Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 28

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

நிஜ உலகிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள மட்டுமே வீடியோ கேம்களை ஆடுகிறோம் என்றால், அது சரியான போக்காக இருக்காது என்கிறார் உலகின் முன்னணி கேம் டிசைனரான ஜேன் மெக்கோனிகல்.

நமக்கு நாமே வைத்திருக்கும் எச்சரிக்கைக் கோட்டுக்கு நாம் வெவ்வேறு பெயர்கள் வைத்திருக்கிறோம். சில எச்சரிக்கைக் கோடுகளை விளையாட்டுக்குள்ளும் உருவாக்க முடியும். சமயங்களில் body clock போல சில விஷயங்கள் கேமுக்குள்ளும் நிகழும். சில கேம்களில் மூன்று மணி நேர பிரேக் டைம் இருக்கும். அதாவது அடுத்து நாம் விளையாடுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்; அல்லது விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்; அல்லது பணம் கட்டி அந்த மூன்று மணி நேரத்தை ஸ்வாஹா செய்ய வேண்டும். நாம் அந்த விளையாட்டை விட்டு வெளியே வேறு வேலைக்கு வந்திருந்தாலும், சில மணி நேரத்தில் ஆழ்மன எண்ணங்களில் இருந்து கேம் நேரம் நம் நினைவுக்கு வந்துவிடும். அலாரம் வைத்ததுபோல் சரியான நேரத்துக்கு கேமை மீண்டும் லாகின் செய்திருப்போம். கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் மாதிரியான கேம்களில், நாம் ஆஃப்லைனில் சில மணி நேரம்கூட இருக்க முடியாது. எதிரிகள் எந்நேரத்திலும் நாம் பல மணி நேரம் உழைத்து உருவாக்கிய கோட்டையைத் தகர்த்துவிட முடியும். ஓய்வு நேரங்களில் விளையாடுவது என்பதைக் கடந்து இப்படியாக அனுதினமும் கேமில் இருக்கும் விர்ச்சுவல் உலகத்துக்கு என்னாகுமோ என்கிற பதைபதைப்பு அவசியம் என நினைக்கிறீர்களா? பதைபதைப்பு மட்டுமல்லாது சில கேம்களில் வரும் விர்ச்சுவல் பரிசுத்தொகைகூட சில நாள்களில் அதுவாகவே மறைந்துவிடும். அதனாலேயே மீண்டும் மீண்டும் அந்த விளையாட்டுச் செயலியை நாம் லாகின் செய்துகொண்டே இருப்போம்.

கேம்ஸ்டர்ஸ் - 28

இதுமாதிரியான கேமிங் பாலிசிகளைத்தான் ஒரு விளையாட்டு போல் பல்வேறு நிறுவனங்கள் விற்பனைக்குக்கூடக் கையாள்கின்றன.பிளிப்கார்ட்டில் ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் இப்போதெல்லாம் புள்ளிகள் தருகிறார்கள். அந்தப் புள்ளிகளை வைத்து மொத்தமாய் நாம் நமக்குத் தேவையான சில பொருள்களை, கூப்பன்களை வாங்கிக்கொள்ளலாம்.பிளிப்கார்ட் என்றில்லை, பெட்ரோல் பங்குகளில்கூட இந்தப் புள்ளிகளின் விளையாட்டை நாம் பார்க்க முடியும். அதற்காக மற்ற பங்குகளை விட்டுவிட்டு இதே பங்கில் சென்று பெட்ரோல் போடுவோம். சேமிப்பு சார்ந்து நாம் செய்யும் விஷயம் இது என்றாலும், இதன் உள்ளிருக்கும் விளையாட்டின் ஆர்வமே நம்மை இதை நோக்கி இழுத்துச் செல்கிறது. சில காலம் முன்பு, அமேசான் நிறுவனம் தனது குடோனில் எல்லாப் பெரிய வேலைகளுக்கும் மெஷின்களை நிரப்பிவிட்டதாம். மனிதர்களின் வேலை என்பது, பேப்பரில் இருக்கும் பொருள்கள் சரியாக இருக்கின்றதா எனப் பார்ப்பது மட்டுமே. எவ்வளவு வேலை செய்தாலும் அதுவொரு வேலையா என்கிற ரீதியில் அந்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேலையின் மீது எந்தப் பிடிப்பும் இல்லாமல் சோம்பித் திரியத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படியான வேலைகளை ‘கழுதை வேலை’ என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அவர்களின் நேரத்தை சுவாரஸ்யமாக்க, அதையொரு கேமாக மாற்ற ஆரம்பித்தது அமேசான். அலுவலகத்திலேயே ஒரு பெரிய டி.வி-யை மாட்டி, அங்கு லீடர்போர்டு ஒன்றை உருவாக்கி, யார் முதல் மூன்று இடங்கள் வருகிறார்கள் என அதைப் போட்டியாக மாற்றியிருக்கிறார்கள்.

நிஜ உலகிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள மட்டுமே வீடியோ கேம்களை ஆடுகிறோம் என்றால், அது சரியான போக்காக இருக்காது என்கிறார் உலகின் முன்னணி கேம் டிசைனரான ஜேன் மெக்கோனிகல். விளையாடுவதற்கு எப்போதும் ஒரு காரணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் அவர். காரணமே இல்லாமல் விளையாடுவது வீண் என்கிறார். “உலகிலுள்ள அணுக்களைவிட சதுரங்க விளையாட்டில் வேரியேஷன்கள் அதிகம். ஆனால், எல்லாவற்றையும் பற்றியெல்லாம் யோசிக்காமல், நம்மால் தொடர்ச்சியாக செஸ் விளையாட முடிகிறது. நாம் ஒவ்வொரு முறை செஸ் விளையாடும்போதும் அடுத்து என்ன மூவ் செய்வது என்பதை மண்டைக்குள் சிமுலேஷன் போல ஓட்டிப் பார்க்கிறோம். என்ன செய்தால் என்ன நடக்கும் என்கிற மனக்கணக்கைப் பலமுறை ஓட்டிப் பார்க்கிறோம். இதைச் செய்தால் என்ன நடக்கும்; கம்பெனி மாறினால் என்ன ஆகும்; இதைப் பற்றி சமூக வலைதளங்களில் எழுதினால் என்ன ஆகும் என உங்களுக்கு நீங்களே செஸ் போல சிமுலேசன் செய்ய ஆரம்பித்து வாழ்க்கையைப் பற்றி யோசியுங்கள். ஒரு சராசரி மனிதரைவிட இப்படியாகச் சிந்தித்து கேம் விளையாடுபவர்கள் பத்து அடி முன்னால் இருப்பார்கள்’’ என்பது ஜேனின் வாதம்.

கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28

Survival Games

சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது டார்வின் வாக்கு. பிளே ஸ்டோரில் அதிக மெமரியை உறிஞ்சுவதும், அதிக நாள்கள் நம்மை விளையாட வைப்பதும்கூட சர்வைவல் வகை விளையாட்டுகள்தான். உலகம் ஏதோவொரு புள்ளியில் நின்றுவிட, மீதமிருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பிப்பது; ஜோம்பிக்களிடமிருந்து தப்பிப்பது; காட்டில் சிக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிப்பது எனப் பல்வேறு வகைகளில் சர்வைவல் கேம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் Kefir! நிறுவனம் உருவாக்கிய Last day on Earth விளையாட்டு குறித்து எழுதியிருப்பேன். உலகத்தை மொத்தமாக ஜோம்பிக்கள் சூழ்ந்துவிட, நாம் நமக்கான வீட்டை உருவாக்கிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. தினமும் லாகின் செய்ய வேண்டும். ஜெனரேட்டர் ரெடி செய்வது, திருடுவது, மிருகங்களைக் கொன்று நம் ஆயுளை நீட்டிப்பது என டாஸ்க்குகள் மலை போலக் குவிந்திருக்கும். ஒரு கேம் ஏன் சில நிமிடங்கள் மட்டுமே விளையாட வைக்காமல் நம் நாளின் சில மணி நேரத்தை நம்மிடமிருந்து உறிஞ்சுகின்றன என்றெல்லாம் யோசித்தாலும் எப்படியும் தினமும் விளையாடிவிடுவோம். இந்த வாரம் அப்படியான சில முக்கியமான சர்வைவல் கேம்கள் குறித்துப் பார்ப்போம்.

Mutiny: Pirate Survival RPG

கரீபியத் தீவில் பைரேட்டாக நாள்களைக் கடத்த வேண்டும். பயங்கரமான சண்டைக்குப்பிறகு உடைந்த படகுகளுடன் ஒரு தனியார் தீவில் வந்து மாட்டிக்கொள்கிறீர்கள். கப்பலை உருவாக்குவது, புதிய டாஸ்க்குகளைச் செய்வது, நம் குழுக்களை நிர்வகிப்பது எனப் பல வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கிடையே காட்டுப் பன்றிகளிலிருந்து பல்வேறு மிருகங்கள்வரை நம்மை இரையாக்க அலையும். அவை நம்மைக் கடிக்கும் முன்னர், நாம் அவற்றை நம் உணவாக்கிட வேண்டும். கேமுக்குள் இருக்கும் PVP மோடில் இதே சர்வரில் விளையாடும் பிறரின் தீவுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் அவர்களின் பொருள்களைக் களவாடலாம். என்ன, அதே சமயத்தில் நம் கப்பலின் பொருள்களையும் யாராவது களவாடியிருப்பார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28

Day R Survival

யாரோ சிலரின் சதிச் செயலால் ரஷ்யா மொத்தமாக அழிந்துவிடுகிறது (எப்படியெல்லாம் கேமை அரசியலாக்கறாங்க ). பசியும், வன்முறையும், நோயும் ரஷ்யாவை ஒருசேர அழிக்கின்றன. யாருமற்ற வெளியில், சிதிலமடைந்த கட்டடங்களுக்குள் சென்று நமக்குத் தேவையான பொருள்களை எடுத்து வர வேண்டும். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய நகரங்களின் பெயர்களில் நாம் நடப்பதுதான் சற்று குழம்புமே தவிர கேம் ஜாலியாகத்தான் இருக்கிறது. மற்ற விளையாட்டுகளைப்போல கண்களைக் கூசச் செய்யும் அதிநவீன கிராபிக்ஸாக இல்லாமல், காமிக்ஸ் கதைகள் வரையப்படும் தாள்களைப் போல இந்த கேமை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த Day R Survival.

கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28
கேம்ஸ்டர்ஸ் - 28

Last Island of Survival: Unknown 15 Day

குறைந்தபட்சம் மொபைலில் இரண்டு ஜிபி அளவுக்கு இடம் இருந்தால் மட்டும் இந்த கேம் பக்கம் போகவும். குழுவாக இணைந்தும் நீங்கள் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்; அல்லது தனி டானாகவும் உருவெடுக்கலாம். எப்போது வேண்டும் என்றாலும், மிலிட்டரி வாகனங்களில் வந்து நம் இடத்தை எதிரிகள் துவம்சம் செய்யலாம் என்பதால் அதிக நேரம் இதில் நாம் செலவிட வேண்டியது அவசியம்.

‘தொடர்ச்சியாகப் பல நாள்கள் எல்லாம் என்னால் விளையாட முடியாது. ஆனால் அழிப்பது என்றால் ஜாலியாகச் செய்வேன்’ என்பவர்கள் விளையாடிப்பார்க்க வேண்டிய கேம் solar smash. இதுவொரு சிமுலேஷன் கேம். இதை கேம் எனச் சொல்ல முடியுமா என்றுகூடத் தெரியவில்லை. பூமியின் மாதிரி வடிவத்தை நம் கண் முன்னர் வைத்திருப்பார்கள். எரிகற்கள், லேசர்கள், அணு ஆயுதங்கள் என விதவிதமான ஆயுதங்கள் திரையின் வலப்புறம் இருக்கும். அவற்றை எடுத்து ஏவி பூமியை அழிக்கலாம். என்ன கண்ணராவி கேம்டா இது என நினைக்கிறீர்களா... நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், இந்த கேமை 50 கோடிப் பேர் விளையாடியிருக்கிறார்கள் என்கிறது கூகுள் பிளே ஸ்டோர். அதில் வந்த சமீபத்திய கமெண்ட் தான் இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. “என் 11 வயது மகனுக்கு இந்த கேம் மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் சில இயற்கைப் பேரழிவுகளை ஏன் சேர்க்கவில்லை என வருத்தப்படுகிறான். நீங்கள் ஏன் ராட்சத எரிமலை, ராட்சத சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களை எல்லாம் இதற்குள் சேர்க்கக்கூடாது” எனக் கேட்டிருக்கிறார் அவர்.

NFT-யில் ஒரு நொடியில் ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கலாம் என்கிறார்கள். ‘உலகை அழிக்க புதிய வெப்பன் எங்கடா’ எனத் தெலுங்குப் பட வில்லன் போல சிறுவர்களே கேட்கிறார்கள். எங்க சார் போய்க்கிட்டு இருக்கு இந்த உலகம்..?

- Downloading...