லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

AI தொழில்நுட்பம்... அறிவோம், தெளிவோம்!

AI தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
AI தொழில்நுட்பம்

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன.

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் `ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்' (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. கணினித் தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மனிதர்கள் செய்யும் வேலையை இந்தச் செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலை ஏற்பட்டு பலரது வேலை பறிபோய் விடும் என்கிற அச்சமும் நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, மனித ஆற்றலை அதனால் ஈடுசெய்ய இயலுமா, அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன... விளக்குகிறார் மென்பொருள் வல்லுநரான ஆர்.சர்வேஷ்.

 ஆர்.சர்வேஷ்
ஆர்.சர்வேஷ்

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

“ஒரு ரோபோ இப்படித்தான் செயல்படும் என்று வரையறுக்கப் பட்டதை (programming) தாண்டி சுயமாக சிந்தித்தால் எப்படி யிருக்கும் என்கிற கற்பனைதான் `எந்திரன்’ திரைப்படம். ஓரளவில் இந்தச் செயற்கை நுண்ணறிவை `எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோவோடு ஒப்பிடலாம். நமது தகவல்களை அடிப்படை யாக வைத்து நமக்கு எதுவெல்லாம் தேவைப்படும் என் பதை யூகித்து வழங்குவதுதான் செயற்கை நுண்ணறிவு செய்கிற வேலை.

கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் பல வேலைகளைச் செய்து வருகின்றன. எப்படி ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் நாம் ஒவ்வொன்றையும் பயிற்றுவிக்கிறோமோ, அதேபோல் கணிப் பொறித் தொழில் நுட்பத்திலும் உள்ளீடு (feed) செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தச் செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. `கோடிங்' (Coding) வழியாக இதற்கு பயிற்றுவித்திருப்பார்கள்.

நீங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் வாட்ச் ஒன்று வாங்கலாம் எனத் தேடுகிறீர்கள். அதன் பிறகு ஃபேஸ்புக்குக்குச் சென்றால் வேறொரு ஷாப்பிங் வெப்சைட்டின் வாட்ச் விளம்பரம் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அதுவும் நீங்கள் எந்த விலையில் தேடினீர்களோ அதற்கு நிகரான விலையில் காட்டும். இதுதான் செயற்கை நுண்ணறிவின் வேலை.

நம் தேவைகள், விருப்பங்கள் பற்றி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படி தெரியும்?

மெயில் ஐடிகள், சமூக வலைதளங்கள், மொபைல் சேவைகள் என நம்மிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்குக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில், நம் தேவை என்ன, நமக்கு எதன் மேல் நாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தொடர்புடையவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

உதாரணமாக, கூகுள், ஃபேஸ் புக் ஆகியவற்றில் கணக்கு ஆரம் பிக்க நமது வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்களைக் கொடுத்திருப் போம். அந்தத் தகவலை அடிப் படையாகக் கொண்டு எந்தெந்த வயதினருக்கு எந்தெந்தப் பொருள்களின் மீது நாட்டம் இருக்கும் என்கிற யூகத்தில் அதற்கான விளம்பரங்களைக் காட்டும். ஃபேஸ்புக்கில் ‘உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள்’ என சிலரது கணக்குகளை முகநூல் பரிந்துரைக்கும். எப்படி? நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு நபரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்திருக்கிறோம் என்பதை `ஜிபிஎஸ்' (GPS - Global Positioning System) மூலமாகக் கணக்கில்கொண்டு இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையைப் பறிக்குமா?

ஐடி துறையை எடுத்துக்கொண்டால் கோடிங் மற்றும் அக்கவுன்ட்ஸ் ஆகியவைதான் மிக முக்கியமான பணிகள். டேலி, மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற மென் பொருள்கள் அக்கவுன்ட்ஸை எளிமையாகச் செய்து முடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இப்போது செயற்கை நுண்ணறிவின் மூலம் அக்கவுன்ட்ஸை கணிப்பொறியே தன்னிச்சையாக மேற்கொள்ள முடியும். நாம் மேற்பார்வை மட்டும் பார்த்து அப்ரூவ் செய்தாலே போதுமானது. இதனால் மனித உழைப்பு பெரிய அளவுக்குத் தேவையில்லாமல் போகும். அதேபோல, ஒரு அப்ளிகேஷனைத் தயார் செய்ய வேண்டும் என்றால், இத்தனை ஆண்டுகளில் எழுதப்பட்ட கோடிங்கை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவே கோடிங்கை எழுதி விடும். மனிதர்கள் அதனை மேற்பார்வை பார்த்தால் மட்டுமே போதுமானது. ஐடி துறை போல, இப்படி வங்கி முதல் மீடியா வரை ஒவ்வொரு துறையிலும் AI-யால் மனிதன் செய்த பணிகளைச் செய்ய முடியும். அதனால்தான், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நிறைய பேருடைய வேலையை காலி செய்யும் என்கிற அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.

பெருநிறுவனங்கள் பலவும் இந்தச் செயற்கை நுண்ணறிவை 2010ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பெரு நிறுவனங் களிடம் மட்டுமே இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இன்றைக்கு `Open AI' செயலி மூலம் பொதுமக்களுக்குப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பம்

`சாட்ஜிபிடி' (chatGPT) என்று சொல்லப்படுகிற, செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தில் சென்று அதனுடன் `சேட்' செய்யலாம். நாம் என்ன கேட்கிறோமோ அந்தத் தகவல்களை துல்லியமாக அது வழங்கும். ஹிமாச்சலில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் இருக் கின்றன என்று கேட்டால் வரிசையாகப் பட்டியலிடும். ஓர் இடத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ ஒரு கட்டுரை கேட்டால் அசத்தலாகத் தரும். இப்படியாக இன்றைக்கு சிறு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்துகிற சூழலை `chatGPT' உருவாக்கியிருக்கிறது.

ஆகவேதான் இத்தனை காலமாக இல்லாமல் சமீபமாக செயற்கை நுண்ணறிவு வேலையைப் பறித்துவிடும் என்கிற குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

மனிதனை வெல்ல முடியுமா?

காலத்துக்கு ஏற்றாற்போல் நவீனத் தொழில் நுட்பம் வருவது இயல்புதான். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தால், மனித மூளையின் அளவுக்குச் செயலாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு என்பது இருக்கிற தகவல்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் யூகமே தவிர, சுய சிந்தனை கிடையாது. அது தன்னிச்சையாக இயங்குகிறது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில்தான் இயக்கப்படுகிறது.

AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பம்

வேறு என்ன ஆபத்து?

`டீப்ஃபேக்ஸ்' (Deep Fakes) தொழில்நுட்பம்... அச்சுறுத்தும் இதன் பாதகம். இதன் மூலம் பொய்ச் செய்திகளை உருவாக்கி, மக்கள் குழுக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்த முடியும். நாடுகள், அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என அந்தப் பிரதிநிதிகளின் பொய்யான வீடியோ, ஆடியோக்களை உருவாக்கி, மக்களைத் தூண்டி, போராட்டங்களை எரிய வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நமக்குத் தெரிந்தவர்போல குரலை மாற்றி (voice morphing) பேசி, பணம் பறிக்க முடியும். இவ்வாறாக, சாமான்ய மக்களுக்கு உண்மை, பொய்யைப் பிரித்தறியும் சாத்தியத்தைச் செயற்கை நுண்ணறிவு வெகு தொலைவில் வைக்கும்.

தீர்வு என்ன?

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் சட்ட வரையறைகள், நிறுவனங்களுக்கான பொதுவான, பகிரப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள், உண்மை, பொய்யைப் பிரித்தறிய வைக்கும் முத்திரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதனால் தான், அதுவரை செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை நிறுத்திவைக்கக் கோரி உலகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவத்துறை முதல் கலைத்துறை வரை செயற்கை நுண்ணறிவின் சாதகங்களால் பயன்பெறப் போகிறோம். கூடவே, இனி எந்தச் செய்தியிலும் பொய்க்கான சாத்தியம் வலுக்கிறது என்ற விழிப்புணர்வையும் நாம் பெற வேண்டும்.’’