Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 30

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு கிரிக்கெட் கேம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான கேம்பிளானுடன் களம் இறங்கியது World cricket championship

ரஷ்யப் போரின் விளைவுகள் விளையாட்டுகளிலும் நேரடியாகப் பிரதிபலித்துவருகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக செஸ் விளையாட்டுகளில் கோலோச்சியது ரஷ்யர்கள்தான். சோவியத் யூனியன் காலத்து கேரி காஸ்பரோவ் தொடங்கி தற்போதைய இயன் நெபோநியாச்சி வரை ரஷ்யர்களின் ஆதிக்கம் என்பது எல்லோரும் அறிந்தது. இப்போதும் அதிக கிராண்ட் மாஸ்டர் வீரர்கள் இருக்கின்ற நாடு என்கிற பெருமை ரஷ்யாவுக்குத்தான் சொந்தம். ஆனால், எல்லாம் ஒரு முடிவில் மாறிவிட்டது. செஸ் போட்டிகளை நடத்தும் FIDE இனி ரஷ்யா, பெலாரஸ் நாடுகளில் போட்டிகள் இல்லை என அறிவித்திருக்கிறது. அதேபோல இந்த நாட்டின் வீரர்கள் தங்கள் தேசியக் கொடியை போட்டிகளின் போது பயன்படுத்த முடியாது. போருக்கு ஆதரவாகப் பேசிய இரண்டு ரஷ்ய வீரர்களின் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. FIDE-ன் தற்போதைய தலைவர் ஒரு ரஷ்யர் என்பதையும் இதில் கவனிக்க வேண்டியதிருக்கிறது. ஒலிம்பிக், FIFA-விலும் இதே கதிதான். ரியல் விளையாட்டுகளிலேயே இப்படியென்றால், ரீல் விளையாட்டுகள் மட்டும் சும்மா இருக்குமா என்ன? NHL 22, FIFA 22, FIFA Online, FIFA Mobile என விர்ச்சுவல் விளையாட்டுப் போட்டிகளின் பெரிய தலைக்கட்டு நிறுவனமான EA எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ், இனி எந்தவொரு கேமிலும் ரஷ்ய அணி இடம்பெறாது என அறிவித்திருக்கிறது. ஆப்பிள், ஃபேஸ்புக், யூடியூபைத் தொடர்ந்து EA-வும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

கேம்ஸ்டர்ஸ் - 30
கேம்ஸ்டர்ஸ் - 30

Cricket

இந்தத் தொடரில் என்று இறுதி அத்தியாயத்துக்கான நாள் வருகிறதோ, அன்று எழுத நினைத்த கேம்தான் கிரிக்கெட். இந்தத் தொடரில் இதற்கு முன்னர் Miniclip நிறுவனம் வெளியிட்ட Cricket league பற்றியும், ஹெய்டனை மாடலாகக் கொண்டு வெளியான haydos 360 பற்றிய அறிமுகங்களையும் எழுதியிருக்கிறோம். Early access நிலையிலேயே ஹெய்டோஸ் விளையாட்டில் இருந்த பிரச்னைகளும், அதன் கடினமான கேம் பிளானும் இன்றளவும் அதே நிலையில்தான் இருக்கின்றன. அதனாலேயே அந்த கேம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. Cricket league கேமைப் பொறுத்தவரை, அதுவொரு வைரல் கேமாக மாறிவருகிறது. ஒரு கேமுக்கான அதிகபட்ச நேரம் என்பது 5 நிமிடங்கள்தான். ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள்தானே என்றால், அதுதான் இல்லை. மிகவும் எளிதான வகையில் அந்த கேமை உருவாக்கியிருக்கிறார்கள். டென்னிஸ் கிளாஷ் டிசைனைப் போலவே இதுவும் போர்ட்ரேட் மோடு கேம் என்பதால், சட்டென ஆட முடிகிறது. ஒரு ஓவர், ஒரே ஓவர் என்பதால், இந்த முறை போனால் என்ன, அடுத்த முறை அடுத்த முறை என, போதும் போதும் என மூளை சொன்னாலும், 10 பூரியை ஒரே நேரத்தில் சாப்பிடுவதுபோல், ஒரு நாளின் பெரும் பகுதியை இந்த விளையாட்டு எடுத்துவிடுகிறது. இடைவேளைகளில் ஆட ஒரு சிறந்த கேமாக கிரிக்கெட் லீக் உருவெடுத்திருக்கிறது.

கணினியில் இணைய வசதிகூட இல்லாத காலத்தில் நண்பர்கள் உதவியுடன் சிடியில் ‘ரைட்’ செய்து வந்து EA sports கிரிக்கெட்டை விரல்கள் தேயத் தேய ஆடிய குழந்தைகளுக்குத்தான் தெரியும், கிரிக்கெட் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்பது. இன்னும் 40 வயதைக் கடந்த அங்கிள்ஸ்கூட EA Sports Cricket 2007 கணினியில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். 3 மணி நேரத்தில் முடிந்துவிடும் டி20 போட்டிகள் காலத்திலும், பல மணி நேரம் பொறுமையாக அமர்ந்து 07-ல் டெஸ்ட் போட்டிகள் ஆடிக்கொண்டிருப்பார்கள். எல்லா பிளேயர்களையும் 500 ரன்கள் எடுக்க வைப்பதை இலக்காக வைத்து ஆடிய காலங்கள் எல்லாம் உண்டு. எதிரணியில் விளையாடும் கணினியை 0-வுக்கு ஆட்டமிழக்கச் செய்யும் சூழ்ச்சிகளும் உண்டு. ஏனெனில் 07 வெறும் பெயர் அல்ல, எமோஷன். அதே காலகட்டத்தில்தான் டி20-களின் ஆதிக்கமும் கேமிங் உலகுக்குள் வர ஆரம்பித்தன. ஒரு ஓவர் போட்டிகள் ஃபேஸ்புக்கிலேயே ஆடும் லெவலுக்கு ஃபேஸ்புக்கும் கேமிங்கை வைத்துக் கல்லா கட்டியது. டச் ஸ்கிரீன் மொபைல்களில் பலரது ஃபேவரைட் ஸ்டிக் கிரிக்கெட்தான். கல்லி கிரிக்கெட், சச்சின் கிரிக்கெட், சென்னை கிரிக்கெட், கரீபியன் கிரிக்கெட், ஆஷஸ் லீக் எனப் பல பெயர்களில் கிரிக்கெட் கேம்கள் வந்தாலும், ஸ்டிக் கிரிக்கெட்டின் ‘மேக் இட் சிம்பிள்’ ஃபார்முலா நிறைய ரசிகர்களை அதற்குப் பெற்றுத்தந்தது. இதுதான் கேமா என்றால், `இவ்ளோதான் கேம், போய் ஆடு’ என்பதாக டோர்னமென்ட் மோடை நடத்தியது ஸ்டிக் கிரிக்கெட். இப்போது பிளே ஸ்டோரில் Cricket games எனத் தேடினால் ரியல் கிரிக்கெட்டும், வேர்ல்டு கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பும்தான் முன்னிலையில் இருப்பவை. இதில் பலரின் ஃபேவரைட் World Cricket championship தான். ரியல் கிரிக்கெட்டில் சஞ்சய் மஞ்ரேக்கர்தான் கமென்டரி என்பதாலேயே வேர்ல்டு கிரிக்கெட் பக்கம் வந்ததும் ஒரு காரணம்.

கேம்ஸ்டர்ஸ் - 30
கேம்ஸ்டர்ஸ் - 30
கேம்ஸ்டர்ஸ் - 30

World Cricket Championship

ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு கிரிக்கெட் கேம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான கேம்பிளானுடன் களம் இறங்கியது World cricket championship. 2011-ம் ஆண்டு வெளியான முதல் வெர்ஷனே செம ஹிட். டைமிங் எல்லாம் பெரிதாகத் தேவையில்லை. இடது கையில் பேட்டைப் பிடித்து அடித்தாலும் இப்போது அதில் சிக்ஸ் போகும். காரணம், 2011-ல் வெளியான கேமை இப்போதிருக்கும் மொபைல் ஹார்டுவேரில் ஆடுவதால் அவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால், அப்போது ஹேட்ரிக் சிக்ஸருக்கு எல்லாம் ஸ்கெட்ச் போட்டு அடிக்க வேண்டும்.

2015-ம் ஆண்டு அதன் அடுத்த வெர்சனை வெளியிட்டார்கள். ஆன்லைன், ஆப்லைன், லோக்கல் ரைவல்ஸ் என நிறைய வசதிகளை அதில் இணைத்திருந்தார்கள். 18 சர்வதேச அணிகள், 10 உள்ளூர் அணிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட மைதானங்கள் என கலர்ஃபுல்லாக வெளிவந்தது WCC2. 2015, 2016, 2017 என மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக பிளே ஸ்டோரின் சிறந்த கேம் பட்டியலில் இடம்பிடித்தது WCC2.

கேம்ஸ்டர்ஸ் - 30
கேம்ஸ்டர்ஸ் - 30
கேம்ஸ்டர்ஸ் - 30

World Cricket Championship 3

மூன்றாவது வெர்ஷன் இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் வந்திருக்கிறது. ஸ்டேடியம், மோஷன் கேப்சர் டெக்னாலஜி பேட்டிங் ஷாட்கள், ஃபீல்டிங், பௌலிங் விதம் என மிரட்டலாக இருக்கிறது இந்த மூன்றாவது வெர்ஷன்.

Thats a six a massive One; Its one bounce and a four என முதல் வெர்ஷனில் ஒரே வசனத்தை லூப்பில் பேசிக்கொண்டிருந்த கமென்ட்ரி, இரண்டாவது வெர்ஷனில் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கை நோக்கி வந்தது. தற்போது வந்திருக்கும் மூன்றாவது வெர்ஷனிலோ எல்லா மொழிகளிலும் கமென்ட்ரி உண்டு. தமிழ் கமென்ட்ரியில் அபிநவ் முகுந்த் பேசிக்கொண்டிருப்பார். ஆங்கில கமென்ட்ரி மேத்யூ ஹெய்டன். இந்திக்கு ஆகாஷ் சோப்ரா.

கிட்டத்தட்ட ஒரு ஜிபி அளவுக்கு கேமின் அளவு அதிகமாகிவிட்டாலும், கிராபிக்ஸ், விளையாடும் அனுபவம் போன்றவற்றுக்காகச் சில செயலிகளைத் தியாகம் செய்துவிட்டுக்கூட இந்த கேமை இன்ஸ்டால் செய்யலாம். World T20, ஆசிய கோப்பை, ஆஷஸ், NPL, ODI தொடர், மூன்று அணிகள் பங்கேற்கும் தொடர், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எல்லாமே இந்தச் செயலிக்குள் உண்டு. பெண்கள் கிரிக்கெட்டும் உண்டு.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் கிராபிக்ஸ் அட்டகாசமாய் வந்திருக்கிறது.

Online Rivals

லேண்டுஸ்கேப் மோடில் கிரிக்கெட் லீக் கேம் போல இதிலும் விளையாட முடியும். ஆளுக்கு இரண்டு ஓவர். டாஸ் எல்லாம் உண்டு. ஆன்லைனில் வரும் எதிரிகளுடன் விளையாட வேண்டும்.

local Rivals

இணையமே வேண்டாம். நிம்மதியாய் நண்பர்களுடன் விளையாட வேண்டுமா. அதற்கும் வழிவகைகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். 2ஜிபி அளவுக்கான ரேம் இந்த மோடுக்குத் தேவை என்பதால், தயார் நிலையில் மொபைலை வைத்துக்கொண்டு நண்பர்களை இணைக்கவும். வீட்டில் இருக்கும் wifi ஹாட்ஸ்பாட்டில் எல்லோருடைய மொபைலையும் கேமுக்குள் கனெக்ட் செய்து வீட்டுக்குள்ளேயே ஆடிக்கொள்ளலாம். ஆம், இந்த மோடுக்கு வழக்கமான இணையம் தேவையில்லை. அதனால் இந்த மோடில் விளையாட நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

Batting Rivals

ஆன்லைனில் இருக்கும் ஐந்து வீரர்களுக்குள் நடக்கும் போட்டி இது. குறிப்பிட்ட பந்துகளுக்குள் யார் அதிகமாக ரன்கள் எடுக்கிறார்களோ அவர்கள்தான் வின்னர். இந்த கேமை ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இலவசமாக ஆட முடியும் என்பதால் ஜாக்கிரதையாக ஆடுங்கள். அடுத்த வாய்ப்புக்கு யாராவது நமக்கு இன்வைட் அனுப்ப வேண்டும். அல்லது விளம்பரம் பார்க்கலாம். இல்லாவிட்டால் பணம் கட்டலாம்.

HOT EVENTS

சர்வதேசப் போட்டிகள் நடக்கும் தினங்களில், நாமும் அதே போட்டியை நாம் தேர்வு செய்த அணியுடன் ஆட முடியும். நிஜப் போட்டியில் நம் அணி தோற்றிருந்தாலும் இதில் வென்று பழி தீர்த்துக்கொள்ளலாம்.

Career Mode

இந்த வெர்ஷனில் புதிதாக இணைந்திருப்பது கேரியர் மோடுதான். உள்ளூர்ப் போட்டிகள், லீக் போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் என ஒவ்வொரு படியாக நாம் மேலேறிச் செல்ல முடியும். 400 விதமான போட்டிகள் இருப்பதால், அடுத்த வெர்ஷனே வந்தாலும், இதை விளையாடி முடித்திருக்க மாட்டோம் என்பதுதான் இதிலிருக்கும் இன்னொரு சிறப்பம்சம். நமக்கான அணி, நமக்கான கோச், மேனேஜர், வீரர்கள் என எல்லாவற்றையும் நாம் ஒவ்வொரு கல்லாக உருவாக்க வேண்டும். 18 வீரர்களைச் சேர்த்தால் நம்மால் இதில் விளையாட முடியும். 799 பிளேட்டினம் பாயின்ட்டுகள் எடுத்தால் கேரியர் மோடிலும் நம்மால் விளையாட முடியும். பிளேட்டினம் பாயின்ட் இல்லாதவர்கள் பணம் கட்ட வேண்டும்.

உங்கள் திறமைக்கு ஏற்ப உங்களுக்கு vulnerable முதல் godly வரை பல பேட்ஜ்கள் கொடுக்கப்படும்.

- கேம் ஓவர்