Published:Updated:

2018-ல் விற்பனைக்கு வந்த டாப் 10 பைக்குகள்! #2018Rewind

2018 நவம்பர் மாதம் வரை மொத்தம் 2.03 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

2018-ல் விற்பனைக்கு வந்த டாப் 10 பைக்குகள்! #2018Rewind
2018-ல் விற்பனைக்கு வந்த டாப் 10 பைக்குகள்! #2018Rewind

2018 முடியப்போகிறது. இந்த ஆண்டு பெட்ரோல் விலை எக்குத்தப்பாக எகிறியிருந்தபோதும் கம்யூட்டர் பைக்குகளைவிட பெர்ஃபாமென்ஸ் பைக்குள்தான் அதிகம் விற்பனைக்கு வந்தன. நவம்பர் மாதம் வரை மொத்தம் 2,03,69,484 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா CBR 250, நிஞ்சா 300, யமஹா R3, கரிஸ்மா, ஜாவா, மான்ஸ்ட்டர் 821 என கம்பேக் பைக்குகளும் அதிகம். இந்த ஆண்டு விற்பனையான பைக்குகளில் டாப் 10 பைக்குகள் எவை என்று பார்ப்போம்.

10. டிவிஎஸ் ரேடியான்

இந்த ஆண்டு கம்யூட்டர் செக்மென்ட்டில் தனிக்காட்டு ராஜாவாகக் களமிறங்கியுள்ளது ரேடியான். புதிய டிசைனை உருவாக்குவதை விட எல்லோருக்கும் பிடித்த டிசைனில் மாற்றம் செய்து அதை விருப்பமானதாக கொடுப்பது கடினம். இந்த வேலையை ரேடியானில் சரியாக செய்திருக்கிறது டிவிஎஸ். கம்யூட்டர் பைக்கில் எது இருக்கிறதோ இல்லையோ, நல்ல மைலேஜ், குறைவான பராமரிப்பு, நம்பகத் தன்மை இருந்தால் போதும் அந்த பைக் வெற்றிதான். ரேடியான், முதல் இரண்டு விஷயங்களில் டிக் அடித்துவிட்டது. கடைசியாக இருப்பது போகப்போகத்தான் தெரியும். இந்த ஆண்டு வந்த 90 பைக்குகளில் இருந்து டாப் 10 பைக்குகளுக்குள் வந்துள்ள ஒரே என்ட்ரி லெவல் கம்யூட்டர் ரேடியான். 

9. ஹோண்டா Xblade

ஹார்னெட்டுக்கு பிறகு ஹோண்டாவின் புது பைக் எந்த செக்மென்ட்டில் வரும் என்ற கேள்வி இருந்தது. ஹார்னெட்டின் செக்மென்ட்டிலேயே தனது அடுத்த பைக்கை வெளியிட்டு எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஹோண்டா Xblade இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க காரணம் இதன் விலை, ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள். ஹார்னெட்டில் இருக்கும் அதே 160 இன்ஜின்தான். அதே வசதிகள் ஆனால், 6,000 ரூபாய் விலை குறைவு. இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் பிளாஸ்டிக் தரத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். இன்ஜின் துறுதுறுவென இருப்பதால் சிட்டி ரைடுக்கு பல பேருக்கு இந்த பைக் பிடித்துவிட்டது.

8. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R

2 ஆண்டுகளில் கான்செப்ட்டில் இருந்து தயாரிப்புக்கு வந்துள்ளது எக்ஸ்ட்ரீம் 200R. ரூ.1,09,275 எனும் ஆன்ரோடு விலையில், இந்தியாவின் விலை குறைவான 200சிசி பைக் என்ற ஹேஷ்டேக் உடன் வந்திருக்கிறது எக்ஸ்ட்ரீம். எக்ஸ்பல்ஸ் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு எக்ஸ்ட்ரீம் வருகை இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஸ்பெக் ஷீட்டை பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும், பைக்கை ஓட்டிப்பார்த்தால் அந்த ஏமாற்றம் பறந்துவிடும். அப்பாச்சி RTR200 விட மிட் ரேஞ்சில் அசத்துகிறது எக்ஸ்ட்ரீம் 200R-ன் இன்ஜின். சிட்டியில் ஃபன் ரைடிங் நிச்சயம். இதன் ஸ்மூத்தான இன்ஜின் நல்ல ஹைவே ரைடுக்கும் உதவும். பழைய யூனிக்கார்ன் 150 பைக்குக்கு பவர் ஏற்றி மைலேஜ் தரும்படி மாற்றி அதைவிட உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு பதில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R ஓட்டினால் கிடைக்கும்.

7. பிஎம்டபிள்யூ G310GS

பட்ஜெட் விலையில் அட்வென்சர் செய்ய வேண்டும் என்ற வெகு நாள் ஏக்கத்தை இப்போதுதான் ஒவ்வொரு பைக் நிறுவனங்களும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2018-ல் இந்த செக்மென்ட்டின் புது வரவாக வந்திருக்கிறது பிஎம்டபிள்யூ G310GS. டியூப்லெஸ் டயர், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், உற்சாகமான இன்ஜின், அலுமினியம் லக்கேஜ் ரேக், மாடர்ன் டிசைன், சொகுசான சீட், நச்சென்ற பிரேக்குகள் என அசத்தியிருக்கிறது. பெரிய பில்லியன் சீட், ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன், கொஞ்சம் உயரமான ஹேண்டில்பார் கொடுத்திருந்தால் அட்வென்சர் டூரில் 'அட்வென்சருக்கு' இன்னும் வலு சேர்ந்திருக்கும். ரூ.4.18 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் ஒரு அட்வென்சர் கிடைக்கிறது என்பதை விட ஒரு பிஎம்டபிள்யூ கிடைக்கிறது என்பதுதான் இந்த பைக்கின் வெற்றிக்குக் காரணம்.

6. அப்பாச்சி RTR 160 4V

பழைய அப்பாச்சி 160-க்கு பொறுப்பு வந்து, பொறுமையும், அனுபவமும் கூடி, புது ஸ்டைலுக்கு மாற்றினால்... அதுதான் அப்பாச்சி 160 4V. வைப்ரேஷன் இல்லாத இன்ஜின், வளைந்து நெளிந்து போவதற்கு ஏற்ற ரைடிங் டைனமிக்ஸ், வலுவான மிட்ரேஞ், அதிக பெர்ஃபாமன்ஸ் கூடவே நல்ல மைலேஜும் கொடுக்கும் பைக் இது. வந்த முதல் ஆண்டிலேயே சுஸூகி ஜிக்ஸரை விட அதிகம் விற்பனையாகிறது இந்த அப்பாச்சி. ரூ.1,05,849 எனும் ஆன்ரோடு விலைதான் நம்மைத் தடுமாற வைக்கிறது.

5. சுஸூகி GSX S750

இந்த முறை நிறைய ப்ரீமியம் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் தொழில்நுட்பம், பிராக்டிக்காலிட், value for money மூன்றையும் முன் நிறுத்தினால் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பைக்குகளில் இருக்கும் வசதிகளும், தரமும், தொழில்நுட்பமும், ரைடிங்கும் சூஸூகி GSX S750 பைக் 7.57 லட்சத்திலேயே கொடுக்கிறது. தரத்தில் தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் விலையிலும், ரைடிங் குவாலிட்டியிலும் பெரிய முன்னேற்றங்களைக் கொடுத்துள்ளது சூஸூகி. இந்த ஆண்டு வந்த ப்ரீமியம் பைக்குகளிலேயே பெஸ்ட் இதுதான்.

4. ஜாவா

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைக் என்றால் அது ஜாவாதான். ஜாவாவைப் பற்றி எந்த நியூஸ் எழுதினாலும் குறைந்தபட்சம் 500 லைக்ஸ் வந்துவிடுகின்றன. அவ்வளவு எதிர்பார்ப்பை உருவாக்கிவைத்திருந்த ஜாவா கிளாசிக் லெஜண்ட்ஸ், எதிர்பார்ப்புகள் எதுவும் சோடை போகாமல் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை களமிறக்கியுள்ளது. ஜாவா என்ற பிராண்டின் மறு அவதாரம் என்று சொல்வதற்கு ஜாவா, அதே பிராண்டு இப்போது இருந்திருந்தால் எப்படி பைக்கை உருவாக்கியிருக்கும் என்று காட்டுவதற்கு ஜாவா 42, எதிர்கால திட்டமாக ஜாவா பரேக் என மூன்று தலைமுறையினரையும் திருப்தி படுத்தியதால் இந்த ஜாவா நம் டாப் 10 பட்டியலில் 4-ம் இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறது.

3. டிவிஎஸ் என்டார்க்

84 பைக் வைத்திருக்கும் ஒரு பைக் பிரியர்கூட வீட்டில் மூன்று ஸ்கூட்டர் வைத்திருக்கிறார். பைக் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால், பிராட்டிக்கலாக பார்த்தால் சிட்டி ரைடிங்கிற்கு ஸ்கூட்டரை விட எதுவுமே சிறந்தது இல்லை. இந்த ஆண்டு விற்பனைக்கு வந்ததில் சிறந்த ஸ்கூட்டர் என்டார்க் 125. இந்தியாவின் முதல் ப்ளூடூத் ஸ்கூட்டர் எனும் பெயரோடு வெளிவந்த இது ஸ்போர்ட்டியான டிசைன், ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வசதிகள், இன்ஜின் ரீஃபைன்மென்ட், பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம் என டெக்னிக்கலாக ஒரு படி மேலே சென்றுள்ளது என்டார்க். இது விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே, டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலிலும் இணைந்துவிட்டது. மக்கள் பட்டியலில் இணைந்த என்டார்க் நம் பட்டியலில் இல்லாமல் எப்படி!

2. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜீடி 650 பைக்குகளுக்குதான் முதல் ரேங்க். கோவாவில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவுக்கு 8000 ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். ஃபேஸ்புக்கில் 44,000 பேர் லைவாக பார்த்தார்கள். அவ்வளவு ஆதரவு இந்த பைக்குகளுக்கு.

டிசைன், தொழில்நுட்பம், வசதிகள், ரைடிங், தரம் எல்லாவற்றிலுமே ராயல் என்ஃபீல்டின் பெஸ்ட் இதுதான். வைப்ரேஷன் இல்லாத பேரலல் ட்வின் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பலருக்கு பிடித்துவிட்டது. ரூ. 2,89,285 என்ற ஆன்ரோடு விலை எல்லோரையும் 650சிசி பைக் வாங்கத் தூண்டுகிறது. எந்த பைக்கை ஒப்பிட்டாலும் அதற்கு டஃப் கொடுத்துப் போட்டிபோடுகிறது இன்டர்செப்டார் 650. மிட் சைஸ் செக்மென்ட்டில் எல்லோருக்குமான பைக்காகவே இதைப் பார்க்கலாம். இந்த ஆண்டின் சிறந்த பைக் என்ற Indian Bike of the year விருதையும் சொந்தமாக்கிவிட்டது இந்த பைக்குகள்.

1. யமஹா R15 V3.0

ரேஸ் டிராக்குக்கு, அட்வென்சருக்கு, லாங் ரைடுகளுக்கு என ஒவ்வொரு பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்குகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்திருந்தன. மொத்தமாக உங்களுக்குப் பிடித்த பைக்கை தேர்வு செய்யுங்கள் என்று ஒரு poll நடத்தியிருந்தோம். அதில், டெஸ்ட் ரைடர்கள், ரேஸர்கள், இன்ஜினியர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என எல்லோரின் பட்டியலிலும் இருந்த பைக் யமஹா R15 V3.0. தொழில்நுட்பத்தில், ரைடிங்கில், தரத்தில், டிசைனில் என எல்லாவற்றிலும் முந்தைய தலைமுறை பைக்கை விட பெரிய முன்னேற்றங்கள் கொண்டு வந்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது யமஹா. அதனால், நம் பட்டியலில் முதலிடத்தில் தகுதிபெற்றுள்ளது யமஹா R15 V3.0.