
அதிரடி வியாழன் என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப கடந்த இரண்டு வாரங்களாக ஷூட்டிங், ஆக்ஷன் என அதிரடியாகப் பறந்துகொண்டிருக்கிறது
பேய் இருக்கோ இல்லையோ அது பத்தின பயம் இருக்குன்னு நாம பேய் பயத்துடன் வாழப் பழகிக்கொண்டிருக்க, ஹாலிவுட்டிலோ ஜோம்பிகளுடன் வாழலாம் வாருங்கள் என வித்தியாச ரூட்டைப் பிடித்தனர்.
200 ஆண்டுகளாக இலக்கியத்திலும், சினிமாவிலும் தனக்கெனத் தனி ரத்த சரித்திரம் படைத்துவருகின்றன ஜோம்பிகள். நம்மூரில் ஜோம்பிகளை இறக்குமதி செய்து தன் டிரேட்மார்க்கை அதில் முத்திரையாய்க் குத்தினார் ஜெயம் ரவி.
அருவருப்பான தோற்றம், மெதுநடை, விசித்திர ஒலிகள் என ஜோம்பிகளுக்கென்றொரு சாமுத்ரிகா லட்சணம் உண்டு. அதைக்கூட சமீபத்திய ஹாலிவுட் படங்களில் மாற்றி விட்டார்கள். ஜேக் ஸ்நைடரின் லேட்டஸ்ட் படமான Army of the Dead-ல் வரும் ஜோம்பிகளுக்கு விசேஷ சக்திகள் எல்லாம் உண்டு. அதென்ன மனிதர்கள் மட்டும்தான் ஜோம்பியாக வேண்டுமா என மிருகங்களையும் ஜோம்பியாக்கி அழகு பார்த்திருப்பார் ஸ்நைடர். அவுட் ஆஃப் தி டாப்பிக் போறோமோ...
அதிரடி வியாழன் என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப கடந்த இரண்டு வாரங்களாக ஷூட்டிங், ஆக்ஷன் என அதிரடியாகப் பறந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாரம் ஆக்ஷன் விளையாட்டுகளின் மற்றுமொரு உட்பிரிவான சர்வைவல் விளையாட்டுகள் பற்றிப் பார்ப்போம்.


பிக்பாஸ் முதல் அர்ஜுன் தலைமையில் வெளியாகவிருக்கும் சர்வைவர் தொடர் வரை தொலைக்காட்சிகளில் சர்வைவல் நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமேயில்லை. சர்வைவல் கேமிங்கைப் பொறுத்தவரையில் வீரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படும். அந்த இடத்துக்குள் அவர்களால் சர்வைவ் செய்ய வேண்டிய பொருள்களைக் காக்காக் கடி கடித்து கொஞ்சமே கொஞ்சமாய்க் கொடுத்திருப்பார்கள். பாதுகாப்பான வீடு, உணவு, கேமிங் வெற்றி போன்றவற்றுக்குப் பக்கத்துத் தெரு வரை செல்ல வேண்டும். ஆனால், அங்கு ஆபத்துகளைக் கொட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆபத்துகளை எல்லாம் கடந்து தாக்குப்பிடிப்பவர்களே சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்டாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சிங்கிள் பிளேயர் விளையாட்டுகளாக உருவான சர்வைவர் விளையாட்டுகளில் இப்போதெல்லாம் மல்ட்டிபிளேயர் ஆப்ஷன்கள் வந்துவிட்டன. ஹோமோ சேப்பியன்கள் என்றாலே குழு வீரர்கள் தானே. குழுவாகப் பிழைத்திருப்பது, பாதுகாப்பு அரண் அமைப்பது, கூட்டணி சேர்வது, எதிரிகளைத் தீர்மானிப்பது என சர்வைவல் கேம்களுக்கான பொதுவான இலக்கணம் இதுதான். சர்வைவல் கான்செப்ட்களை வைத்து கேமிங் உருவான காலம் தொட்டு பல விளையாட்டுகள் இருந்தாலும், சர்வைவல் ஹாரர் கேமாக கல்லா கட்டியதில் முக்கியமானது ஜப்பானின் Resident Evil. பின்னாள்களில் இது படமாகவும் எடுக்கப்பட்டது. 1992-ல் வெளியான மற்றுமொரு சர்வைவர் கேம் UnReal World. இப்போதும் இந்த கேமை சிலர் ஆடிவருகிறார்கள். 30 வருஷமா சர்வைவ் ஆகிட்டு இருக்காங்க ப்ரோ..!
சரி, இப்படியான சூப்பர் மேரியோ, காண்டிரா எனப் பழைய விளையாட்டுகளை விளையாட என்ன செய்ய வேண்டும்? ஹலோ... ஹலோ... கொசுவத்திச் சுருளுடன் மீண்டும் பால்ய காலத்துக்குச் சென்றுவிடாதீர்கள். நாஸ்டால்ஜியாக்களை வேறொரு எபிசோடில் பார்க்கலாம்.


சர்வைவல் விளையாட்டுகளில், தற்போது 10 கோடிக்கும் அதிகமான நபர்கள் விளையாடும் ஆண்டிராய்டு விளையாட்டுகளில் முக்கியமானது Last Day on Earth: Survival. 2027-ல் உலகம் அழிந்துவிட, இறந்துபோனவர்கள் ஜோம்பிகளாக மாறிவிடுகிறார்கள். மீதமிருப்பவர்கள்..? அட, நாமதான் பாஸ் அது! நமக்கு உலகில் ஒரு இடம் கொடுத்துவிடுவார்கள். அங்கு சிதிலமடைந்த ஒரு வீடு, மரங்கள், உணவுப்பொருள்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அவை ஒரு வேளைக்குக்கூடப் பத்தாது. இருக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பாரில்’ வீட்டைக் கட்டும் வைபவம் மட்டும் இங்கே. பிறகு வாகனம் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். நம் குடிசை இல்லாமல், பக்கத்துக் குடிசைகளுக்கும் செல்லலாம். ஓடிச் சென்றால் நம் எனர்ஜியில் சிலவற்றைப் பிடித்தம் செய்துகொள்வார்களோ என அஞ்சுபவர்கள், வைகோ போல் நடந்தும் செல்லலாம். அருகிலிருக்கும் இடங்களில் பொருள்களுடன், ஜோம்பிகளும் நமக்கு இலவசமாக வருவார்கள். ஸ்பெஷல் பவர் கொண்ட ஜோம்பிகளை வென்று நம் வீட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டால் நாம்தான் வின்னர்.


வாகனங்கள்
நம் வீட்டிற்கு அருகிலேயே உடைந்துபோன ஒரு பைக் இருக்கும். அதற்கான உதிரி பாகங்களை எல்லாம் கொண்டு வந்து ரெடி செய்தால், அதற்குப் பின் போக வர அந்த பைக்கையே நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப, பைக், ஹெலிகாப்டர், டிரக் என எல்லாமே ரெடி செய்யலாம்.
FAN VOICE
ஆரம்பத்தில் எதுவுமே இல்லாததால், வீட்டுக்கு பக்கத்தில் வரும் மானை மட்டும் வேட்டையாடி டைம்பாஸ் செய்தாலும், போகப் போக கேம் அட்டகாசமாக நகர்கிறது. என் நண்பன் ஒருவன் இரண்டாண்டுகளுக்கும் மேலாக விளையாடிக் கொண்டிருக்கிறான். வெவ்வேறு சீசன்கள், வித்தியாசமான இடங்கள் என தினமும் சில நிமிடங்கள் விளையாட ஏற்ற கேம் இது.
சண்டை செய்யணும்
ஜோம்பி அப்போகலிப்ஸ் உலகம் என்பதால், எந்த ரூபத்திலும் ஆபத்துகள் வரலாம். எனவே சண்டை செய்ய தயாராகக் காத்திருக்க வேண்டும்.


உயிர்
எல்லா விளையாட்டுக்கும் லைஃப் என்ற ஒன்றுண்டு. Last Day on Earth: Survival கேம் மாறுபட்டு நிற்பது அங்கேதான். நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்கலாம்; அதாவது மரணிக்கலாம். தோற்றவுடன், வீட்டில் நீங்கள் வைத்திருந்த பொருள்கள் மட்டும் உங்களுக்குச் சொந்தம். மற்றவை ஸ்வாஹா ஆகிவிடும்.
வீடு கட்டணும்
கத்தி, கடப்பாறை எனப் பல பொருள்களை நம்மால் நம் வீட்டினுள் உருவாக்க முடியும். எதிரிகளிடமிருந்து நம் பொருள்களையும் நம்மையும் பாதுகாக்க பாதுகாப்பான வீட்டை உருவாக்க வேண்டும். ஆனால், அதற்கு வெளியே செல்ல வேண்டும். Clash of Clans என்கிற சின்னப்புள்ள விளையாட்டு விளையாடியிருக்கிறீர்களா? அது உங்களுக்கு இந்த செக்மென்டில் உதவலாம்.


ரேடியோ
உங்கள் அறைக்குள் ஒரு ரேடியோவை உருவாக்க வேண்டும். (அதே பைக், அதே உதிரிபாகங்கள் கதைதான்). அதைத் தயார் செய்தபின், ‘மாமா நான் இங்க இருக்கேன்’ என தனித் தனி இடங்களில் இருக்கும் மனிதர்களுடன் கூட்டு சேர்ந்தும் எதிரிகளுடன் களமாடலாம்.
+
1. அட்டகாசமான கிராபிக்ஸ்
2. விளையாட்டில் சில இடங்களில் பணம் செலவு செய்ய வாய்ப்பு இருப்பதால், அதை முன்னரே பிளே ஸ்டோரில் சென்று டிஸேபிள் செய்யுமாறு வார்னிங் தருகிறார்கள். (பட், இந்த நேர்மை பிடிச்சிருக்கு!)
-
மலையாள சினிமாபோல ஆரம்ப ஸ்டேஜ்களைப் பொறுமையுடன் கடந்துவிட்டால், ஒரு அட்டகாசமான த்ரில்லராக இந்த கேம் நிச்சயம் இடம்பெறும்.