சிக்னலின் (Signal) தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக சிக்னலின் வலைப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அதன் நிறுவனர்களுள் ஒருவரான மாக்ஸி மார்லின்ஸ்பைக். சிக்னல் செயலியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாட்ஸ்அப்புக்கு மாற்றாகப் பயனர்களின் தகவல்களை எதையும் வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தாத சேவையாக முன்னிறுத்தப்படும் செயலி. அதன் நிறுவனர்தான் தற்போது தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியிருக்கிறார். புதிய அதிகாரி ஒருவரை நியமிக்கும் வரை அதன் நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வரும் பிரையன் ஆக்டன் என்பவர் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார். பிரையன் ஆக்டன் வேறு யாருமில்லை, வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை-நிறுவனர்களுள் ஒருவர்தான்.

தற்போது பேஸ்புக்கின் ஓர் அங்கமாக இருக்கும் வாட்ஸ்அப்பை, 2009-ல் பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கௌன் ஆகிய இருவரும்தான் உருவாக்கினர். இவர்கள் இருவரும் முன்னாள் யாஹூ ஊழியர்கள். 2014-ல் இவர்களிடம் இருந்து வாட்ஸ்அப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது ஃபேஸ்புக் (மெட்டா). பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் கையாளும் விதத்தில் பிரையனுக்கு ஈடுபாடு இல்லை. எனவே, 2017-ல் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னலின் நிறுவனர்களுள் ஒருவரான மாக்ஸியுடன் இனைந்து 'சிக்னல் டெக்னாலஜி ஃபவுண்டேஷனை' உருவாக்கினார் பிரையன். இதனை வணிக நோக்கமில்லாத ஒரு நிறுவனமாகவே இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஃபவுண்டேஷன்தான் சிக்னலின் செயல்பாடுகளைத் தற்போது கவனித்து வருகிறது.
சிக்னல் ஒரு Open-Source செயலி. அப்படியென்றால், அதன் சோர்ஸ் கோடை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு தனிமனிதருக்குத் தனியுரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் உறுதியாக இருப்பவர் பிரையன். எனவேதான் வணிக நோக்கமில்லாத ஒரு சேவையான சிக்னல் சேவையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். வணிக நோக்கம் இல்லை என்பதால், பயனர்களின் தரவுகளுக்கான தேவை இல்லை. எனவே பயனர்கள் முழு நம்பகத்தன்மையுடன் சிக்னலைப் பயன்படுத்தலாம் என்பதே சிக்னல் நிறுவனர்களின் நோக்கம்.

2021-ல் வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ஃபேஸ்புக் கூறியபோது அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட செயலிகளில் முக்கியமான செயலி சிக்னல். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வாட்ஸ்அப்பை விட அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டது சிக்னல்.
"தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய பாதுகாப்பான ஒரு தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். சிக்னல் முழுக்க முழுக்க நன்கொடையில் மட்டுமே இயங்கும் ஒரு நிறுவனம், வேறு எந்தப் பெரிய நிறுவனத்துக்கும் சிக்னலுக்கு தொடர்பில்லை. சிக்னலை யாரும் வாங்கவும் முடியாது" என்று தெரிவித்திருக்கிறார் பிரையன். சிக்னல் ஃபவுண்டேஷனை அமைக்கும் போதே அதனை மேம்படுத்துவதற்கான நிதியாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.