Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 6

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

தனி நபராக உருண்டுகொண்டிருந்த விளையாட்டில், போட்டிக்கு மூன்று பேரை நுழைத்து, போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள்.

ஆன்லைனோ ஆப்லைனோ, கேம்களின் மேல் ஆர்வம் எழக் காரணமே அவற்றிலிருக்கும் புதிர்கள்தான். கேமர்களின் சொர்க்கபுரியான ஜப்பானில் டோரு ஹஷிமோட்டோவின் கடையைக் கண்டுபிடிப்பதுகூட ஒருவித சுவாரஸ்யமான விளையாட்டுதான். ‘குறிப்பிட்ட இடத்திலிருந்து 20 அடிகள் நடக்க வேண்டும்’ போன்ற குறிப்புகள் மட்டும் இந்த டோக்கியோ கஃபே குறித்து இணையத்தில் சிக்கும். ஆனால், அவற்றை வைத்து மட்டும் இந்தக் கடையைக் கண்டுபிடித்துவிட முடியாது.

“விளையாட்டுகளில் வெற்றியை நோக்கி நகர, மறைந்திருக்கும் எதிரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். வெறுமனே இதுதான் இடம் எனச் சொல்ல மாட்டார்கள்” என சஸ்பென்ஸ் டெம்ப்ளேட்டுடன் ஆறு ஆண்டுகளாகக் கடையை நடத்திவந்திருக்கிறார் ஹஷிமோட்டோ. மேட்டூர் அணையில் நீர் குறைந்ததும், வெளியே தெரியும் நந்தியைப்போல, கொரோனா நெருக்கடியால் தற்போது அவரது கடையின் முகவரியை வெளிப்படையாக வெளியிட்டி ருக்கிறார். Nintendo நிறுவனத்தில் பணியாற்றிய ஹஷிமோட்டோவின் கடையின் பெயர் 84. World 8, Level 4 என்கிற இறுதி அத்தியாயத்தின் அடிப் படையில் இதை நிறுவியிருக்கிறார். ‘ஏதே, இறுதி அத்தியாயமா’ என யோசிப்பவர்களுக்கு இந்தத் தகவல்... சூப்பர் மேரியோ விளையாட்டின் கடைசி எபிசோடின் பெயர் இதுதான். 99 இன் 1 என வீடியோ கேம் கேஸட்டுகளை வாங்கிவந்து, அதிலிருக்கும் விளையாட்டுகளை சலிக்க சலிக்க விளையாடிய காலம் என ஒன்று உண்டு. அந்த ரசிகர்களுக்கு சூப்பர் மேரியோவின் அருமை புரியும்.

கேம்ஸ்டர்ஸ் - 6

ஹஷிமோட்டோ தன் கடையில் நாஸ்டால்ஜியாவைக் கிளறும் பழைய விளையாட்டுகளின் பொம்மைகள், வித்தியாசமான லைட்டிங் எனப் புதுமையாக அலங்கரித்திருக்கிறார். ஐந்து டேபிள்கள் கொண்ட கடையில் நமக்கான டேபிளை 90 நிமிடங்களுக்கு ரிசர்வ் செய்ய கட்ட வேண்டிய தொகை 5,000 ரூபாய் என்கிறார் ஹஷிமோட்டோ. நிறுவனத்தின் பழைய அரிய பொக்கிஷங்கள் கடையில் இருப்பதால், கூட்டம் அம்முகிறது என்கிறார்கள் ஜப்பானியர்கள்.

கில்லர் சுடோகு போட்டிக்கு பலர் சரியான பதிலை இ-மெயிலில் அனுப்பியிருந்தீர்கள். இனியும் அவ்வப்போது இப்படியான புதிர்களுடன் உங்களின் பேனாவுக்கும் மூளைக்கும் வேலை வைக்கக் காத்திருக்கிறோம். தயாராகுங்கள்..!

கேம்ஸ்டர்ஸ் - 6

Racing Game

‘பிரவுசிங் சென்டரில் கேம் விளையாடலாம், ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாய்’ என ஆரம்பித்த காலத்தில், கணினிக்குப் பெரிதாகத் தொந்தரவு வைக்காமல் வெளியான விளையாட்டுகள் என்றால் Road rash, DAVE, Prince of Persia போன்றவைதான். ஏரோ கீக்களை மட்டுமே வைத்து Road rash விளையாட்டில் பைக்கை ஓட்ட முடியும். அவ்வப்போது கவுண்டமணி ஸ்டைலில் எட்டி உதைக்க மட்டும் சில கீக்களை மனப்பாடம் செய்ய வேண்டும். மற்றபடி ஏரோக்களை அழுத்திக்கொண்டே இருந்தால் போதுமானது. உலகெங்கும், மால்களில் இருக்கும் பெரிய அளவிலான பைக் கன்சோல்களில் இன்னும் பைக் விளை யாட்டுகள் முன்னிலை வகிக்கின்றன. பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு அதை இருபக்கமும், `சாய்ந்து சாய்ந்து’ என ராஜா டோனில் சாய்த்தால், சாலையில் சீறிப் பாயலாம். மொபைலில் பட்டன்கள் இருந்தவரைகூட பைக் கேம்கள் கொடிகட்டிப் பறந்தன. ஆனால், டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட்போன் என மொபைல் ஹை டெக்காக மாறியதும் முதலில் மொபைலை விட்டுச் சென்றவை பைக் கேம்கள்தான். மொபைலையே ஸ்டியரிங்காக பாவித்து, அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பி வளைத்துச் செல்லும் கார் கேம்களுக்கு மத்தியில் பைக் கேம்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிளே ஸ்டோர்களின் டாப் 20 ரேஸிங் கேம்களில் இருப்பது என்னவோ ஒரேயொரு பைக் கேம்தான். ‘அப்படியெனில் ரேஸிங் கேம்கள் என்றாலே கார்கள்தானா’ என்கிற கேள்விக்கு மீண்டும் சரித்திரத்தில் சற்று கொசுவர்த்திச் சுருளைப் பற்ற வைக்க வேண்டியதிருக்கிறது.

கேம்ஸ்டர்ஸ் - 6
கேம்ஸ்டர்ஸ் - 6

ரேஸிங் கேம்களில் 3டியின் வருகை மிகவும் முக்கியமானது. மூவுருளி தானியங்கி டைப்பில் இருக்கும் குட்டி கார்களை இயக்கும் Mario Kart 64 தொடங்கி பல்வேறு கேம்கள் 1990களில் வெளியாகின. தற்போதிருக்கும் கிராபிக்ஸ்களுடன் போட்டி போடும் அளவுக்கு வெளியான கேம் என்றால் 97-ல் வெளியான Gran Turismo தான். ரேஸிங் உலகின் ‘16 வயதினிலே’ இந்த Gran Turismo. கிராபிக்ஸ், சவுண்ட் டிராக், கண்ட்ரோல், வித்தியாசமான கார்கள் என எல்லாவற்றிலும் டிக் மார்க் அடித்தது. ஐந்து ஆண்டுகள் இழைத்து இழைத்து உருவான கேம், விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. 2013-ம் ஆண்டு வரையில் 11 கோடி சி.டி-க்கள் விற்று சாதனை படைத்தது Gran Turismo.

கடந்த வாரம் நாம் பார்த்த Asphalt கேமின் ஆகச்சிறந்த போட்டியாளர் என்றால், Need for Speed தான். Electronic Arts நிறுவனத்தின் NFS அதன் முப்பதாவது ஆண்டின் வெற்றிவிழாவை நோக்கி ‘வ்ரூம்’ என விரைந்துகொண்டிருக்கிறது. PS1, PC என ஆரம்பித்த NFS தற்போது PS4, PC, ஆண்டிராய்டு, ஆப்பிள் எனச் சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் மொபைல்கள் ஸ்மார்ட் ஆவதற்கு முன்பு, கணினிகளில் மட்டுமே கேம் என இருந்த காலத்தில் EA-வின் கிரிக்கெட்டும், NFS-ம் தான் கேமர்களுக்கான நேரக்கடத்தி. Asphalt, NFS என எல்லாமே பெரிய அளவு மொபைலின் இடத்தைப் பிடித்து வைத்துக்கொள்கிறது என எண்ணுபவர்கள் EA-வின் real racing 3 கேமில் பயணம் செய்யலாம். இல்லை, கடப்பாறையை முழுங்கினாலும், கேஷுவலாக இருக்கும் மொபைல் உங்களுடையது என்றால் CSR Racing 2 கேமை டவுன்லோடு செய்யலாம். ரேஸ் என்றால் வேகம்தான் என முஷ்டி முறுக்கிக்கொண்டிருந்தபோது, வித்தியாசமானதொரு ரூட்டைப் பிடித்தது பின்லாந்து நிறுவனமான பிங்கர்சாஃப்ட். இயற்பியலைக் கலந்த கார் ரேஸை உருவாக்கி அசத்தினார் அதன் நிறுவனரான டோனி ஃபிங்கரூஸ். ‘கல்லும் முள்ளும் டயருக்கு மெத்தை எனப் பயணிக்க வேண்டும்; எரிபொருள் தீரக்கூடாது; நேரத்துக்குள் செல்ல வேண்டும்; உடன் வருபவர்களை முந்த வேண்டும்’ என ஓராயிரம் கட்டளைகளை ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார்கள். அடுத்தடுத்த கட்டங்களில் இன்னும் போட்டிகளும், சாலைகளும் கடுமையாக இருக்கும். Hill Climb Racing கேமே சக்கைப்போடு போட்டிக்கொண்டிருக்க, அடுத்த சீக்குவலான Hill CLimb Racing 2-வை வெளியிட்டது பிங்கர்சாஃப்ட். சாதா ஊத்தப்பமாக இருந்த முதல் வெர்ஷனில், மெல்லிய சாரல்போல வீடுகள், மலைகள், காடுகள் சேர்த்து மசாலா ஊத்தப்பமாக அப்கிரேடு செய்ததிலேயே பலருக்குப் பிடித்துப்போனது. இரண்டு வெர்ஷன்களையும் சேர்த்து டவுன்லோடு செய்யப்பட்ட எண்ணிக்கை நம் இந்திய மக்கள் தொகையைத் தாண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

கேம்ஸ்டர்ஸ் - 6

வெறுமனே, தனி நபராக உருண்டுகொண்டிருந்த விளையாட்டில், போட்டிக்கு மூன்று பேரை நுழைத்து, போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடு என்றால் குப்புற கரப்பான்பூச்சி போல் கவிழ்ந்துவிடுவோம். மெதுவாகச் சென்றால் பின்னால் வருபவன் முந்திவிடுவான் என சோதிக்கறாய்ங்களே நம்மள எனச் செல்லும் ஒவ்வொரு ரவுண்டும், மூளைக்கும் கைகளுக்கும் இணைத்து வேலை கொடுப்பதில் கில்லாடி. ஆன்லைன் எனில் கப் மோடு, ஆப்லைன் எனில் அட்வென்சர் மோடு என இரண்டு விதமாக கேமை ஆட முடியும்.

- Downloading...

+ ரேஸிங் மோடு இயற்பியல் விதிகள்

- வாகனங்களில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருப்பது.