இந்த டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பவர்களைக் காண்பதே மிகவும் அரிது.
குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அவர்களிடமிருந்து போனை வாங்குவது கஷ்டமான காரியமாக இருப்பதாகப் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உளவியல் ரீதியான பல சிக்கல்களும், நோய்களும், குற்றங்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டிஜிட்டல் உலகில் ஜாம்பவானாக வலம் வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான டிம் குக், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்கானிக்க வேண்டும் என்றும் டிஜிட்டல் சாதனகளை முறையாகக் கையாளுவது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதுபற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டிம் குக், "மனிதர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்யவும், நிறைய கற்றுக் கொள்ளவும்தான் தொழில்நுட்பத்தை இன்னும் இன்னும் மேம்படுத்தி வருகிறோம். அந்த தொழில் நுட்பத்தை நாம்தான் இயக்க வேண்டும், அது நம்மை இயக்கக் கூடாது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. அதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்துவதைத் தடுக்கவும் பல தொழில் நுட்பங்களை உருவாக்கிவருகிறோம்.
இந்தக் காலத்தில் குழந்தைகள் பிறக்கும்போதே டிஜிட்டல் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள். அவர்களைச் சுற்றிலும் டிஜிட்டல் சாதனங்கள் நிறைந்திருக்கின்றன. எனவே அவர்களைப் பாதுகாக்க அவர்களைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பு வளையத்தை பெற்றோர்கள் அமைக்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 'Screen Time' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திலாம். இதன்மூலம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்கலாம்" என்று பெற்றோர்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.