கடந்த ஒரு மாதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் ஈயாடிக் கொண்டிருக்க வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல் எந்த நேரமும் மக்கள் கூட்டம் குவியும் இடமாக கிளப்ஹவுஸ் #ClubHouseApp இருக்கிறது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்குத் தொடங்கத் தயங்கியவர்கள் கூட கிளப்ஹவுஸ் ஆப்பில் கணக்கை ஆரம்பித்து இரவு பகலாக அங்கேயே இருக்கிறார்கள் என்றால் அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஆப்பில்?
உரையாடல்!
போன் நம்பர் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொள்ளும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இன்பாக்ஸ் மெசேஜ் வசதி இல்லை. இந்த ஆப் பயன்படுத்தும் யாரும் யாருடனும் நேரடியாகப் பேச முடியும் (சம்பந்தபட்டவர்கள் விரும்பும் பட்சத்தில்).
மனிதர்களுக்கு உயிர் வாழ உணவை போலவே அதிமுக்கியமான இன்னொன்று பேச்சு. சோஷியல் மீடியாவில் எழுதுவது, வாசிப்பதில் இருந்து விலகி மக்கள் பேசுவது அல்லது பேசுவதை கேட்பது என்கிற இடத்துக்கு நகர்ந்துள்ளார்கள். இன்று அதிக அளவு யூ-ட்யூப் தளம் பயன்பாட்டில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் யூ-ட்யூபில் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக உரையாட முடியாது.

கிளப்ஹவுஸில் வீடியோ/ஆடியோ/புகைப்படங்கள் பகிர முடியாது. பக்கம் பக்கமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுதிவிட்டு லைக் மற்றும் கமென்ட்டுகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்காது. லைவ் ஆடியோவை மட்டுமே அடிப்படையாக வைத்து புதிதாக வெளிவந்திருக்கும் Applicationதான் கிளப்ஹவுஸ் #ClubHouse.
இந்த App-ல் கணக்கு தொடங்குவது மிக எளிது. ஒரு செல்போன் நம்பர் இருந்தால் போதும். ஆனால், கணக்கு தொடங்குபவர்களை ஏற்கெனவே ஆப்பில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் நாமினேட் (இன்விட்டேஷன்) செய்தால் மட்டுமே அக்கவுன்ட் இயங்கும்.
அக்கவுன்ட் உருவாக்கியதும் ஒரு Room தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். Open Roomகளில் யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து பேசுவதைக் கவனிக்கலாம் மற்றும் கை உயர்த்தி (Hand Raise) பேசுவதற்கு வாய்ப்பு கேட்கலாம். Social Room-களில் உறுப்பினர்கள் மற்றும் பின்தொடர்பவர்களும், Closed Roomகளில் குறிப்பிட்டு யாரை அழைக்கிறோமோ அவர்கள் மட்டுமே உள்ளே வரமுடியும். மாடரேட்டர்கள் அனுமதித்தால் பேசவும் முடியும்.
பொதுவாக செல்போன் நம்பர் பயன்படுத்தி கணக்கைத் திறக்க வேண்டியிருக்கும் ஆப்களை பலரும் குறிப்பாக பெண்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். கிளப்ஹவுஸ் ஆப் பயன்படுத்துவதற்கு wi-fi தொடர்பு அல்லது 4G இணைய வசதி இருத்தல் அவசியம். அதிகமாக பேட்டரியை பயன்படுத்துவதால் விரைவில் சார்ஜ் தீர்ந்து போதல் என இந்த ஆப்பை பயன்படுத்த முடியாமல் போவதற்கு பல தடைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து ஒரே மாதத்துக்குள் கிராமங்கள்வரை சென்று சேர்ந்திருக்கிறது.
ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற தளங்களில் நாம் எழுதுவதை ஒருமுறை மீண்டும் படித்துவிட்டு பதிவு செய்யலாம். கிளப்ஹவுஸில் நாம் பேசுவதை எல்லாமே லைவ் ஆக மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் நம் உணர்ச்சிகளின் கட்டுப்பாடு நமது கையில் இருக்க வேண்டும். நாம் பேசிய சொற்களை திரும்ப பெற முடியாது. பேச்சில் மிகுந்த கவனமாகவும், கண்ணியமாகவும் இருத்தல் அவசியம்.

கிளப்ஹவுஸில் நுழைந்து முதல் இரு தினங்கள் ஃபேஸ்புக் மூலம் தெரிந்த நண்பர்களிடம் பேசுவதற்கே தயக்கமாக இருந்தது. அறிமுகம் இல்லாதவர்களுடன் நடக்கும் விர்ச்சுவல் உரையாடல் எழுத்துகள் மூலம் உரையாடுவதை போன்று ஆரம்பத்தில் எளிதாக இருக்கவில்லை. ஆனால் சிறிது சிறிதாக பேச்சு நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அதே சமயம் முகம் அறியா மனிதர்களிடத்தில் ஏற்படும் இத்தகைய நம்பிக்கை ஆபத்தில் போய் முடியும் வாய்ப்புகளும் இதில் உண்டு.
சமூக வலைதளங்களில் பெண்கள் வெளிப்படையாக எழுத தயங்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு பெண் தன்னுடைய கருத்தை முன் வைக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிர் கருத்தை நாகரீகமான முறையில் சொல்லாமல் அந்தப் பெண்ணை முதலில் ’முட்டாள்’, ’லூசு’ என்று பட்டம் கட்டுவது அல்லது எல்லா பெண்களும் இப்படித்தான் சிந்திக்கக் கூடியவர்கள் எனக் கூறுகிறவர்களே இங்கு அதிகம். அதே காரணத்திற்காக பெண்களை உருவக் கேலி செய்வது, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு செய்வது என பெண்கள் சாதாரணமாக ஃபேஸ்புக்கில் அல்லது ட்விட்டரில் எழுதுவதற்கு வரும் எதிர்வினைகள் பலவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஓர் ஆரோக்கியமான உரையாடலை பெண்கள் முன்னெடுக்க முடிவதே இல்லை என்பது பெரும்பாலான பெண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இது போன்ற காரணங்களால் மற்ற தளங்களில் எழுதாமலிருந்த பெண்கள் பலரும் கிளப்ஹவுஸில் பேசவும், பாடவும் செய்கிறார்கள் என்கிற மாற்றம் உண்மையில் ஆச்சர்யமளிக்கிறது. அதிகளவில் பெண்களை ஈர்த்திருப்பதே இந்த ஆப் ஒரே மாதத்தில் இவ்வளவு பிரபலமானதற்கு காரணமாகவும் இருக்கலாம்.
அதேசமயம் ஃபேஸ்புக்கில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆண்கள் பலரும் இங்கே வெறும் நேயர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து மைக்கை நீட்டினாலும் பேசுவதில்லை. காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாலின பேதத்தை கடந்து பொதுவெளியில் பேசுவதற்கான தயக்கம் மற்றும் பயம் எல்லோருக்குமே இருக்கிறது.
பல பெண்கள் கிளப்ஹவுஸில் பேசும்போது தங்களுக்கு அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்தது தன்னுடைய கணவர் அல்லது மகன் என்று சொல்கிறார்கள். இன்னும் சில பெண்கள் தங்களுக்கு அருகிலேயே தங்கள் கணவர் இருப்பதாகவும் அவரும் தாங்கள் பேசுவது, பாடுவதைக் கேட்பதாவும் கூறுவார்கள்.

அவ்வாறு சொல்லும் பெண்கள் ’ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’, ’அவர்கள் வெளிப்படையாக பேச சுதந்திரம் இல்லை’ என்று ஃபேஸ்புக்கில் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதுவரை அந்த பெண்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் எதுவுமே எழுதி இருக்காத நிலையில் முதன்முறையாக அவர்கள் கிளப்ஹவுஸில் பேசத் துணிந்திருக்கும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
பறவை பிறந்த மறுநொடியே பறந்துவிடாது. கண் விழித்து பார்த்து, தத்தித் தத்தி எழுந்து நடந்து பிறகுதானே பறக்கமுடியும். காரணம் யார் என்பதைவிட இங்கே கண் விழிப்பதே முதன்மையானது.
மறுபுறம் மிக முற்போக்காக சிந்திக்க கூடியவர்கள் அல்லது செயல்படுபவர்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவர்கள் வீட்டுப் பெண்கள் இந்த ஆப் பயன்படுத்த தங்கள் வீட்டு ஆண்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று சொல்வது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. முற்போக்கு ஆண்கள் பலரும் தங்கள் வீட்டு பெண்களிடத்தில் தாங்கள் பெரிய அறிவாளி போலவும், தங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதே பாதுகாப்பு என்பது போலவும் ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு பெண்ணிய(?!) அட்வைஸ் செய்யும் ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களின் பாலின சமத்துவம் மற்றும் தனி மனித சுதந்திரத்தை ஏன் மதிப்பதில்லை என்கிற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
ப்ளேஸ்டோரில் இருந்து ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த இவ்வளவு யோசிக்கவும், பேசவும் தேவை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. இன்று பெரும்பாலும் எல்லோரும் தனி குடும்பங்களாக குட்டித் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கவேண்டிய பேரிடர் காலம் மேலும் தனிமையை அதிகப்படுத்துகிறது. அதே சமயம் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் கூட வாட்ஸ்அப்பில் முன்கூட்டியே நேரத்தைச் சொல்லிவிட்டு போனில் அழைக்கும் பழக்கத்திற்கு சில காலமாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில் கிளப்ஹவுஸில் எந்த நேரமும் ஒரு ரூம் ஆரம்பிக்கலாம், எந்தத் தலைப்பிலும் ஓர் உரையாடலை துவக்கலாம், அப்போதைக்கு யாருக்கு வாய்ப்பும், நேரமும் இருக்கிறதோ அவர்கள் கலந்து கொள்ளலாம் என்கிற வசதிகளுடன் ஒரு ஆப் இன்றைய நிலையில் பலருக்கும் அவசியமானதாக இருக்கிறது.

ஃபேஸ்புக் போன்ற ஆப்களில் இருந்து வெளியேறி அக்கவுன்ட்டை டெலீட் செய்தவர்கள், ஸ்ம்யூலில் #SmuleApp பாடிக் கொண்டிருந்தார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக பல வருடங்கள் பாடாமல் இருந்தவர்கள், வெகுகாலம் நண்பர்களின் தொடர்பில் இல்லாதவர்கள் எல்லோரையும் இந்த ஆப் மீண்டும் சமூக வலைதளத்திற்குள் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு கிளப்பில் நுழைந்த பேசும்பொழுதும் மனம் உற்சாகம் கொள்வதை உணரமுடிகிறது. அங்கு இருக்கும் சமயங்களில் பேசுவதும், பாடுவதும், சிரிப்பதும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், திடீரென இந்த ஆப் இல்லாமல் போகும்போது நிச்சயமாக பலருக்கும் அதை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனம் வாய்க்குமா என்கிற கேள்வியும் உடன் இருக்கிறது.
தொடங்கிய புதியதில் சில நாள்கள் ஆர்வத்தில் பலவிதமான தலைப்புகளிலும் உரையாடினார்கள். தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்புகள், தியான முறைகள், அரசியல், சினிமா, காதல், காமம் சார்ந்த உரையாடல்கள் என எல்லா விதமான தலைப்பின் கீழும் மக்கள் ஒன்று கூடினார்கள். இன்று உரையாடல்கள் சிறிது சிறிதாக மாறி, பொழுபோக்கிற்காக மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் ஆகியிருக்கிறது.
குடும்பத்திற்குள் பேசச் சொன்னாலே அலறுகிற 2K கிட்ஸின் உலகம் கிளப்ஹவுஸில் வேறாக இருக்கிறது. அவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வது இல்லை. கிளப்ஹவுஸ் ப்ரொஃபைல் படத்தை பார்த்து ப்ரொபோஸ் பண்ணுவதை Funஆக செய்கிற அளவில் அவர்கள் மாடர்னாக இருக்கிறார்கள். ஒரு கிளப்பில் ஒருவரின் புகைப்படத்தையும், பேச்சு வழக்கையும் வைத்து அவரின் வயது, ஊர், கல்வி, வேலை எல்லாம் மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தார்கள்.
இளம் வயது ஆண்களும், பெண்களும் மிக ஆர்வமாக தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். முன்பின் அறிமுகமில்லாத ஒரு பொதுவெளியில் தங்களுடைய சொந்த ஊரிலிருந்து தாங்கள் வேலை பார்க்கும் தகவல்வரை எதற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என அதிர்ச்சியாக இருந்தது. இத்தகைய விளையாட்டுக்கள் நிச்சயமாக ஆபத்தில் போய் முடியலாம். எந்த சமூக வலைத்தளமாக இருந்தாலும் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை பகிரும்போது மிக கவனமாக இருத்தல் அவசியம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் வந்த பிறகு பிரபலமானவர்களிடம் மிக எளிதாக பேசக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நாட்டின் பிரதமர் முதல் உள்ளூர் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் சாமானிய மக்கள் அவர்களிடம் நேரடியாக அவர்களது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் டேக் செய்து பேசலாம். காலம்காலமாக பிரபலமானவர்களை உயர்த்தி ஓர் இடத்தில் வைத்து அவர்களிடம் இருந்து மக்கள் விலகி நின்று வணங்கிய புனித பிம்பத்தை உடைத்ததில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
அரசியல் பிரபலங்களிலிருந்து சினிமா பிரபலங்கள் வரை யாராக இருந்தாலும் சாதாரணமாக ஒரு குழுவில் வந்து எல்லோரைப் போலவும் பாடவும், உரையாடவும் செய்கிறார்கள். பலர் எதுவும் பேசவில்லை என்றாலும் பொறுமையாக இறுதிவரை மற்றவர்களின் உரையாடலைக் கேட்கிறார்கள். இது உண்மையில் மிகப்பெரிய சமூக மாற்றம்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எழுதி பிரபலமான பலரும் கிளப்ஹவுஸில் ’காமெடியன்களாக’ ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவிற்குள் நுழைந்தவுடன் தங்களை எல்லோரும் அடையாளம் கண்டு, உடனடியாக மைக் கொடுத்து பேச அழைக்க (Speaker) வேண்டும் என்றும் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றும் வெளிப்படையாக எதிர்பார்க்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட குழுவில் யாருக்கும் அவர்களை தெரியாத பட்சத்தில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆப்பில் ஆபத்துகளும் உண்டு. நாம் ஸ்பீக்கராக இருக்கும்பட்சத்தில் மைக்கை ஆஃப் (Mute) செய்ய மறந்து அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, ம்யூட் செய்யாமல் இருக்கும்போது நமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசினாலோ அது க்ளப்பில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும். இது சில சமயம் கேளிக்கையாகவும் பல நேரங்களில் க்ளப்பில் இருக்கும் மற்றவர்களுடன் கருத்து வேறுபாட்டையும் உருவாக்கலாம். வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சரில் குரல் பதிவுகளை (Voice Notes) அனுப்பும்போதும், தொலைபேசி அழைப்புகளை எடுத்து பேசும்போது கிளப்ஹவுஸ் ஆப்பில் இருந்து வெளியேறி (Leave quietly) பேசுவது நல்லது.
அதேபோல் நாம் பேசும்போது மற்றவர்கள் Screen Recording செய்ய வாய்ப்பிருப்பதால் பேச்சில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆப் நேரத்தை அதிகம் விழுங்க கூடியதாக இருக்கிறது. இதனால் நள்ளிரவு கடந்தும் பலரும் இதை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. தூக்கம் கெடுவதால் உடல் நலக்குறைவுகள் ஏற்படலாம். மகிழ்ச்சியாக இருப்பது மன நலத்திற்கு நல்லது என்றாலும் எதுவும் அளவோடு இருக்கும் வரை மட்டுமே அமிர்தம்!