
செப்டம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்குயிட் கேம்தான் சமீபத்திய வைரல்
கடந்த திங்களன்று, உலகமே ஸ்தம்பித்துவிட்டது. ஆறு மணி நேரம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் என மார்க் சக்கர்பெர்கின் குடும்பம் மொத்தமாய் இயங்க மறுத்தது. ‘நெட்டில்தான் ஓட்டை’ என சர்வீஸ் ப்ரொவைடர்களை சிலர் திட்டிக்கொண்டிருக்க, ப்யூஸ் பிடுங்கப்பட்டது ஃபேஸ்புக் அலுவலகத்தில் என சில நிமிடங்களில் தெரிய வந்தது. இந்த ஆறு மணி நேரத்தில், பைத்தியம் பிடித்த வெட்டுக்கிளிபோல் என்ன செய்வதெனத் தெரியாமல், டெலிகிராம், சிக்னல் எனப் பல செயலிகளுக்கு மக்கள் பறந்துகொண்டிருந்தார்கள் (அதென்ன பைத்தியம் பிடித்த வெட்டுக்கிளி என்கிறீர்களா? இந்தக் கட்டுரையை எழுதும் போது, ஒருவர் இதைச் சொல்லிக்கொண்டு சென்றாரா, ‘அட, நல்லாருக்கே’ என இணைத்துவிட்டேன்). அந்தச் சில மணி நேரத்தில் 7 கோடிப் பேர் டெலிகிராமில் இணைந்ததாக டெலிகிராம் நிறுவனர் அதிகாரபூர்வமாகவே அறிவித்தார். ஃபேஸ்புக் போனதற்கும், கேமிங்கிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? முக்கால்வாசி விளையாட்டுகளில் பொறுமையாக வேலை மெனக்கெட்டு யாரும் சைன் அப் எல்லாம் செய்வதில்லை. பேஸிக்கலி சோம்பேறி என்பதால், சைன் அப் வித் கூகுள், ஃபேஸ்புக் என்றுதான் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி மொத்தமாக புகைந்தால், விளையாடிய கேம் அனைத்தும் காலியாகிவிடும். பட்ட காலிலே படும் என்பதுபோல், ஃபேஸ்புக் சிக்கல் முடிந்த சில நாள்களில், அடுத்த சோதனையாய் வந்து அமைந்தது ட்விட்ச். லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங்குகளுக்கு கேமர்கள் பெரிதும் நம்பியது ட்விட்சைத்தான். அதிலும் ஓட்டை விழுந்திருக்கிறது. சோர்ஸ் கோடுகள், பயனர்களின் வங்கிக் கணக்குகள், பயனர் விவரங்கள் எனப் பல்வேறு விஷயங்களை ஹேக்கர்கள் களவாடியிருக்கிறார்கள் என்கி றார்கள். கேம் விளையாடுவதா வேண்டாமா என்கிற நிலைக்கு நம்மைத் தள்ளுவதே ஹேக்கர்களின் வாடிக்கையாகிவிட்டது. ‘சூதானமா இருங்கடா அப்பரசெண்டிகளா’ என ஃபேஸ்புக்கையும், அமே சானையும் கேட்டுக்கொள்வோம். ஆம், ட்விட்ச்சின் ஓனர் அமேசான்.

செப்டம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்குயிட் கேம்தான் சமீபத்திய வைரல். சிறுவயதில் நாம் விளையாடிய விளையாட்டுகளை நினைவுபடுத்திப் பல்வேறு கட்டங்களைத் தாண்ட வேண்டும். ‘வென்றால் பணம் இல்லையேல் பிணம்’ என்கிற பீதியைக் கிளப்பும் கான்செப்ட்டைத் திரைக் கதையாக்கியிருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து விளையாடுவதை மையமாகக் கொண்ட முதல் தொடர் அல்ல இது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘அலைஸ் இன் பார்டர்லேண்’டும் கிட்டத்தட்ட இதே கதைதான். ஒவ்வொரு போட்டியிலும் வென்றவுடன் வீரர்களுக்கு விசா கொடுக்கப்படும். இந்த விசாக்களை வைத்து அந்த உலகில் நம் வாழ்வை நீட்டித்துக் கொள்ள முடியும் . புதிய போட்டிகளில் பங்கெடுத்துத் தோற்றாலோ அல்லது பங்கெடுக்காமல் டிமிக்கி கொடுத்துக் காலம் கடத்தினாலோ, சிவப்பு நிற லேசர் ஒன்று நம் தலையைப் பதம் பார்த்துவிடும். ‘ஸ்குயிட் கேம்ஸ்’ கொரியன் என்றால், ‘அலைஸ் இன் பார்டர்லேண்டு’ ஜப்பான். 1979-ம் ஆண்டு வெளியான ஸ்டீபன் கிங்கின் நாவலான ‘தி லாங் வாக்’கூட ஒருவகை விளையாட்டுதான். அவர் உருவாக்கிய உலகத்தில் இளைஞர்கள், நெடுந்தூரம் நடக்க வேண்டும். நான்கு மைலுக்குக் குறைவான வேகத்தில் நடந்தால், ராணுவ வீரர்கள் அவர்களைச் சுட்டுவிடுவார்கள்.

இத்தகைய பெரும்பாலான விளையாட்டுகள் டீனேஜர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. அலைஸ் இன் பார்டர்லேண்டில் வெல்பவனும் ஒரு டீனேஜர்தான். டீனேஜர்களை மையப்படுத்தி வெளியான மற்றுமொரு வித்தியாசத் தொடர் 3%. உலகின் 97% மக்கள் வாழத் தகுதியற்ற இடங்களுக்குள் தள்ளப்பட, 3% மக்களுக்கு மட்டும் நல்லதொரு வாய்ப்பை வழங்க முடிவு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ, பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டும். பிரேசில், அமெரிக்கா, ஜப்பான், கொரியா என எல்லா நாடுகளும் சொல்வது ஒன்றுதான். ‘கேமிங்கை வச்சு கதை சொல்லுங்க பாஸ், ஹிட் அடிக்கலாம்’ என்பதே. மை டியர் கோலிவுட் இயக்குநர்களே..!

Gangstar
கேம்லாஃப்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியான கேங்க்ஸ்டர் சீரிஸ் விளையாட்டுகளைத்தான் இந்த வாரம் பார்க்கவிருக்கிறோம். gangstar Rio:City of Saints 599 ரூபாய் கட்டணம் என்பதால், அந்தப் பக்கம் நாம் செல்லத் தேவையில்லை. மேலும் அது 2012-ம் ஆண்டு வெளியான கேம். அதன் அடுத்த கட்ட வெளியீடுகளான Gangstar Vegas, Gangstar: New Orleans பக்கம் செல்வோம். கணினியில் Grand Theft Auto, அதாங்க GTA விளையாடிய அனைவருக்கும் இந்த கேம் மிக எளிதானது.
நமக்கான ஒரு உலகம். அதைச் சுற்றி நடக்கும் கதை. அவ்வப்போது சின்னச் சின்ன மிஷன், `வடசென்னை’ பட பாணியில் சென்சாராகாத வசவுச் சொற்கள் என ஒரு உலகில் வாழ்ந்துவிட்டு வருவதுதான் இந்த கேம்களுக்கான ஒன்லைன். அதனால் வீட்டில் விளையாடும்போது, ஹெட்செட் மாட்டிக்கொள்வது கிட்னிக்கு நல்லது. GTAவை கணினியில் விளையாடும்போது, கேமில் வரும் மொக்கையான ரேடியோவை ஆஃப் செய்துவிட்டு, நமக்குப் பிடித்த ஹிப் ஹாப் ஆதி பாடல்களைக்கூட ஒலிக்க விடலாம். GTA விளையாடிய நாங்கள் ஏன், Gangstar சீரிஸ் விளையாட்டுகளை மொபைலில் ஆட வேண்டும்? GTA விளையாட்டுகளே ஆண்டிராய்டில் இருக்கிறதே என்பது உங்கள் கேள்வியாயின், அந்த கேம்களையும் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆதலால் Gangstar செய்வீர் #AGS

Gangstar Vegas
சண்டை வீரரான ஜேசன் மலோனியை ஒரு போட்டியில் தோற்கச் சொல்கிறார் மாஃபியா டானான ஃபிராங் வெலியானோ. நான்காவது ரவுண்டில் ஜேசன் தோற்பதற்கு முன்பே, எதிராளி வீழ்ந்துவிடுகிறார். அடுத்து என்ன? அதேதான். டான் கோபம் தலைக்கேறி ஜேசன் மலோனியைத் துரத்துகிறார். துப்பாக்கிகள் முழங்க சண்டைகள், கார் சேஸிங்குகள், சின்ன மிஷன்கள் என லாஸ் வேகாஸ் சுற்றி நடக்கிறது ஒரு யுத்தம். GTAவைப் போலவே போலீஸ் காரைத் திருடி ஓட்டலாம். அங்கிருந்து தாவிக் குதித்து பைக்கில் பறக்கலாம் என விளையாடக்கூடிய ஒரு கேம். ‘கதை கேளு’ மோடில் அடுத்தடுத்த மிஷன்களை ஆடிக்கொண்டே செல்லலாம்.
எந்த மிஷனும் விளையாடப் பிடிக்க வில்லையா? இருக்கவே இருக்கிறது ஊருக்குள்ளேயே ஜாலியாகச் சுற்றும் விளையாட்டுகள். போலீஸின் வட்டத்துக்குள் இருந்து வெளியேறினால் எஸ்கேப். படகும்கூட ஓட்டலாம் ப்ரோ. வித்தியாசமான உடைகள், துப்பாக்கிகள், வாகனங்கள் என, போரடித்தால் இந்த கேமில் ஒரு ரவுண்டு வரலாம்.

Gangstar : New Orleans open world
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நடக்கும் போட்டியில் பைக்கர் மாஃபியாக்கள், குரூர காவல் அதிகாரிகளுக்கு மத்தியில் உங்களுக்கு டானாகும் ஒரு வாய்ப்பு வருகிறது. வேகாஸைப் போலவே, இதிலும் ஸ்டோரி மோடுகள் உண்டு. உங்களுக்குப் பிடித்தமான இடத்தில் நியூ ஆர்லியன்ஸுக்கு மிக மிக அருகில் ஒரு வீட்டை வாங்கலாம். சாம்ராஜ்யத்தை அமைக்கலாம். தீவுகளை வாங்கிப் போடலாம்; வாகனங்களை கேரேஜில் அடுக்கலாம்; சுருக்கமாகச் சொல்வதானால் நித்தி போல், உங்களுக்கென ஓர் உலகத்தை அமைக்கலாம். ஆனால், எதிரிகள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதிலிருந்து தப்பித்து ‘நானே எனக்கு ராஜா’ என மார்தட்ட வேண்டும். புதிதாக இந்த கேமில் கேங்ஸ்டர் வெர்சஸ் கேங்ஸ்டர் மோடையும் இணைத் திருக்கிறார்கள்.

இரண்டு விளையாட்டுகளிலும் பொதுவான சில அம்சங்கள் உண்டு. வன்முறை சற்று தூக்கல், வசவுச் சொற்களும் அதிகம். கிராபிக்ஸ் தற்போதைய விளையாட்டுகள் அளவுக்கு இருக்காது. ஆனால், இரண்டும் போர் அடிக்காது என்பது மட்டும் நெசம்.
- Downloading...