Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 29

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

ஸ்மார்ட்மொபைல்கள் வந்த பின்னர், கணினிகளில் பிளே ஸ்டேஷன் பாய்ஸைத் தவிர பிறர் பெரிதாக கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை

கணினியில் பல ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறக்கும் ஒரே கேம் என்றால் அது GTA தான். நாள்கணக்கில் காரை எடுத்துக்கொண்டு விர்ச்சுவலாக ஊரைச் சுற்றிக்கொண்டு இருக்கலாம். கணினியே கடுப்பாகி ஷட் டௌன் ஆகும் வரையெல்லாம் இந்த கேமை ஆடியவர்கள் உண்டு. உண்மையில் GTA கேம்களில் நாம் லயித்து விளையாடுவதே அமெரிக்காவின் கனவு வாழ்க்கையைத்தான். அதைப் பல இடங்களில் நக்கலும் செய்திருப்பார்கள். இந்தப் பார்சலைக் கொண்டு போய் அவர்கள் சொல்லும் இடத்தில் சொல்லும் நேரத்துக்குள் கொடுத்துவிட்டால் பணம் கொட்டோ கொட்டெனக் கொட்டும். நடன மங்கைகள், மதுப்பிரியர்களின் பார், உல்லாச மேடை, மிடுக்கான வீடு என எல்லாவற்றையும் நாம் விர்ச்சுவலாக வாங்கலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலேயே சீட் கோடுகளைப் பயன்படுத்தி காசை அள்ளலாம். வைஸ் சிட்டி, சான் ஆண்டிரியாஸ் என ஆடினாலும் தற்போதிருக்கும் 2K கிட்ஸுக்கு ஏற்ப GTA 6-ஐ வெளியிடவிருக்கிறது ராக்ஸ்டார் நிறுவனம். GTA சான் ஆண்டிரியாஸில்தான் முதல் முறையாக உடலைப் பேணும் வசதிகளையெல்லாம் இணைத்திருந்தார்கள். அதாவது குண்டான ஹீரோவை விர்ச்சுவலாக நாம் ஓட வைக்க வேண்டும். சில இடங்களுக்கு ஓடிச் சென்று ஸ்லிம்மாகலாம். அதேபோல் கேங் வார் போன்ற விஷயங்களும் அதில் உண்டு. GTA 6 எப்படியும் அடுத்த ஆண்டுதான் வரும் என்று சொல்லப்பட்டாலும் இந்தப் பழைய வசதிகளை சற்று பட்டி டிங்கரிங் பார்த்துப் புதிய பதிப்பில் சேர்க்க வேண்டும் என்பதே பலரின் ஆவல்.

கேம்ஸ்டர்ஸ் - 29
கேம்ஸ்டர்ஸ் - 29
கேம்ஸ்டர்ஸ் - 29

ஸ்மார்ட்மொபைல்கள் வந்த பின்னர், கணினிகளில் பிளே ஸ்டேஷன் பாய்ஸைத் தவிர பிறர் பெரிதாக கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே நமக்கு வாய்த்திருக்கும் பிரவுசர்களை வைத்து கேம் ஆடினாலும் கிளு கிளுவென்றுதான் இருக்கும் என்பது தனிக்கதை. அப்படியான சிக்கல்களில் இருந்து விடுபடவே ஒபேரா பிரவுசர் OperaGX என்னும் பெயரில் கேமிங் பிரவுசரை வெளியிட்டிருக்கிறார்கள். பிரவுசரை இன்ஸ்டால் செய்ததுமே, நாம் ஏதோவொரு கேமில் இருக்கும் உணர்வைக் கொடுத்துவிடுகிறார்கள். விண்டோஸ், ஆப்பிள், ஆண்டிராய்டு என எல்லா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். பிரவுசரில் இருக்கும் ரிலீஸ் காலண்டர் மூலம் அடுத்த எந்தந்த தினங்களில் எந்த விளையாட்டுகளை வெளியிடப்போகிறார்கள் என்கிற தகவல் உண்டு. அதேபோல், கேமர்களுக்கென பிரத்யேகமான செய்திகள் பெட்டியில், செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கணினியில் ரேமை சில பிரவுசர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அதையும் இதன் மூலம் கண்டறிந்து கேமுக்கென ரேம் யூசேஜை மாற்றியமைக்கலாம். வாட்ஸப், மெசேஞ்சர் சாட்டிங் வசதிகள்; VPN, விளம்பரங்களை நீக்குவது எனப் பல வசதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ட்ரை பண்ணிப் பாருங்க, ஒரே தமாஷா இருக்கும்.

பிப்ரவரி 2021-ல் அறிவிக்கப்பட்ட அடுத்த தலைமுறை Play Station VR2-ன் டிசைனை வெளியிட்டிருக்கிறது சோனி நிறுவனம். மார்க்கெட்டில் படுவேகமாக விற்றுக்கொண்டிருக்கும் Play Station 5-ஐப் போலவே இதுவும் வெள்ளை கறுப்பு மிக்ஸிங் நிறத்தில்தான் வெளிவரவிருக்கிறது. புதிதாக லென்ஸை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி தரப்பட்டிருக்கிறது. அதேபோல் முந்தைய வெர்ஷனைவிட எடை சற்றுக் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.4K HDR, 90/120Hz ஃப்ரேம் ரேட், 110 டிகிரி அளவுக்குப் பார்க்கும் வசதி எனப் பல புதிய வசதிகளும் இருக்கின்றன. என்ன வசதி இருக்கிறதோ இல்லையோ, இதாவது ஸ்டாக் இருக்குமா, அல்லது PS5 போல ஸ்டாக் இல்லாமல் போய்விடுமா என்பதே கேமர்களின் கவலை.

கேம்ஸ்டர்ஸ் - 29
கேம்ஸ்டர்ஸ் - 29
கேம்ஸ்டர்ஸ் - 29

Dungeon crawl

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது Dungeon crawl வகை விளையாட்டுகள். என்னடா இது வார்த்தை என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இதுவும் வழக்கம்போல நாம் தமிழில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைதான். ‘என்னப்பா ஒரே டஞ்சனா இருக்கு’ என யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா. அதுதான் Dungeon Crawl. அப்படியாப்பட்ட டஞ்சனான ஒரு இடத்தில் கேமின் நாயகனாக உருமாறி, சிலரை அழித்து, நமக்குத் தேவையானவற்றை எடுக்க வேண்டும். மான்ஸ்டர்களை அழிப்பது, புதிர்களுக்கான விடைகளைத் தேடுவது, புதையல் எடுப்பது எனப் பல வகைகளில் இந்த கேம் விளையாடப்படும். கணினி உதவியுடன் விளையாடப்பட்ட முதல் Dungeon crawl கேம் pedit5 தான். Dungeon hunter 5, Moonshades, Eternium எனப் பல விளையாட்டுகள் இந்த வகைமையின் கீழ் வரும். Dungeon crawl வகைமையில் இருக்கும் ANIMA விளையாட்டைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

நாம் சிறுவயதில் சில கேம்களை விளையாடி யிருப்போம். ஆனால், தற்போதைய கிராபிக்ஸுடன் ஒப்பிடுகையில் அந்த கேம்கள் ஏனோ ஆதாம் ஏவாள் காலத்து கிராபிக்ஸ் லெவலில் இருக்கும். இருந்தாலும் அந்த கேம்களின் மீது நமக்கு ஒரு பிணைப்பு இருக்கும். அதாவது கம்மியான கிராபிக்ஸில் இருக்கும் அந்த கேம்கள் தற்போதைய 2ஜிபி கேம்களைவிடச் சிறந்த அனுபவத்தைத் தரும். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ANIMA என்கிற விளையாட்டு அப்படியான ஒன்று. மொபைலின் வலது ஓரத்தில் நாம் செல்வதற்கான மேப் தரப்பட்டிருக்கிறது.

நமக்குக் கிடைக்கும் ஆயுதங்களை வைத்து, எதிரே வரும் எலும்புக்கூடு அரக்கர்களை காலி செய்ய வேண்டும். அதேபோல், ஒவ்வொரு போட்டியிலும் நாம் கண்டுபிடிக்க வேண்டிய பட்டியல் இருக்கும். அவற்றையும் எல்லா இடங்களிலும் சல்லடை போட்டுத் தேட வேண்டும். அதே சமயம், வில்லன்களின் சக்தி நம்மைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதற்கேற்றாற் போல அங்கும் இங்கும் ஓடி, மண்ணைத் தூவித்தான் நேரம் பார்த்து வீழ்த்த வேண்டும். இல்லையென்றால் ரீசெட் செய்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து ஆட வேண்டும். அடுத்தடுத்த லெவல்களை வென்றால், கத்தியுடன் சேர்த்துப் பிற ஆயுதங்களையும் பயன்படுத்தும் வண்ணம் நம் முதுகை செட் செய்துகொள்ளலாம். ஆயுதங்களை மாற்றலாம்; வெடிகளை வீசலாம். கேமின் இசையும் ஒரு விண்டேஜ் ஃபீல் கொடுக்க மறுப்பதில்லை.

வலிமை படம் பார்த்து அதே மாதிரி Z வடிவில் பைக்கில் பறக்கலாம் என நினைக்காதீர்கள். அது எந்த அளவிலும் நமக்கு நல்லதல்ல. அதே சமயம், பைக் ரேஸை விர்ச்சுவலாக ஆட நமக்கு ஆயிரம் வழிகள் உண்டு. கணினியில் விளையாட்டுகள் பிரபலமான காலத்திலிருந்தே நமக்குத் தெரிந்த பைக் விளையாட்டு என்றால் அது Roadrash தான். ரோடுரேஷ் விளையாட்டும் அவ்வப்போது அதன் அடுத்த அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. எனவே ஜாலியாக பைக் ரேஸ் ஆட இந்த விளையாட்டுகளை முயன்று பாருங்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 29
கேம்ஸ்டர்ஸ் - 29

Real Moto

11 விதமான பைக்குகள், 150க்கும் மேற்பட்ட சேலஞ்சுகள் என ஏக பில்டப்புடன் பைக் ரேஸ் விளையாட்டுகளில் முன்னிலை வகிப்பது ரியல் மோட்டோ கேம்தான். வியூபாயின்ட், கன்ட்ரோல்களையும் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

Trial Xtreme 4

சாதா சாலைகளுக்கு ரியல் மோட்டோ என்றால், வலிமை படத்தின் முதல் பாதியில் பறந்து பறந்து செல்வார்களே அது மாதிரியான சாலைகளுக்கு Trial Xtreme 4. கோக்குமாக்கான சாலைகள், நடு நடுவே தீச்சட்டிகள் என கொடூரமான சாலையில் வண்டியைக் கீழே போடாமல் ஓட்டுவதுதான் நமக்கான டாஸ்க். வலது, இடது, ஆக்ஸிலேட்டர், பிரேக் என எல்லா வசதிகளுடன் இருப்பதால், இந்த கேமை விரைவாக முடித்துவிடலாம் என எண்ணி விடவேண்டாம். விரைவாக முடிப்பதல்ல கேம், விழாமல் முடிப்பதே என்பதால் கொஞ்சம் சூதானமாக விளையாட வேண்டும். இல்லாவிட்டால் குப்புற விழுந்து கிடப்போம். தற்போது இந்த கேமில் அடுத்த வெர்ஷனான Trial Xtreme 4 remastered என்பதை சோதனை ஓட்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். 90 எக்ஸ்ட்ரீம் லெவல்கள், வித்தியாசமான 3டி கிராபிக்ஸ் எனக் கலக்கலாக வந்திருக்கிறது.

Clan Race

ஆண்டிராய்டில் இருக்கும் பைக் விளையாட்டுகளில் மிகவும் ஜாலியான விளையாட்டு Clan Race. கெவின்கேர் நிறுவனத்தில் ருச்சி ஊறுகாயுடன், சின்னி'ஸ் ஊறுகாயும் இருப்பதில்லையா அதைப்போலவே Trail Xtreme 4 கேமை உருவாக்கி ஹிட் அடித்த Deemedya INC நிறுவனம் உருவாக்கிய விளையாட்டுதான் Clan Race. ஆன்லைனில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பைக்கர்களுடன் நாம் இந்தப் போட்டியில் மோத முடியும். நண்பர்களுடன் இணைந்து நாமொரு Clan-ஐ உருவாக்கி, எதிர் கோஷ்டிகளுக்கு சவால் விடும் ஆப்ஷனும் உண்டு.

Death Moto 5

பெயரிலேயே கண்டுபிடித்திருப்பீர்கள். இது சற்று வன்முறை கூடிய பைக்கர் கேம். ரோடுரேஷ் கேமின் ரத்தம் தெறிக்கும் வெர்ஷன் இந்த கேம்.

- Downloading