Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 1

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

கேம் விளையாடுபவர்களை இந்த சமுதாயம் எப்படி உதாசீனப்படுத்துகிறது தெரியுமா உறவுகளே..?

ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா பார்த்தீர்களா? இருபதாண்டுகளுக்கு முன் வெளியான Dragon Quest, Kingdom Hearts, Sonic the Hedgehog, final Fantasy எனப் பல விளையாட்டுகளின் வீடியோ கேம் இசை ஒலிக்கப்பட்டது. Mario, Pokemon எல்லாம் மிஸ்ஸானதற்கான காரணத்தை வேறொரு எபிசோடில் பார்க்கலாம்.

ஜப்பானிய கலாசாரத்தில் முக்கியமானது கேமிங். Nintendo, Sony PlayStation, Sega, Square Enix, Capcom, Bandai Namco என ஜப்பானின் கேமிங் தொழிற்சாலை உலகம் பெரிது. ஜப்பான், அமெரிக்கா, சீனா என கேம்களின் தொழிற்சாலைகள் ஒரு பக்கம், உலகில் 50% கேமர்கள் ஆசிய-பசிபிக் நாடுகளில்தான் இருக்கிறார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 1

உலகப் பொழுதுபோக்கு வர்த்தகத்தில் 50%க்கும் மேல், கேமிங்தான் ஆட்டிப்படைக்கிறது. ஆனாலும் கேம் விளையாடுபவர்களை இந்த சமுதாயம் எப்படி உதாசீனப்படுத்துகிறது தெரியுமா உறவுகளே..? கிரெடிட் கார்டு கிட்னிக்குக் கேடு என்பதுபோல் ஆழப் பதிந்த இன்னொரு வாக்கியம், 'வீடியோ கேம் மனிதனைச் சோம்பேறியாக்கும்' என்பது. வீடியோ கேம் விளையாடுபவர்கள் உடல் உழைப்பு இல்லாமல், கெட்டித் தயிர்போல் மந்தமாக இருப்பார்கள் என்பது. 'வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்' பழமொழிக்குக் கீழ் எழுதி வைக்க வேண்டிய பொன் வரிகள் இவை. கொரோனா காலங்களில் PUBG, COD போன்ற விளையாட்டுகள்தான் வேலை நேர மேனேஜர் கடுப்புகளை எல்லாம் தீர்க்க, நண்பர்களுடன் ஜாலிலோவாகப் பேச என டைம்பாஸ் செய்ய வைத்தன. (இதற்கான ஆய்வறிக்கைகளின் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!). கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தினால், சேமிக்க அதைவிடச் சிறந்த வங்கிப் பரிவர்த்தனை இல்லை என்பதே யதார்த்தம். அதாவது, நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்.

ஆரம்பக்கால கேம்களில் மூன்று Life தான். கேம் ஓவர் படத்தில் நடிகை டாப்ஸிக்குக்கூட மூன்று Life தான் இருக்கும். ஆனால், கிரேக்க ஹைடிரா நாகத்தின் ஒன்பது தலைகள்போல இப்போதெல்லாம் கேமிங்குகளில் எண்ணிலடங்காத் தலைகள் உண்டு. சரி, இதையும் தாண்டி கேமிங்கில் முக்கியமான மூன்று விதிகள் உள்ளன.

கேம்ஸ்டர்ஸ் - 1

* நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடாதீர்கள் (வார இறுதியில் கொஞ்சம் அதிக நேரம் ஆடலாம்).

* கேமுக்குள் இருக்கும் அவதார்களை, தண்ணீர் ஊற்றி வளர்ப்பதெல்லாம் தேவைதான் என்றாலும், ஒரே கேமைக் கட்டிக்கொண்டு அழாதீர்கள். பல கேம்களில் save and move on உண்டு. ஒரு மாதத்துக்கு மேல் ஒரு கேமை ஆடாதீர்கள். சமயங்களில் சில போட்டிகளில் save ஆகாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

* எந்த கேமையும் காசு கட்டி விளையாடாதீர்கள். In app purchases செய்யவே செய்யாதீர்கள் (நீங்களாக சம்பாதிக்கும் வரைக்கும்).

Loading...

கேம்ஸ்டர்ஸ் - 1

Shooter Games

கேமிங் தொழிற்சாலையைப் பொறுத்தவரையில் ஷூட்டிங் விளையாட்டுகள் அளவுக்குப் பணத்தை வாரிக் கொடுத்தது எதுவும் இல்லை. அடிதடியை சரவெடியாய்ப் போட்டுத் தாக்கும் ஆக்‌ஷன் விளையாட்டுகளுக்கு எப்போதுமே கேமர்களிடம் மவுஸ், ஜாய்ஸ்டிக் எல்லாமே அதிகம் (சாரி, நடிகர் பார்த்திபன் டோன் போயிடுச்சு. மன்னிச்சூ!). உருவகேலிகளையெல்லாம் விடுத்துப் பார்த்தால் சின்ன வாண்டுகளைக்கூட WWE பிக் ஷோக்களாக உருமாற்றி மனநிறைவைத் தரக்கூடியவை ஆக்‌ஷன் விளையாட்டுகள்தான். நாம் வேறு யாரோ ஒருவரின் உடலுக்குள் புகுந்து, அவராகவே கற்பனை செய்துகொண்டு விண்வெளி சாகசம், ஜோம்பீஸ் அட்டாக் எனப் பலவற்றில் சுட்டுத் தீர்த்து வெற்றிக் களிப்பை நாட்டுவது ஒரு புதுவித அனுபவம் தரும். விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் துப்பாக்கி தவறானது என நெருப்பைப் பற்ற வைப்பது; விஸ்வரூபம் படத்தில் நாசர் ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை எல்லாம் காமெடி என நக்கலடிப்பது என இக்கால இளைஞர்களுக்குத் துப்பாக்கி வாசத்தை முகரச் செய்தது ஷூட்டிங் விளையாட்டுகளே! ‘ஷூட்டிங் கேம்களைத் தொடர்ந்து விளையாடுபவர்கள்தான் துப்பாக்கியைத் தோள்களில் ஏந்தி டெரரஸிட் ஆகிறார்கள்' என வாட்ஸ்அப் வசந்தியக்காக்கள் கிளப்பிவிடுவதையெல்லாம் கடந்துதான், அதை இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஷூட்டிங் கேம் விளையாடுபவர்களில் பலர் லட்சுமி வெடி வெடிக்கவே பீதியாவார்கள் என்பதுதான் நிதர்சனம் (I know that feel bro!). உண்மையில் ஷூட்டிங் கேம்களில் அதீதமான கற்பனைத்திறன் உண்டாகும். மைக்ரோ நொடிகளில் இயங்கும் வேகம் வசப்படும். இல்லாவிட்டால், சட்டென வந்து பொட்டெனப் போட்டுவிடுவார்கள் எதிரிகள். ஆம், அது ரத்த பூமி.

90களின் முற்பகுதியில்... சரி, எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா எப்படி? கேமுக்குள்ள போவோம்.

கேம்ஸ்டர்ஸ் - 1

Call of Duty

அதிவேக இணைய வசதி சூழ் கொரோனா உலகத்தில் நண்பர்களுடன் மாலை நேரத்தில் ஜாலியாகப் பேசிக்கொண்டே ஆடும் விளையாட்டுகளில் முக்கியமானது Call of Duty. ஆண்டிராய்டில் தற்போது Call of Duty Mobile சக்கைப்போடு போட்டாலும், Call of Duty-களின் ஆரம்பக்காலம் என்பது அதிரிபுதிரியானது. மொபைலின் வருகைக்கு முன்னரே கணினியிலும், XBOX-ஸிலும் டானுக்கு எல்லாம் டானாக இருந்தது COD தான். COD வர்ற வரைக்கும் புரோட்டாவை வைத்துக்கொண்டா இருப்பார்கள்? அந்த கேமின் டிசைனில் பல்வேறு கேம்கள் ஆண்டிராய்டிலும், IOS-ஸிலும் கொட்டத் தொடங்கின. பெண் பார்க்கும் படலத்தில் பார்த்தும் பாராமல் மணமகனைப் பார்க்கும் லாகவத்தில்தான், கடந்த இருபது ஆண்டுகளாக எதிரிகளைப் போட்டுத் தள்ளிவருகிறார்கள் COD பாய்ஸ். COD-யின் கேம் மோடுகள்...

BATTLE ROYALE

100 பேர் வரை கூட்டம் சேர்ந்த பின், ஆகாயத்தில் இருந்து குதிப்பார்கள். நீங்கள் சிங்கிள், கப்பிள், நான்கு பேர் என உங்கள் குழுவை நிர்வகித்துக்கொள்ளலாம். கால ஓட்டத்தில் இடம் சுருங்கிக்கொண்டே வர, உங்கள் குழுவில் ஒருவர் மீதமிருந்தாலும், நீங்கள்தான் அந்த நாளுக்கான வெற்றியாளர். (ஆம், PUBG-யின் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் இதுதான்).

RANKED MATCH

மாதத்துக்கொரு சீசன். நீங்கள் வெல்ல வெல்ல ரேங்க் அதிகரிக்கும். அதற்கேற்ப போட்டிகள் கடினமாகும். உங்கள் லெவலுக்கேற்ற எதிரிகள் என உங்களுக்கு எதிரியாகும் தகுதியுடைய நபர்கள் மட்டுமே போட்டியாளர்களாக வருவார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 1

MULTIPLAYER

நம்மிடம் அடி வாங்கவே அளவெடுத்துச் செய்ததுபோல், ஒரு குழுவினர் இருப்பார்கள் அல்லவா? அவர்களுடன் விளையாடுவதுதான் மல்ட்டிபிளேயர். நம் நல்ல நேரத்துக்கு, டம்மி பிளேயர்கள் எதிரிகளாக வந்தால், ஜாலியாக பாயிட்ன்ஸ் தேற்றலாம். இதற்குள்ளாகவே private மோடும் உண்டு. அலுவலகத் துக்குள்ளாகவே ஒரு குழுவைத் தயார் செய்து, அவர்களுடன் மட்டுமே சுட்டு சுட்டு விளையாடலாம்.

FAN VOICE

முனியாண்டி விலாஸ் தட்டு மாதிரி COD-யில் நிறைய game modes இருந்தாலும், என்னோட fav Fast 5v5 team deathmatch. 50 பாயின்டுகளை எந்த டீம் ஃபர்ஸ்ட் எடுக்குதோ, அந்த டீம்தான் வின்னர். லைஃப்ஸ் பத்தின பயம் எல்லாம் இதுல சுத்தமா கிடையாது. ஆனா, நாம அவுட் ஆகிட்டா எதிர் டீமுக்கு ஒரு பாயின்ட் வந்துடும்.

விட்ட கதைகளின் தொட்ட கதைகள் அடுத்த வாரம்...

- Downloading...