Published:Updated:

ஒரு கார் திடீரெனத் தீப்பிடிக்கக் காரணம் என்ன?!

ஒரு கார் திடீரெனத் தீப்பிடிக்கக் காரணம் என்ன?!
ஒரு கார் திடீரெனத் தீப்பிடிக்கக் காரணம் என்ன?!

ஹாலிவுட் பால்வாக்கரிலிருந்து அடையார் ரேஸர் அஷ்வின் சுந்தர் வரை கார் தீப்பற்றி எரிந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். கார், சுலபமாகத் தீப்பிடிக்கக்கூடிய பொருள் அல்ல. ஆனால், ஒருமுறை கார் தீப்பற்றினால் அதை அணைப்பது கடினம். இதனாலேயே நம் கார்களில் தீப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவது அவசியமாகிறது. பெரும்பாலும் கார்கள் எதனால் தீப்பற்றி எரியும் என்பதைப் பார்ப்போம்.

விபத்து

காரில் இருக்கும் மற்ற எல்லா பொருள்களையும்விட ஆபத்தானது காரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எரிபொருள். கார் விபத்துக்குள்ளாகும்போது எரிபொருள் லைனில் ஏதாவது லீக் இருந்தால் விபத்தின்போது ஏற்படும் உராய்வுகள் காரணமாகவோ அல்லது இன்ஜின், எக்ஸாஸ்ட் பைப் போன்ற சூடான பாகங்களில் இந்த எரிபொருள் பட்டு கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிடும். விபத்தின்போது சில சமயங்களில் ஃப்யூல் லைனில் கசிவு ஏற்படும். காரில் பெட்ரோல் வாடை அடிக்கிறது என்றால், உடனே ஃப்யூல் லைனைச் சரிபார்ப்பது அவசியம். பெட்ரோல் மட்டும்தான் உடனே தீப்பற்றும். டீசல் பாதுகாப்பானது என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. பெட்ரோல் உடனே எரிந்துவிடும். டீசல் அதிக வெப்பத்துக்கு உட்படுத்தும்போது வெடித்துவிடும்.

டிசைன் கோளாறுகள்

காரில் டிசைன் கோளாறுகள் இருந்தால் கார் தீப்பற்றி எரியும் என்பது உண்மை. டிசைன் கோளாறுகள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் கார் நிறுவனங்கள் காரை ரீகால் செய்து சரிசெய்து தருவார்கள். இத்தாலி லக்ஸூரி கார் நிறுவனமான மஸ்ராட்டியில், வொயர்கள் சீட் ஃபிரேமில் உரசுவதால் ஷாட் சர்க்யூட் மூலம் வாகனம் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறி அதை மாற்றுவதற்கு 50,000 குவாட்ரோபோர்ட்டோ மற்றும் கிப்ளி கார்களை ரீகால் செய்தார்கள். தீப்பிடிக்க வாய்ப்புண்டு என்ற காரணத்துக்காக, பிஎம்டபிள்யூ 88,000 கார்களை ரீகால் செய்தது. 

டாடா நேனோ விற்பனைக்கு வந்தபோது, `திடீர் திடீரெனத் தீப்பிடிக்கிறது' என்று சொல்லப்பட்டது. அப்போது டாடாவும்கூட முதலில் டிசைனைத்தான் செக் செய்தது. டிசைன் குறைபாடுகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கும். அதனால், ரீகால் என்றால் சிறிய விஷயமோ, பெரிய விஷயமோ உடனே சரிசெய்துவிட வேண்டும். பழைய கார் வாங்கும்போது, அந்த கார் எந்த ஆண்டு வாங்கப்பட்டது... காரை ரீகால் செய்தார்களா என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது.

பானெட்

காரின் இன்ஜின் பகுதியைச் சுத்தப்படுத்தும்போது, துணி, க்ளீனிங் திரவம் போன்றவற்றை பானெட்டிலேயே மறந்துவிட்டுவிடுவார்கள். சிலர் வேண்டுமென்றே வைத்துவிடுவார்கள். இது பெரிய ஆபத்தை விளைவிக்கும். இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது அதிக வெப்பம் உருவாகும். இது நேரடியாகத் துணியிலோ அல்லது க்ளீனிங் திரவத்தில் பட்டால் உடனே தீப்பற்றிக்கொள்ளும். பானெட்டுக்குக் கீழே எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக, துணி, பிளாஸ்டிக் போன்றவை இருக்கவே கூடாது.

புதுச்சேரியில் ஒருவர் பானெட்டில் மதுபாட்டில்களை வைத்துச் சென்றுள்ளார். கார் விழுப்புரம் போகும்போது வெப்பம் தாங்காமல் மதுபாட்டில் வெடித்து, மொத்த காருமே கருகிவிட்டது. 

வயரிங்

கார் வாங்கிய பிறகு பெரிய ஸ்பீக்கர்கள், பின் சீட்டில் டிஸ்ப்ளே, காரைச் சுற்றி கலர் கலர் லைட், அதிக பவர்கொண்ட ஹெட் லைட் என காரின் வசதிகளை மாற்றி எலெட்ரிக் லைனில் பல வேலைகளைப் பார்ப்பார்கள். காரில் டிசி மின்சாரம்தான் என்றாலும், எலெக்ட்ரிக் லைன் வீட்டில் இருப்பது போன்று சுலபமானதல்ல. இடியாப்பச் சிக்கல் போன்றது. காரின் எலெக்ட்ரிக்கல் லைனில் கை வைப்பது என்றால், சரியான நபர்களிடம் கொடுப்பது நல்லது. வயரிங் சரியாகச் செய்யவில்லை என்றால், ஷாட் சர்க்யூட் ஆகி மொத்த எலெக்ட்ரிக் சிஸ்டமும் தீப்பிடித்துவிடும். இப்போது காரில் எல்லாமே சென்ட்ரல் லாக் என்றாகிவிட்டது. கார் சென்றுகொண்டிருக்கும்போதே வொயர் தீப்பிடித்துவிட்டால், சென்ட்ரல் லாக் செயலிழந்துவிடும். காரிலிருந்து தப்பிப்பதும் கடினம். காரின் வொயரிங்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எக்ஸாஸ்ட்

காரில் எக்ஸாஸ்ட் பைப்களை வடிவமைக்க, விதிமுறைகள் உள்ளன. பர்ஃபாமன்ஸை அதிகரிக்க ஃப்ரீஃப்ளோ எக்ஸாஸ்ட் பொருத்துவார்கள். இதன் சத்தம் கேட்கவே உற்சாகத்தைத் தூண்டும்விதமாக இருக்கும். ஆனால், ஃப்ரீஃப்ளோ எக்ஸாஸ்ட்டின் விலை அதிகம் என்பதால், சிலர் உண்மையான ஃப்ரீஃப்ளோ எக்ஸாஸ்ட்டை விட்டுவிட்டு சத்தத்தை மட்டும் தரும்படியான எக்ஸாஸ்ட் பைப்புகளை வாங்கிப் பொருத்துகிறார்கள். சத்தத்தை மட்டுமே ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, 900 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வரும் எக்ஸாஸ்ட் காற்றைச் சரியான முறையில் வெளியே தள்ளுவதில்லை. இதனால், எக்ஸாஸ்ட் சூடாகித் தீப்பிடிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதிக வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எக்ஸாஸ்ட் இருக்கவேண்டும். போலி எக்ஸாஸ்ட்டைப் பொருத்துவது என்பது, உங்கள் காருக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பு.

நெருப்பு 

எக்ஸாஸ்ட் பைப் மட்டுமல்ல, சிலர் காரில் வித்தை காட்டும் நினைப்பில், flame thrower எல்லாம் போடுகிறார்கள். சில சூப்பர் கார்களில் அடிக்கடி ஆக்ஸிலரேட் செய்யும்போது இன்ஜினில் இருக்கும் முழு பெட்ரோலும் எரியாது. அந்த பெட்ரோல் எக்ஸாஸ்டிலிருந்து வெளியே வரும்போது வெளியில் உள்ள காற்றுடன் சேர்ந்து எரியும். சிலர் `என்னோட காரையும் சூப்பர் கார் ஆக்குறேன்' என்ற நினைப்பில் எக்ஸாஸ்டில் ஸ்பார்க் பிளக் கொண்ட flame thrower செட் செய்வார்கள். இது சாதாரண காரிலும் நெருப்பை உண்டாக்கும். நாம் சாலையில் பயன்படுத்தும் பல கார்கள், இப்படிப்பட்ட நெருப்பைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்காது. அதனால் காரின் பின்பக்கம் உள்ள பிளாஸ்டிக்குகள் சுலபமாகத் தீப்பிடித்துவிடும். எக்ஸாஸ்ட் பைப்பே உருகிய சம்பவங்கள் உண்டு.

பிரேக்

மலைப்பகுதிகளில் கார் ஓட்டுபவர்கள் பிரேக்கைவிட கிளட்சை அதிகம் பயன்படுத்துவார்கள். ஸ்பீடைக் குறைப்பதற்கு பிரேக்கை அதிகம் பயன்படுத்தினால், பிரேக் அதிக அளவு சூடாகி எரிந்துவிடும். பிரேக்கின் இந்த வெப்பம் டயரை எரித்துவிடும். பிறகு, மொத்த காருமே எரியும். மலை ஏறி இறங்கும்போது பிரேக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கிளட்ச் மற்றும் பிரேக்கை  மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். காரின் வேகத்தைக் குறைக்க, கிளட்சை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பராமரிப்பு

காரை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். கார்களில் ஒரே இடத்தில் இருக்கக்கூடிய ஸ்டேடிக் பார்ட்ஸைவிட நகரக்கூடிய டயனமிக் பார்ட்ஸ் அதிகம். அதனால், காலம் போகப் போக அதிகத் தேய்மானம் இருக்கும். அதுதவிர எரிபொருள், கூலன்ட் ஆயில், இன்ஜின் ஆயில், ஸ்டியரிங் ஃப்ளூயிட், பிரேக் ஆயில் போன்றவை சரிவர பராமரிக்கவில்லை என்றால் கசியத் தொடங்கும். காரில் இருக்கும் சூடான பாகம் இதில் எதைத் தொட்டாலும் நெருப்பாகப் பற்றிக்கொள்ளும். அதனால், காரை நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பது அவசியம். பழைய கார் என்றால், இன்னும் கவனம் தேவை.

காரில் புகையையோ, தீயையோ கண்டால் உடனே காரை நிறுத்திவிட்டு வெளியே வந்து போதுமான இடைவெளியில் தள்ளிச் சென்றுவிடுங்கள். காரைவிட்டு வெளியே வந்த பிறகு அவசியமான பொருள்கள் எடுத்துவிடலாம் எனச் சிந்திப்பதே கூடாது. காரை நிறுத்திவிட்டு தூரமாக ஓடுவது மட்டுமல்ல, அருகில் எந்த நபரும் வாகனமும் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை. எல்லா கார்களிலுமே ஃபயர் எக்ஸ்டிங்குஷர் இருக்கவேண்டும். காரில் புகை வருகிறது என்றால் இதைப் பயன்படுத்தலாம். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரியும் நேரத்தில் ஃபயர் எக்ஸ்டிங்குஷரைப் பயன்படுத்துவது தவறு.