Published:Updated:

யமஹா MT15 வாங்கலாமா, கூடாதா..!? ஓர் அலசல்!

R15 V3-ன் ஸ்ட்ரீட் மாடல் என்று சொல்லிவிட முடியாது. MT15 பைக்குக்கென சில தனித்தன்மைகள் உண்டு.

யமஹா MT15  வாங்கலாமா, கூடாதா..!? ஓர் அலசல்!
யமஹா MT15 வாங்கலாமா, கூடாதா..!? ஓர் அலசல்!

யமஹா, தனது புதிய MT15 பைக்கை 1.36 லட்சம் ரூபாய் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. R15 V3.0 பைக்கின் ஸ்ட்ரீட் மாடல் MT15 என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பைக்குகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. MT15 பைக்கை வாங்கத் தூண்டும், வாங்கவிடாமல் தடுக்கும் காரணங்களைப் பார்ப்போம்.

ஏன் வாங்கலாம்?

டிசைன் - யமஹாவின் இன்னொரு அட்டகாசமான டிசைன் கொண்ட பைக். 150-200சிசி பைக்குகளை ஒன்றாக நிறுத்தினால், அதில் MT15-ன் டிசைன் தனித்து தெரியக்கூடியது. முன்பக்கம், கண்கள் போல இருக்கும் இரண்டு LED லைட், நடுவில் ஒரு புரொஜெக்டர் ஹெட்லைட் ஸ்டைலாக உள்ளன. FZ25 போன்ற டேங்க் டிசைன், சிங்கில் பீஸ் சீட் மற்றும் சிறிய டெயில் டிசைன் பார்வையை ஈர்க்கின்றன. ரேடியேட்டர், டேங்க் கவுல், பின்னோக்கி இருக்கும் ஃபுட் பெக்ஸ் போன்றவை பார்த்தவுடனேயே வேகமான பைக் என்று சொல்லவைக்கின்றன.

இன்ஜின் - யமஹா R15 V3.0 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான். இந்த 150cc 4 வால்வ் லிக்விட் கூல்டு இன்ஜின் செக்மென்ட்டிலேயே பவர்ஃபுல்லானது. VVA தொழில்நுட்பம் இருப்பதால், உச்சபட்ச RPM-ல் கூட பவர் சீராகக் கிடைக்கிறது. MT, ஸ்ட்ரீட் பைக் என்பதால் பின்பக்கம் பெரிய ஸ்ப்ராக்கெட் பொருத்தியுள்ளார்கள். ECU-வும் சாலையில் ஓட்டுவதற்காக ரீடியூன் செய்யப்பட்டுள்ளதால் ஆரம்பத்திலும், மிட் ரேஞ்சிலும் நல்ல டார்க் கொடுக்கிறது. R15 ஒப்பிடும்போது, டாப் கியரில் பெர்ஃபாமென்ஸ் கொஞ்சம் குறைந்துவிட்டது.

ரைடிங் பொசிஷன் - ஸ்போர்ட்டியான ரைடிங், அதே சமயம் சொகுசை விட்டுக்கொடுக்காத ரைடிங் பொசிஷன் இருக்கிறது. FZ பைக்கில் இருக்கும் அதே ஹேண்டில்பார். ஆனால், உயரம் அதைவிடக் குறைவு. இருந்தும், க்ளிப்பான் அளவுக்குக் குனிந்து பிடித்துக்கொள்ளத் தேவையில்லை. ஃபுட் பெக்ஸ் டியூக் போல பின்னோக்கி வைக்கப்பட்டுள்ளதால், சுறுசுறுப்பான ரைடிங் கிடைக்கிறது. முன்பக்கம் ஃபேரிங் இல்லாதது தொலைதூர பயணத்தின்போது களைப்பை ஏற்படுத்தும். ஆனால், சின்னச் சின்ன பயணங்களுக்கும், டிராஃபிக்கில் ஓட்டுவதற்கும் சுலபமாக இருக்கும். சிங்கில் பீஸ் சீட் ரைடருக்கு சௌகர்யமாக இருக்கிறது. பில்லியன் சீட்டில் அதிக நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியாது.

ஹேண்டிலிங் - MT 15 எடை குறைவாக இருப்பதால் (133 கிலோ) சட்டெனத் திரும்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஷார்ப்பான ஸ்டியரிங் உற்சாகமான ரைடிங்கைக் கொடுக்கிறது. டெல்ட்டாபாக்ஸ் சேஸி ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்காக உருவாக்கப்பட்டதால், கார்னர்களில் வேகமாகத் திரும்ப நம்பிக்கை தருகிறது.

ஸ்லிப்பர் க்ளட்ச் - யமஹாவின் slip and assist clutch (ஸ்லிப்பர் க்ளட்ச்) பைக்கின் கியரை வேகமாகக் குறைக்க உதவுகிறது. கியரை குறைக்கும்போது, பின் வீல் லாக் ஆகி சறுக்காமல் பாதுகாப்பைக் கூட்டுகிறது.

ஏன் வாங்கக் கூடாது?

பிரேக் - பைக்கின் பெர்ஃபாமென்ஸ் அளவுக்கு பிரேக்கின் பெர்ஃபாமென்ஸ் இல்லை. பிரேக் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். சிங்கில் சேனல் ஏபிஎஸ் இருப்பது, பாதுகாப்பைக் கூட்டினாலும் அவசரமாக பைக்கின் வேகத்தைக் குறைக்க பிரேக் பேடுகள் நம்பிக்கை தரவில்லை.

டயர் - பைக்கின் சேஸி இருக்கும் அளவு டயர்கள் ஸ்போர்ட்டியாக இல்லை. MRF Zapper டயர்களின் க்ரிப் சாலையில் அருமையாக இருந்தாலும், கார்னர்களில் சுமார்தான். வேகமாகப் போக வேண்டும் என்று நினைத்தால், மெட்ஜிலர் டயர்களைப் பொருத்தலாம்.

விலை - தற்போது இருக்கும் 150cc பைக்குகளில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் தன்மையைக் கொடுத்தாலும், 1.56 லட்சம் ரூபாய் எனும் ஆன்ரோடு விலை யோசிக்கவைக்கிறது. R15 V3-விட 3000 ரூபாய் விலை குறைவாக இருந்தாலும், ஃபேரிங் மற்றும் ஸ்போர்ட்டியான ரைடுக்கு செலவுசெய்யும் தொகையை, தினமும் பயன்படுத்தும் ஒரு பைக்குக்கு செலவு செய்யவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 1.36 லட்சம் ரூபாய் என்பது ஆன்ரோடு விலையாக இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம். 

MT 15 பைக்கைவிட அதிக பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியான ரைடிங் தரும் பஜாஜ் பல்சர் NS200 மற்றும் அப்பாச்சி RTR 200 4V வாங்கினால் 20,000 ரூபாய் வரை சேமிக்கலாம். யமஹாதான் வேண்டுமென்றால் FZ25 வாங்கலாம்.