப்ட் நிறுவனமோ Activision Blizzard நிறுவனத்தை 68.7 பில்லியன் டாலருக்கு முடித்திருக்கிறது. எங்கெல்லாம் திறமையான விளையாட்டுகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் மொத்தம் மொத்தமாய் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் பார்வையிலிருந்து எந்த விளையாட்டும் தப்ப முடியாது. இந்தத் தொடரில் இரண்டு முறை எழுதப்பட்ட wordle என்னும் வார்த்தை விளையாட்டைக்கூட நியூயார்க் டைம்ஸ் வாங்கிவிட்டது. ஏழு இலக்கத் தொகைக்கு வாங்கியிருப்பதாக சூசகமாகச் சொல்கிறது நியூயார்க் டைம்ஸின் செய்திக்குறிப்பு. ஐந்து எழுத்து வார்த்தைக்கு ஏழு இலக்கத் தொகையா என ஷாக்கில் இருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். உண்மையில், தொகை அந்த விளையாட்டுக்கு அல்ல. அந்த விளையாட்டை விளையாடும் 50 லட்சம் மனிதர்களின் நேரத்துக்கு என்பதுதான் அதில் அடங்கியிருக்கும் விஷயம்.

காதல் வாரத்தில் கேம்ஸ்டர் மட்டும் என்ன விதிவிலக்கா. பள்ளிக் காலத்தில் நமக்கு ஒத்துவருமா வராதா என ஆசையாய் பேர்ப் பொருத்தம் பார்த்த FLAMESகூட ஒரு வகை கேம்தான். Flames-க்குக்கூட இப்போதெல்லாம் பேப்பரில் கோடிடத் தேவையில்லை. அதுவும் இணையத்திலேயே இருக்கிறது. ஆனால், அதன் பின்னர் மொத்தமாய் வன்முறைக்குப் பழகிவிட்டோம். ஒற்றைக் கையில் விளையாடும் வீடியோ கேம் முதல் தற்போதைய பிளேஸ்டேஷன், VR, AR வரை எல்லாமே ரத்தம் தெறிக்கும் விளையாட்டுகள்தான். அவ்வப்போது அதில் அத்திபூத்தாற் போல் வரும் ரொமாண்டிக் கேம்களும் ஒன்று விக்ரமன் சார் பாணியிலான குடும்பப் பாங்கான கேமாக இருக்கும், அல்லது, ‘ என்னடா வசனமே புரியல’ மோடில் இருக்கும். அந்நியன் விக்ரம்போல் இருக்கும் உங்களை ரெமோ விக்ரமாக மாற்ற, ஆண்டிராய்டில் இருக்கும் சில ரொமாண்டிக் கேம்களின் தொகுப்புதான் இந்த வாரம்.

Fireboy and Watergirl: Online
கேமின் தலைப்புதான், கேமின் ஒன்லைனும். ஃபயர்பாய் நீரைத் தொட்டுவிடக்கூடாது; வாட்டர் கேர்ள்... ஆம். அதேதான். நெருப்பைத் தொட்டு விடக்கூடாது. ஆங்காங்கே இருக்கும் முள்ளம்பன்றித்தலை மாதிரியான முட்கம்பிகளை இருவருமே தொட்டுவிடக்கூடாது. அவ்வளவுதான் கேம். இது ஈஸிதான என்கிறீர்களா. அடுத்துதான் கேமில் முக்கியமான ட்விஸ்ட் இருக்கிறது. சர்வரில் கனெக்ட் செய்து, நீங்களும் உங்கள் பார்ட்னரும் இந்த கேமை ஆட வேண்டும். ஒருவருக்கு ஃபயர் பாய் வேடம், இன்னொருவருக்கு வாட்டர்கேர்ள் வேடம். வாட்டர் கேர்ள் நினைத்தால், ஃபயர் பாயை அவுட்டாக்கிவிடமுடியும். ஆனால், அவுட்டாக்கிய பின்னர் வாட்டர் கேர்ளால் தனியாக வெல்ல முடியாது. இரட்டைக்கிளவி போல் ஒற்றுமையாகவே இந்த கேமை முடிக்க வேண்டும்.

Heart Star
ஃபயர்பாயைப் போலவே இதுவும் இருவர் விளையாட்டுதான் என்றாலும், ஒருவராலேயே இரண்டு கதாபாத்திரங்களையும் விளையாட முடியும். நீலநிற நட்சத்திரம் ஆணுக்கு, சிவப்புநிற நிலா பெண்ணுக்கு. மொபைலின் வலப்பக்கம் இருக்கும் டாகிள் கீயை அழுத்தி ஆணுக்கு விளையாடிவிட்டு, பெண்ணுக்கும் நாமே விளையாட வேண்டும். இருவரையும் ஒருசேர அங்கிருக்கும் தங்க மேடையில் அமர வைத்தால், கேமில் வென்றதாக அர்த்தம். சிறார்கள் விளையாடும் அளவுக்கான IQவே இந்த கேமுக்குப் போதும் என்றுதான் முதல் பத்து லெவல்கள் சொல்கின்றன. சிறுவயதில் ஜாய் ஸ்டிக்கை வைத்துத் தொலைக்காட்சியில் விளையாடிய அனுபவத்தைத் தருகிறது இந்த Heart Star.

Better Topics
உங்கள் துணையுடன் ஒரு ஆத்மார்த்தமான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலி Better topics. பிடித்த விஷயங்கள், முக்கிய தருணங்கள், ஆசைகள் எனப் பல கேள்விகளையும் இருவரும் கேட்டுக்கொள்ளலாம். யார் அதிக BT புள்ளிகளைப் பெறுகிறார்களோ, அவர்களே வின்னர். பிறகு வின்னர் விருப்பப்படி, லூசர் சில கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும்.



Couple Widget
முதல் முறை பார்த்த நாள், முத்தமிட்ட நாள், திருமண நாள் என எல்லாவற்றையும் இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். என்றேனும் சிக்கல் ஏற்பட்டால், இதில் இருக்கும் பதில்களைச் சொல்லித் தப்பித்துவிடலாம். ஏனெனில், மறதி ஆண்களின் உலக வியாதி.
Fancy Love
சரி, சற்றே ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறோம். இந்த கேம் வயதுவந்தவர்களுக்கு மட்டும். கேமுக்குள் பல்வேறு கதைகள் கொட்டிக்கிடக்கும். நமக்குத் தேவையான கதையைத் தேர்வு செய்து, அதில் இருக்கும் பாத்திரமாக மாறி நாம் அந்தக் கதையை முடிக்க வேண்டும் . பவா செல்லதுரை ஒரு கதையைச் சொல்லிக்கொண்டே செல்வதுபோல, இதில் கதை ஒவ்வொரு வரியாக நீண்டுகொண்டே வரும். இலவசமாகவே முழு விளையாட்டையும் ஆட முடியும் என்பதால், எக்காரணத்தைக் கொண்டும் எதற்கும் பணம் கட்டிவிட வேண்டாம். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப கதையின் க்ளைமாக்ஸ் இருக்கும்.





Sexy Dice
டைஸ் வைத்து விளையாடக்கூடிய விளையாட்டு இது. ஒவ்வொரு முறை டைஸைச் சுழற்றும்போதும், ஒரு வார்த்தை வரும். அப்படியே மொத்தமாக ஒரு வாக்கியமாக மாறும். இருவர் இணைந்து விளையாடக்கூடிய விளையாட்டு இது. இதற்கு மேல் எல்லாம் சொல்ல முடியாது என்பதால், தாங்களே விளையாடிப் பார்த்துக்கொள்ளவும். இதுவும் 18 ப்ளஸ்தான். பிளே ஸ்டோரில் இருக்கும் CanU-வும் இதே ரகமான விளையாட்டுதான்.
நண்பர்களுடன் விளையாட Avaland; நம் முழு வாழ்க்கையையும் கற்பனையில் ஓட்டிப் பார்க்க SIMS, குடும்பமாய் உணர்ந்து விளையாட Famil island என இன்னும் பல விளையாட்டுகள் இருக்கின்றன.
எனக்கெதுக்குங்க வேலண்டைன் என கெத்தாகத் திரியும் முரட்டு சிங்கிள் என்றால், நீங்கள் ஆட வேண்டிய கேம் Cricket league. ஒரு ஓவரில் யார் அதிக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்கள் வின்னர். ஒரு கேமுக்கான அதிகபட்ச நேரமே 4 நிமிடங்கள்தான். Tennis Clash விளையாட்டினை நினைவுபடுத்தும் அளவுக்குப் பல விஷயங்கள் இதில் இருந்தாலும், நண்பர்களுக்கிடையே ஆட உதவும் ஃபேஸ்புக் லாகின் சிறப்பாகச் செயல்படுகிறது. உங்கள் ஃபேஸ்புக் நண்பரை இந்த கேமில் இணைத்துவிட்டால், உங்களுக்கு 1500 காயின்கள் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் விளையாடும்போது நல்ல நல்ல வீரர்களை வாங்கலாம். சின்ன அளவிலான கேம் என்பதால், எந்தவித லோடிங் சிக்கலும் இல்லாமல் ஸ்மூத்தாக நழுவிக்கொண்டு செல்கிறது. இன்ஸ்டால் செய்த நான்கு தினங்களில் 127 போட்டிகளை விளையாடியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
- Downloading...