Published:Updated:

க்விட்தான் அடிப்படை; ஆல்ட்டோவுக்குப் போட்டியாக களமிறங்கும் டட்ஸன் ரெடி-கோ!

800சிசி மாடலைவிட 14bhp கூடுதல் பவர் & கிட்டத்தட்ட 2kgm டார்க் கிடைத்திருப்பதால், சிட்டி/நெடுஞ்சாலை என எதுவாக இருந்தாலும், இப்போது நம்பிக்கையோடு, ‘ரெடி... கோ’ எனச் சீறுகிறது ரெடி-கோ 1.0.

க்விட்தான் அடிப்படை; ஆல்ட்டோவுக்குப் போட்டியாக களமிறங்கும் டட்ஸன் ரெடி-கோ!
க்விட்தான் அடிப்படை; ஆல்ட்டோவுக்குப் போட்டியாக களமிறங்கும் டட்ஸன் ரெடி-கோ!

`எனது பட்ஜெட் 4 லட்சம் ரூபாய். சிறிய ஹேட்ச்பேக் வேண்டும்’ என்பவர்களுக்கான சாய்ஸில் ஒன்றாக இருப்பது ரெடி-கோ. மாருதி சுஸூகி ஆல்ட்டோ, ரெனோ க்விட், ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும் இந்த டட்ஸன் கார், மாதத்துக்கு சராசரியாக 2,000 கார்கள் என்ற அளவில்தான் விற்பனையாகின்றன. இந்தியாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளே ஆன பிராண்டாக இருப்பினும், இந்த விற்பனை எண்ணிக்கை குறைவுதான்! அதற்கு, இன்ஜின் ரிஃபைன்மென்ட், குறைவான டீலர் நெட்வொர்க், கேபின் தரம் என ரெடி-கோவில் இருந்த சில குறைகளே காரணம்.

போட்டி கார்களில் 800சிசி/1,000சிசி இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், இதிலும் அந்த ஆப்ஷன் இருக்கிறது. தனது காரின் உயரத்தைக் கருத்தில்கொண்டு, `Urban Crossover’ ஆக ரெடி-கோவை பொசிஷன் செய்திருக்கிறது டட்ஸன். T(O) மற்றும் S என இரண்டு வேரியன்ட்கள் - 5 கலர்களில், 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் கிடைக்கிறது. நெரிசல்மிக்க நகர சாலைகளில் ரெடி-கோவை ஓட்டுவது எப்படி இருக்கிறது...

டிசைன் மற்றும் கேபினில் என்ன வித்தியாசம்?

800சிசி மற்றும் 1,000சிசி மாடல்களின் அளவுகளில் ஒரு மில்லிமீட்டர்கூட மாறவில்லை. தோற்றத்தைப் பொறுத்தவரை, காரின் டெயில் கேட்டில் 1.0 லிட்டர் பேட்ஜ்தான் ஒரே வித்தியாசம்! இதிலும் காஸ்ட் கட்டிங்கா டட்ஸன்? 800சிசி மாடலின் கிரே நிற கேபினுடன் ஒப்பிடும்போது, 1,000சிசி மாடலின் கேபின் கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளது. ஆங்காங்கே இருக்கும் பியானோ பிளாக் மற்றும் சில்வர் வேலைப்பாடுகளுடன் இது சேரும்போது, டேஷ்போர்டு கொஞ்சம் ஸ்டைலாகக் காட்சியளிக்கிறது. சென்டர் கன்ஸோலில் புதிதாக கதவுகளுக்கான சென்ட்ரல்-லாக்கிங் பட்டன் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன்கூடிய Single Din ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. காரின் சாவியில் ரிமோட் லாக்கிங் இடம்பெற்றுள்ளது. க்விட் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்ம் என்றாலும், இதன் கி.கிளியரன்ஸ் க்விட்டைவிட அதிகம்!

உயரத்தில் இருக்கும் சீட்களுடன், பெரிய கண்ணாடிகளைக்கொண்ட கதவுகள் சேரும்போது, வெளியே என்ன நடக்கிறது என்பதை காருக்குள் இருப்பவர்கள் தெளிவாகப் பார்த்துக்கொண்டே செல்லலாம். ஆனால், வழக்கத்தைவிட தடிமனான அந்த `A’ பில்லர்கள், யூ டர்ன் மற்றும் கார்னரிங்கின்போது வெளிச்சாலையை மறைக்கின்றன. பயணிகளுக்கான விசாலமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை. முன்பக்கம் இருக்கும் க்ளோவ் பாக்ஸை, கொஞ்சம் பெரிதாகக் கொடுத்திருக்கலாமே, பழைய சான்ட்ரோ ஜிங் காரில் இருப்பதுபோல! கேபினில் ஆங்காங்கே மெட்டல் பாகங்கள் வெளியே தெரிகின்றன. இது கேபினுக்கு Contrast அளித்தாலும், அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. க்விட் போல இங்கே டச் ஸ்க்ரீன் இல்லை என்றாலும், ரெடி-கோவின் விலைக்கு இது ஒரு குறையில்லை.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ் எப்படி?

இன்ஜின் ஆப்ஷன்களில் ரெடி-கோ அப்படியே க்விட்டின் ஜெராக்ஸ்தான். அதில் இருக்கும் அதே 999சிசி, 3 சிலிண்டர் I-SAT இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, போட்டியாளர்களுக்குச் சமமான 68bhp பவர் மற்றும் 9.1kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 800சிசி மாடலைவிட 14bhp கூடுதல் பவர் மற்றும் கிட்டத்தட்ட 2kgm டார்க் கிடைத்திருப்பதால், சிட்டி/நெடுஞ்சாலை என எதுவாக இருந்தாலும், இப்போது நம்பிக்கையோடு, `ரெடி... கோ’ எனச் சீறுகிறது ரெடி-கோ 1.0. மேலும் 800சிசி மாடலைவிட இதன் பவர் டெலிவரி ஸ்மூத்தாக இருப்பதுடன், ரிஃபைன்மென்ட்டிலும் முன்னேற்றம் தெரிகிறது. தவிர, நகரப் பயன்பாடுக்கு ஏற்றபடி ஆரம்பகட்ட வேகத்திலும் திணறாமல் ஸ்கோர் செய்கிறது. இன்ஜின் சத்தத்துடன் வெளிச் சத்தமும் கேபினுக்குள் கேட்பது மைனஸ். கிளட்ச், இப்போது லைட் வெயிட்டாக இருக்கிறது. ஷார்ட் த்ரோக்களைக்கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில், லைட் வெயிட் கிளட்ச்சை அழுத்தி கியர் மாற்றுவது, நல்ல அனுபவமாக இருக்கிறது. 

ஓட்டுதலில் என்ன ஸ்பெஷல்?

சஸ்பென்ஷன் செட்-அப்பில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ஓட்டுதல் தரத்தில், 800சிசி ரெடி-கோவுக்கும் இதற்கும் ஓட்டுதல் தரத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், கரடுமுரடான சாலைகளை இது நன்றாகச் சமாளிக்கிறது. சான்ட்ரோ ஜிங் போன்ற `டால் பாய்' டிசைன் என்பதால், தனது வகையிலேயே ரெடி-கோதான் உயரமான கார். அப்படியென்றால், பாடி ரோல் இருக்கத்தானே செய்யும்? இதனால் திருப்பங்களில் காரை வேகமாகச் செலுத்தும்போது, காரோடு சேர்ந்து நாமும் திரும்ப நேரிட்டது. சிட்டிக்கு ஏற்றபடியான ஸ்டீயரிங் செட்-அப்பைக் கொண்டிருப்பதால், நகரத்தில் ரெடி-கோ 1.0 காரை வளைத்து நெளித்து ஓட்டுவது சுலபம். 222 லிட்டர் பூட் ஸ்பேஸ், இந்த காருக்கு ஓகேதான்.

மோட்டார் விகடன் தீர்ப்பு

200சிசி அதிகமாகியிருந்தாலும், மைலேஜில் அடிபடவில்லை ரெடி-கோ 1.0. லிட்டருக்கு 22.5 கி.மீ (அராய் மைலேஜ்) கிடைக்கும் என்கிறது டட்ஸன். இது ரெடி கோவின் 800 சிசி மாடலைவிட 0.2 கிமீதான் குறைவு! இயான் தவிர்த்து, ஆல்ட்டோ - க்விட் - ரெடிகோ ஆகிய கார்களில் AMT ஆப்ஷன் இருக்கிறது. போட்டியாளர்களைவிட அராய் மைலேஜில் கொஞ்சம் பின்தங்கினாலும், விலை மற்றும் சர்வீஸ் காஸ்ட் விஷயத்தில் ரெடி-கோ 1.0 ஸ்கோர் செய்துவிடுகிறது. எனவே, சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், `நகரத்துக்குள் பயன்படுத்துவதற்காக ஒரு சிறிய கார் வேண்டும்' என்பவர்களுக்கு, இந்த டட்ஸன் நல்ல சாய்ஸ்!