
இணைய வேலைக்கு நடுவே உங்கள் கூகுள் க்ரோமில், இணையம் துண்டிக்கப்பட்டவுடன், No internet என்கிற செய்தியுடன் ஒரு டைனோசர் பளிச்சிடும்.
ஓய்வு நேரத்தைக் கழிக்க அல்லது பொழுதுபோக்க இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் நிறைய செயலிகள் உண்டு. ஆனால், அந்த எல்லாச் செயலிகளும் தொடர்ந்து முதலீடு செய்யும் ஒரு துறை வீடியோ கேம்தான். கொரோனா புண்ணியத்தில் மேனேஜருடனான மீட்டிங்களுக்காக அபரிமித வளர்ச்சி அடைந்த ஒரு நிறுவனம் ஜூம். தற்போது ஜூமிலும் ரம்மி ஆட முடியும். மீட்டிங் ஷெட்யூல் செய்துவிட்டு, ‘மேனேஜர் வரவில்லையா, வாங்களேன் ஒரு கை போடலாம்’ என மீட்டிங்கில் இருப்பவர்களை வைத்தே போக்கர் ஆட வைக்கிறது ஜூம். போக்கருடன் இன்னும் சில இன்ஸ்டன்ட் விளையாட்டுகளையும் இணைத்திருக்கிறார்கள். ‘விளையாட்டுல என்னப்பா இன்ஸ்டன்ட்’ என்கிறீர்களா? இந்த விளையாட்டுகளுக்காக நீங்கள் எதையும் புதிதாக டவுன்லோடு செய்யத் தேவையில்லை. வீடியோக்களின் சொர்க்கபுரியான நெட்பிளிக்ஸும், படங்களுக்கு இடையே இளைப்பாற வீடியோ கேம்களை இணைக்கவிருக்கிறார். ஃபேஸ்புக்கிலும், கூகுளிலும் நம்மையே அறியாமல் சில நிமிடங்கள் கேம்களுக்குள் மூழ்கிவிடுவோம். அவ்வளவு ஏன், விகடன் செயலியில்கூட கட்டுரைகளைப் படித்துக்கொண்டே, இடதுபக்கம் இருக்கும் பட்டன்களை அழுத்தி நீங்கள் இன்ஸ்டன்ட் கேம்கள் ஆட முடியும்.

இணைய வேலைக்கு நடுவே உங்கள் கூகுள் க்ரோமில், இணையம் துண்டிக்கப்பட்டவுடன், No internet என்கிற செய்தியுடன் ஒரு டைனோசர் பளிச்சிடும். ஏரோ கீக்களை மட்டும் வைத்து அந்த டைனோசரில் ஒரு ரேஸிங் கேமை ஆட முடியும். நன்றாக விளையாடிக்கொண்டிருந்தும் இணையம் மீண்டும் வந்துவிட்டால் இந்த கேம் மறைந்துவிடும். ‘கேம் போச்சே’ என வருத்தம் வேண்டாம். chrome://dino என க்ரோம் அட்ரஸ் பாரில் தட்டினால், இணையம் இருந்தாலும், இணையம் இல்லை என்கிற போலியான தகவலுடன் இதை ஆட முடியும்.

மூளையில் உண்டாகும் எண்ணங்களுக்கு அபார சக்தியுண்டு. மிகவும் பிடித்தவொரு விஷயம் சில நிமிடங்களில் பிடிக்காமல் போகலாம். அதிலும் இக்கால இளைஞர்களுக்கு ஒவ்வாமை எல்லாம் ஒரு அப்டேட்டில் வந்துவிடுகிறது. 2018-ல் AMONG US என்கிற கேம் உருவான நாள் முதல் இணையத்தில் பயங்கர ஹிட். தற்போது அந்த கேமில் புதிய நிறங்களுடன் ஒரு அப்டேட் விட, ‘எப்படியிருந்த கேம் இப்படியாகிடுச்சு’ எனப் புலம்புகிறார்கள் கேமர்கள். AMONG US விளையாடும் ஏழாவது படிக்கும் நவீன் என்கிற சிறுவனிடம் கேட்டால், “புது கலர் சிலது Add பண்ணியிருக்காங்க ப்ரோ. அதெல்லாம் பலருக்குப் பிடிக்கல. அதே மாதிரி, CHAT பண்றது இப்ப ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றார். மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பைக் கடினப்படுத்தியதே இந்த கேமிலிருந்து பல இளைஞர்களை வெளியே தள்ளியிருக்கிறது.
Racing Game
முதல் மாதத்தை ஆக்ஷனுக்கு ஒதுக்கிவிட்டதால், இந்த மாதத்தில் ரேஸிங் கேம்களை நோக்கி ‘வ்ரூம்’ எனப் பறப்போம். ரேஸிங் கேம்ஸ் என்றாலே காரையும் பைக்கையும் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு பட்டன் அமுக்குவது மட்டும் அல்ல. பெரிய மால்களில் இன்றளவும், ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு கார்களையும், ஹேண்ட் பாரைப் பிடித்துக்கொண்டு பைக்குகளையும் விரட்டும் சிறார்களை நாம் பார்க்க முடியும். தற்போதிருக்கும் கார் கேம்களுக்கான ஆதி என்பது 1960-களில் வெளியான speedway 1969 தான். வண்ணமயமான கிராபிக்ஸ், பல வண்ணங்களில் கார்கள் என அதற்கு முன்பு வெளியான ரேஸிங் கேம்களை டாப் கியரில் ஓவர்டேக் செய்தது Speedway. டைட்டோ, அட்டாரி, சீகா எனப் பெருநிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு ரேஸிங் கேம்களை வெளியிட்டன. 1977-ல் வெளியான அட்டாரியின் Super Bug முந்தைய விளையாட்டுகளைப் போல் அல்லாமல் எல்லாத் திசையிலும் பறந்தது. எதிர்வரும் தடைகளை மீறி ஒரு வண்டை இயக்கிச் செல்ல வேண்டும். ஆயில் தீர்ந்து போனதென்றால் ஆயுளும் முடிந்தது என அர்த்தம். அடுத்ததாக இந்த வண்டை மையமாக வைத்து Fire Truck வெளியிட்டது அட்டாரி.
2டி, 3டி என ஆரம்பித்து ரேஸிங் விளையாட்டுகள் பல்வேறு பரிமாணங்களை அடைந்துவிட்டது. அதே போல், ரேஸிங் என்றாலே பைக், கார் மட்டும் அல்ல, தடைகளைத் தகர்த்து விரைந்து செல்லும் யாவுமே ரேஸர்கள்தான்.
+ கிராபிக்ஸ் & விஷுவல்ஸ்
- கார்களைச் சேகரிப்பது கடினமாக இருக்கிறது.
Asphalt 9: Legends
Gameloft SE
Racing
4.5

Asphalt 9: Legends
உங்கள் மொபைலில் ரேம் சிறப்பாக இருக்கிறதா; எப்போதும் சூடாகாமல் சில்லென்று இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கு விமர்சகர்கள் முதலில் பரிசோதித்துப் பார்ப்பது Asphalt கார் விளையாட்டுகளைத்தான். Asphalt 8 விளையாட்டே போதும் போதும் என்கிற அளவுக்கு ஹிட் அடிக்க, Asphalt 9: Legends என அடுத்த மாடலை இறக்கி சொல்லியடித்தது Gameloft நிறுவனம். Gameloft நிறுவனம் பல விளையாட்டுகளை வாடகைக்கு விட்டிருந்தாலும், Asphalt தான் பலரின் டாப் ஃபேவரைட். 2013-ம் ஆண்டிலிருந்து 8 விளையாடிக்கொண்டிருந்தவர்கள் தற்போது மொத்தமாய் 9 லெஜெண்ட்ஸ் ஆடிவருகிறார்கள். Asphalt 7: Heat-ல் இருந்த nitro Shockwave-ஐ மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

TouchDrive
இந்த வசதியை இதில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். Tilt to Steer என்கிற வசதியை வைத்து மொபைலை ஸ்டீயரிங்காக பாவித்து வளைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த TouchDrive ஒரு வரப்பிரசாதம். ஒரு ஸ்வைப்பில் வலது, இடது என காரின் லேனை மாற்றிவிடமுடியும். நீங்கள் எதையும் அழுத்தாமல் இருந்தாலே ஆக்ஸிலேட்டரை அழுந்தப் பிடித்து நம்மை முன்னேறச் செய்யும் கார்களை மேலும் அதிவேகத்தில் இயக்க Nitro-வை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட போட்டிக்கான Flag குறைவு என்றால், TouchDrive பயன்படுத்தலாம். ஏனெனில் TouchDrive அதை எளிதாக சாத்தியப்படுத்திவிடும். ஆனால், கடினமான போட்டிகளுக்கு பட்டன் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.

கேரியர் மோடு
அவர்கள் வைக்கும் சவால்களை வென்றால், அடுத்த ரேஸுக்குச் செல்ல முடியும். அப்படியே பல சீசன்களில் நீங்கள் மூழ்கிப்போகலாம். ஒரு சராசரியான D ரேங்க் காரில் ஆரம்பிக்கும் உங்கள் பயணத்தை வெற்றிப்பாதையில் நீங்கள் ஓட்டினால், விஜய் மல்லையா வீட்டில் நிற்கும் கார்கள் அளவுக்கு கேரேஜை நிரப்ப முடியும்.
தினசரி மோடு
‘வெள்ளிக்கிழமை ஆடுங்க, S ரேங்க் கார்களை வெல்லுங்க’, ‘வியாழக்கிழமை ஆடுங்க, A ரேங்க் கார்களை வெல்லுங்க’ என தினமும், கேமை க்ளிக் செய்ய வைக்க இதில் சில போட்டிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்.
கிராபிக்ஸ்
Asphalt 9 கேமின் சிறப்பம்சமே அதன் கிராபிக்ஸ்தான். ஒவ்வொரு காரும் அதன் டீட்டெய்லிங்கில் பட்டாசாக இருக்கிறது. கார் பறக்கும் தருணங்கள், விழுந்து நொறுங்கும் தருணங்கள் என ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு தத்ரூபமாய் இருக்கிறது. வெவ்வேறு வானிலைகளைப் பதிவு செய்யும் விதங்களிலும் அசத்தியிருக்கிறது Gameloft குழு.
- Downloading