சமூகம்
Published:Updated:

ஆரோக்கிய சேது பாதுகாப்பானதா?

ஆரோக்கிய சேது பாதுகாப்பானதா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கிய சேது பாதுகாப்பானதா?

ஜி.பி.எஸ் மற்றும் ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் இந்தச் செயலி, ஒருவர் எங்கெங்கெல்லாம் செல்கிறார் எனக் கண்காணிக்கும்.

ஆரோக்கிய சேது, கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாக மத்திய அரசு முன்வைக்கும் செயலி. இதைப்பற்றி சிறு அறிமுகம்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ‘கான்டாக்ட் டிரேஸிங்’ நடைமுறை முக்கியமானது. பாதிக்கப்பட்டவர் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார், அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியிருக்கும், அவரால் யாருக்கெல்லாம் தொற்று பரவியிருக்கும் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண்பதே ‘கான்டாக்ட் டிரேஸிங்’ முறை. இதில் பாதிக்கப்பட்டவர் அறியாமலும் அவருடன் சிலர் தொடர்பில் இருந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டவரே தகவல்களை மறைக்கக்கூடும். இப்படி விடுபடும் விஷயங்களையும் கண்டறியும் தொழில்நுட்பமே ஆரோக்கிய சேது செயலி!

ஜி.பி.எஸ் மற்றும் ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் இந்தச் செயலி, ஒருவர் எங்கெங்கெல்லாம் செல்கிறார் எனக் கண்காணிக்கும். கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தால், அதையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். கொரோனா அறிகுறிகள் இருக்கின்றனவா என சுயபரிசோதனை செய்துகொள்வது, ஒருவரின் சுற்றுவட்டாரத்தில் எத்தனை பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்வது என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் ஆல்-இன்-ஆல் செயலி இது.

இந்தியாவில் இதை ஒன்பது கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இப்படி பயனுள்ள வகையில் இந்தச் செயலி அமைந்தாலும், இன்னொரு பக்கம் தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் பிரைவசி தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

ஆரோக்கிய சேது பாதுகாப்பானதா?

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இது தனியாரின் பொறுப்பில் விடப்பட்ட மற்றுமொரு மேம்பட்ட கண்காணிப்பு முறையே. இதை ஒழுங்காக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தகவல் பாதுகாப்பு மற்றும் பிரைவசி குறித்த சந்தேகங்கள் எழுகின்றன. தொழில்நுட்பம், மக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது’ என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘ஆரோக்கிய சேது, கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த செயலி. இது, வலுவான தகவல் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. மக்களின் அனுமதியின்றி அவர்களை அரசு கண்காணிக்காது. இவர் குறை சொல்லும் ஆரோக்கிய சேதுதான், இன்று உலக அளவில் பாராட்டுகளைக் குவித்துவருகிறது’’ என்றார்.

அபர் குப்தா - ஸ்ரீராம்
அபர் குப்தா - ஸ்ரீராம்

இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ஆதாரில் இருக்கும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய பிரெஞ்சு ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் (புனைபெயர்), ‘ஆரோக்கிய சேதுவில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்பது கோடி மக்களின் தகவல்கள் ஆபத்தில் சிக்கியிருக்கின்றன’ என்றொரு தகவலை வெளியிட்டார். தொடர்ந்து, தன்னைத் தொடர்புகொண்டால் அதுகுறித்து விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆரோக்கிய சேதுவை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) தரப்பில் அவரை தொடர்புகொண்டுள்ளனர். இதன் பிறகு, ‘எலியட் ஆல்டர்சன் சொல்வதுபோல் சிக்கல்கள் எதுவும் இல்லை’ என மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது தேசிய தகவல் மையம். அப்படியும் விடவில்லை அந்த ஹேக்கர்.

ஆரோக்கிய சேது செயலியில் ஒருவரது லொகேஷனைச் சுற்றி குறிப்பிட்ட சுற்றளவில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், யாருக்கெல்லாம் அறிகுறி இருக்கிறது, எத்தனை பேர் ஆரோக்கிய சேது பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலைப் பார்க்க முடியும். இதற்கு ஆப்பில் 500 மீட்டர், ஒரு கிலோமீட்டர் தொடங்கி 10 கிலோமீட்டர் வரையுள்ள ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வுசெய்ய முடியும்.

இது எப்படிச் செயல்படுகிறது என உள்ளே நுழைந்து நோண்டிய எலியட் ஆல்டர்சன், இதில் ஓர் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது ஒருவர், தனக்குத் தேவைப்படும் லொகேஷனையும் அதைச் சுற்றி தேவையான தூரத்தைக் கொடுத்து அந்தப் பகுதியின் நிலவரங்களைப் பெற முடியும். அந்த வகையில் பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றம், இந்திய ராணுவத் தலைமையகம் ஆகிய முக்கிய இடங்களைச் சுற்றி 500 மீட்டர்களில் யாரெல்லாம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள், யாருக்கெல்லாம் அறிகுறிகள் இருக்கின்றன என்ற தகவலை ஆரோக்கிய சேது செயலியில் பெற்று வெளியிட்டிருக்கிறார் அவர்.

இதற்கும் பதிலடி கொடுத்திருக்கிறது ஆரோக்கிய சேது டீம். ‘‘ஆரோக்கிய சேது செயலியில் ஹேக்கிங்கோ தனியுரிமை கொள்கை மீறலோ நடக்கவில்லை. லொகேஷன் தகவலை மட்டும் மாற்றிக் கொடுத்து அதை `ஹேக்’ என்று சிலர் சொல்கிறார்கள். அதை குறிப்பிட்ட அந்த லொகேஷனில் இருக்கும் எவராலும் பார்க்க முடியும். அது ஏற்கெனவே பொதுவெளியில் இருக்கும் தகவல்தான். அதை ஹேக் செய்துவிட்டேன் எனக் கூறுவது கத்துக்குட்டியின் வேலை” என்று தெரிவித் திருக்கிறது.

இந்தச் சர்ச்சையைப் பற்றி எத்திக்கல் ஹேக்கர் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணரான ஸ்ரீராமிடம் பேசினோம். ‘‘லொகேஷன் டேட்டாவை மாற்றிக் கொடுக்க முடியும் என்பதை பாதுகாப்புக் குறைபாடாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு பகுதியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலை மட்டுமே இதன்மூலம் பெற முடியும். இதை வைத்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை எடுக்க முடியாது. அப்படி எடுக்க முடிந்திருந்தால், அதை `பிரைவசி மீறல்’ எனக் கூறலாம். வெறும் விளம்பரத்துக்காக சிலர் அடிக்கும் ஸ்டன்ட் இது” என்றார்.

‘ஆரோக்கிய சேதுவில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ என, தொடர்ந்து குரல்கொடுத்துவரும் இன்டர்நெட் ஃப்ரீடம் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தாவிடம், ‘‘ஆரோக்கிய சேது செயலி விஷயத்தில் அரசு செய்ய வேண்டியது என்ன?’’ என்ற கேள்வியை முன்வைத்தோம். “இந்தச் செயலியின் சோர்ஸ் கோடு பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் அதன் செயல்பாடுகள் குறித்த சந்தேகங்கள் இல்லாமல் மக்கள் இதை தைரியமாகப் பயன்படுத்த முடியும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் எப்போதுவரை பயன்படுத்தப்படும், கொரோனா பிரச்னை முடிந்த பிறகு அவை அழிக்கப்படுமா... என்பதற்கான சட்டபூர்வமான வரையறைகள் நிறுவப்பட வேண்டும். இந்தத் தகவல்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும். ஆனால், இதுவரை இதற்கான ஆவணங்கள் எதையுமே மத்திய அரசு வெளியிடவில்லை. மக்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தால் அரசால் இந்த நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்க முடியும்’’ என்றார்.

ஆரோக்கிய சேது பாதுகாப்பானதா?

பாதுகாப்புக் குறைபாடு என பிரெஞ்சு ஹேக்கர் சொன்னதைப் பற்றிக் கவலைப்பட பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், மற்ற விஷயங்களில் கவனம்கொள்ள வேண்டியது அவசியம். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் `ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவில்லையென்றால், சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி கட்டாயப்படுத்தும்போது, இன்னும் வெளிப்படைத்தன்மை அவசியம். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.