கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வீடியோ மீட்டிங் வெறித்தனங்கள்!

வீடியோ மீட்டிங் வெறித்தனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடியோ மீட்டிங் வெறித்தனங்கள்!

வீடியோ கான்பரன்ஸ்ல ஒன் பை ஒன்னாகத்தான் பேசிட்டு வருவாங்க.

கொரானா தந்த கொடைகளில் ஒன்று வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னா... அந்த வீட்டில் வேலை தந்த பரிசு வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்குகள்! வீடியோ கான்பரன்ஸ் என்பதை என்னவோ வீடியோ கான்பிடன்ஸ்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு, வடிவேலு கல்யாண மண்டபத்தில் பாம் செட் பண்ற மாதிரி ரொம்ப சீரியஸா முகத்தை வெச்சுக்கிட்டு ரகசியமாப் பேசுவாங்க!

சில பேருக்கு நார்மலாவே முரட்டு முகமா இருக்கும்... இதுல வீடியோ கான்பரன்ஸ் க்ளோஸ் அப்ல, “எனக்கா வேலை சொல்ற?”ன்னு மிரட்டுற மாதிரியே முகத்தை வெச்சுக்கிட்டுப் பேசுவாங்க! சிலருக்கு வீடியோ கான்பரன்ஸ் பேசப்பழகுறதுக்கே கொஞ்ச நாளாகும். மைக் மியூட்ல இருக்குறது தெரியாமலேயே மணிக்கணக்கா பேசுவாங்க! உதடு மட்டும்தான் அசையும், வார்த்தை வராது! வெறும் காத்துதான் சார் வருதுன்னு சொன்னாலும் கண்டுக்காம சொற்பொழிவாற்றிக்கிட்டே இருப்பாங்க இந்த க்யூட் ம்யூட்டன்கள்!

வீடியோ கான்ஃபரன்ஸோட தொடக்கமே, சென்னை டு மதுரை லாங் டிராவலில், விக்ரவாண்டி மோட்டலில் டீ குடிக்கிறதுக்காக பஸ்ஸ நிறுத்துறதை நினைவுபடுத்தும். வழக்கமா மோட்டலை விட்டு வண்டியை எடுக்கும்போது, “எல்லாரும் வந்தாச்சா?”ன்னு ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு கண்டக்டர் செக் பண்ணுவாப்ல. அதே மாதிரிதான் லீடரும் “நம்ம டீம்ல எல்லாரும் வந்தாச்சா?”ன்னு கேட்டுக்கிட்டே ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு வீடியோ கான்பரன்ஸ்ல இருக்குறவங்களை எண்ணுவார்!

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

ஒவ்வொருத்தரா நிதானமா வீடியோவில் கனெக்ட் ஆவாங்க... எப்படியும் ரெண்டு பேராவது மிஸ்ஸாவாங்க... யாராவது அவங்களுக்கு கால் பண்ணுங்கன்னு சொல்லிட்டு கடுப்போட வெயிட் பண்ணுவார்! “சாரி சார், நெட் கனெக்ட் ஆகல!”, “சாரி சார், இவ்ளோ நேரம் பவர் கட்”னு ஆளுக்கு ஒரு காரணத்தோட அவங்க ஆஜரானதும் ஒருவழியா மீட்டிங் ஸ்டார்ட் ஆகும்போது... மீட்டிங் முடியற நேரமே ஆகிருக்கும்!

வீடியோல பேசுவதில் இருக்கும் பெரிய காமெடியே நெட் கனெக்‌ஷன் ஸ்லோவா இருக்குறதுதான்! ப்ளாக் & வொயிட் டிவில படம் தெரியிறதுக்காக ஆன்டெனாவைத் தூக்கிட்டு அலைஞ்ச தலைமுறையப்போல, இப்போ வீடியோ கனெக்ட் ஆகுறதுக்காக, வீட்டுக்கு வெளில, மொட்டை மாடில, தண்ணி டேங்க் மேலன்னுல்லாம் ஏறிட்டிருப்பாங்க! அதேபோல, மீட்டிங் சீரியஸா போயிட்டு இருக்குறப்ப, புராஜெக்ட் லீடரே கனெக்‌ஷன் கட்டாகிக் காணாமப் போயிடுவார்! அடுத்து நாலஞ்சு தடவை உள்ளே வெளியேன்னு மங்காத்தா ஆடிட்டு வந்து செட்டில் ஆகுற வரைக்கும் எல்லாரும் வெயிட்டிங்ல வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்க!

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

வீடியோ கான்பரன்ஸ் அட்டென்ட் பண்ற அத்தனை பேரும் டிஷர்ட் மட்டும்தான் போட்டி ருப்பாங்க என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் சில பேரு ஒரே டீஷர்ட்டத்தான் தொடர்ந்து போட்டுட்டு இருப்பாங்கங்கறது எத்தனை பேருக்குத் தெரியும்? இனிமே கவனிச்சுப்பாருங்க! ஆண்களுக் காவது டீஷர்ட்டோட முடிஞ்சது... ஆனால் பொண்ணுங்களுக்கு அப்படி முடியாதே. அதிலும், ஃபாரின் கிளையன்ட்கூட பேசற நிறுவனங்களில், வீடியோவுக்காகவே வழக்கம்போல தலைவாரி, கிளிப் போட்டு, லிப்ஸ்டிக், பவுடர்னு போட்டு ரெடியாகணும்!

எல்லா வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்லயும், எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணணும்னு நினைக்கிற ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். அவன் சொல்ற குட்மார்னிங்கே தோரணையா இருக்கும். அன்னைக்கு ஒரு நாள் பண்ற வேலையைக்கூட என்னவோ 20 மாடி பில்டிங்கை ஒரே நாளில் கட்டி முடிக்கிற மாதிரி, ஓவர் பில்டப்போட ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் என்னென்ன பண்ணப்போறேன்னு டீட்டெய்லா பேசுவான்! அரைக் கிலோ மீட்டர் தூரம் போறதுக்கு, பத்துக் கிலோ மீட்டர் தூரம் சுத்திக்காட்டிட்டு இறக்கிவிடுற ஆட்டோ டிரைவர் நம்ம மனக்கண்ணில் வந்துட்டுப் போவார்!

இதுக்கு நேரெதிரா இன்னொருத்தன் இருப்பான். அவனிடம் எந்த ப்ளானும் இருக்காது. அப்பதான் தூங்கி எந்திரிச்சு, பல்லுகூட வெளக்காம டிஷர்ட்ட மாட்டிட்டு உக்கார்ந்து பேசுவான். “இன்னைக்கு என்ன பண்ணப் போறீங்க?”ன்னு புராஜெக்ட் லீடர் கேட்டால், “ஏகப்பட்ட வேலை இருக்கு சார்... ஆனால் எக்ஸாக்ட்டா எதுவும் டிசைட் பண்ணல சார்... டிசைட் பண்ணிட்டுச் சொல்றேன் சார்!”னு சொல்வான். இதே டயலாக்கைத்தான் தினமும் சொல்லுவான். பேச்சு மாறவே மாட்டான்!

எல்லா டீம்லயும் ஒரு பாஷா பாய் இருப்பான். அவன் பேசுறப்ப மட்டும் அவனோட குரலைவிட அவன் செல்லமா வளர்க்குற நாயோட குரல்தான் டாமினேட் பண்ணும்! பேச்சுக்கு இடையிலேயே “டேய் கொஞ்சம் அமைதியா இரு”ன்னு அவனோட செல்ல நாயைச் சொல்றப்ப, உண்மைலேயே நாயைத்தான் சொல்றானான்னு எதிர்ல பேசுறவங்களுக்கு டவுட்டாவே இருக்கும்!

வீட்டுல பூனை வளர்க்குற பொண்ணுங்க, சீன் போடுறதுக்காகவே பூனைய மடியில போட்டுக்கிட்டுதான் வீடியோல பேசுவாங்க... கேட்டால், எப்பவும் என் மடியிலதான் தூங்கும், விளையாடும், உச்சா போகும்னு சீன் போடுவாங்க! வால்பசங்க இருக்குற வீடாக இருந்தால், வீடியோ கான்பரன்ஸ்ல பேசுறப்ப பேக்ரவுண்ட்ல சண்டைக்காட்சிகளைப் பார்க்கலாம்! வீட்ல அவ்ளோ களேபரம் நடந்தாலும் பின்னால திரும்பி கூலா பசங்கள கண்டிப்பார். ரொம்ப நல்ல அப்பாவாம்! வீடியோ கான்பரன்ஸ் முடிஞ்ச பிறகு அடி பின்னிடுவார்.

வீடியோ கான்பரன்ஸ்ல ஒன் பை ஒன்னாகத்தான் பேசிட்டு வருவாங்க. அப்டியிருக்குறப்ப, ஏற்கெனவே பேசி முடிச்சவங்க வீடியோவை க்ளோஸ் பண்ணிட்டு என்னத்தையாவது வாய்க்குள்ள மொக்கத் தொடங்கியிருப்பாங்க. வேற ஒருத்தர்ட்ட பேசறப்ப திடீர்னு ஏற்கெனவே பேசி முடிச்சவங்ககிட்டயும் புராஜெக்ட் லீடர் டவுட் கேட்பார். இதை எதிர்பார்க்காதவங்க, என்ன கேட்டார்னுகூடத் தெரியாம, பேசவும் முடியாம, குளறுவாங்க. பதற்றத்துல புரை ஏறிடும். இதப்பாத்துட்டு மனைவி பதற்றமா வந்து, சாப்பிட்டுட்டுப் பேசக்கூடாதா, இப்டியா சாப்பிட்டுக்கிட்டே பேசுவீங்கன்னு அவங்களையே அறியாமல் போட்டுக்குடுப்பாங்க!

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

சிட்டியில இப்பல்லாம் தண்ணி வண்டி மாதிரி, காய்கறி விக்கிற வண்டி தெருத்தெருவா குறிப்பிட்ட நேரத்துலதான் வரும். அந்த நேரத்துலயே வாங்கினால்தான் உண்டு. வீடியோ கான்பரன்ஸ் நேரத்துல காய்கறி வண்டி வந்துட்டா சில பேர் பாதியிலேயே விட்டுட்டு காய்கறி வாங்கக் கிளம்பிடுவாங்க. புராஜெக்ட் லீடரைக்கூட சமாளிச்சுடலாம், மனைவியைச் சமாளிக்க முடியாதுன்னு அவங்களுக்குத்தான் தெரியும்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வீடியோ கான்பரன்ஸுக்கும் பொருந்தும். சில அலுவலகங்களில் எதற்கெடுத்தாலும் மாற்றி மாற்றி வீடியோ கான்பரன்ஸில் பேசிக்கிட்டே இருப்பாங்க. இதனால வீட்டில் இருக்குறவங்களுக்கு, “சத்தம் போடாதிங்க!”, “டிவிய சத்தமா வைக்காதிங்க!”ன்னு சத்தமா ஆர்டர் போட்டுக்கிட்டே இருப்பாங்க! மொபைலில் கேம்ஸ் விளையாடணும்னு பையன் துடிச்சுக் கிட்டிருப்பான்... ஆனால் அந்த மொபைலில் அப்பா மணிக்கணக்கா வீடியோ கான்பரன்ஸிலேயே இருப்பார். அவன் கேட்டுக்கேட்டு வெறுத்தே போயிடுவான். மனைவியேகூட, `என்ன இது, எப்பப்பார்த்தாலும் பேசிட்டே இருந்தால் எப்பதான் உங்க ஆபீஸ்ல வேலை பார்ப்பாங்க’ன்னு அப்பாவி தோரணையில் நக்கலடிப்பாங்க. மொத்தத்துல வொர்க் ஃப்ரம் ஹோம்னு இருந்தாலும், க்வாரன்டீன் மாதிரி தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையைத்தான் இவங்க வாழ்ந்துகிட்டு இருப்பாங்க!