Published:Updated:

இந்த லக்ஸூரி எஸ்யூவிகள் மாருதி பிரெஸ்ஸாவை விட விலை குறைவு!

இந்த லக்ஸூரி எஸ்யூவிகள் மாருதி பிரெஸ்ஸாவை விட விலை குறைவு!
இந்த லக்ஸூரி எஸ்யூவிகள் மாருதி பிரெஸ்ஸாவை விட விலை குறைவு!

ஒரு பக்கம் எஸ்யூவி சந்தை வளர்ந்துகொண்டே போகிறது. மற்றொரு பக்கம் யூஸ்டு கார் சந்தையும் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் எஸ்யூவி எடுக்கப்போகிறேன் என்றால் டாடாவோ மஹிந்திராவோ முதல் தேர்வாக இருக்கும். இப்போது தேர்வுகள் மாறிவிட்டன. போட்டிக் களம் மாறிவிட்டது. மாருதி சுஸூகியின் பிரெஸ்ஸாவும், ஹூண்டாய் க்ரெட்டாவும்தான் இப்போதைய டாப் விற்பனையாளர்கள். பிரெஸ்ஸாவை விட விலை குறைவான ஒரு பிஎம்டபிள்யூ வாங்கமுடிந்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? யோசித்து வையுங்கள், ஏனென்றால் பட்டியலிடப்போகும் இந்த 5 லக்ஸூரி கார்கள், டாப் வேரியன்ட் பிரெஸ்ஸாவை விட விலை குறைவானவை. என்னதான் நல்ல விலை கிடைத்தாலும் லக்ஸூரி காரின் சர்வீஸ் மற்றும் ஸ்பேர் விலைகள் மாருதி அளவுக்கு இருக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

1.  BMW X1 Sdrive 18i

2010-ம் ஆண்டு வெளியான X1 Sdrive 18i விற்பனையை பிஎம்டபிள்யூ 2013-ம் ஆண்டே நிறுத்திவிட்டது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த கார் 7 லட்சம் ரூபாயிலிருந்து 14 லட்சம் ரூபாய் வரை யூஸ்டு கார் சந்தையில் த்ரிஷா போல வலம்வந்துகொண்டிருக்கிறது. இதன் விலை பிரெஸ்ஸாவின் எக்ஸ்ஷோரூம் விலையை விட குறைவு. பிஎம்டபிள்யூ கடந்த மாதம் முதல் X1 காரின் பெட்ரோல் மாடலை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. இப்போது  X1 காரில் வெறும் டீசல் இன்ஜின் மட்டும்தான். 150bhp பவரையும், 200 Nm டார்க்கையும் உருவாக்கக்கூடிய இந்தப் பெட்ரோல் இன்ஜின் கார் சிட்டி டிரைவிங்குக்கு பெஸ்ட். ஏபிஎஸ், 6 காற்றுப் பைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் உட்பட லக்ஸூரி காருக்குத் தேவையான எல்லா பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள் வந்துவிடும். பேரம் பேசத்தெரிந்தவர்கள் என்றால் இன்னும் விலையை குறைத்து குதுகலமாக பிஎம்டபிள்யூவுடன் டிரைவிங் கிளம்பலாம்.

2.  BMW X1 sdrive 20d

'எஸ்யூவினா டீசல் இன்ஜின்தான்' என்பவர்களுக்கு பிஎம்டபிள்யூவின்  X1 sdrive 20d கிடைக்கிறது. தற்போதும் விற்பனையில் இருக்கும் இந்தக் காரின் 2011-2013 மாடல்கள் யூஸ்டு கார் சந்தையில் 8.5 லட்சம் ரூபாயிலிருந்து 17 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. 177 bhp பவர் மற்றும் 350 Nm டார்க் உருவாக்கும் 2.0 லிட்டர் இன்ஜின் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கூட்டணி சாலை, சாலையே இல்லாத சோலை இரண்டுக்கும் செட்டாகும். ஏபிஎஸ், 6 காற்றுப் பை, ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் என பிரெஸ்ஸாவில் இருக்கும் பல வசதிகளும் அதைவிட சிறப்பான பாதுகாப்பும் கிடைக்கிறது.

3. ஆடி Q7 

2008 முதல் 2011 வரை விற்பனையான ஆடி Q7 கார்கள் இப்போது யூஸ்டு கார் சந்தையில் 9 லட்சத்தில் ஆரம்பித்து 18 லட்சம் வரை கிடைக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறைவான கார்கள் என்றால் நிச்சயம் அதன் விலை அதிகபட்சம் 70 லட்சம் வரை வரும். 237bhp பவர் மற்றும் 550Nm டார்க் தரக்கூடிய 7 சீட்டர் எஸ்யூவியான இது ஆடியின் குவாட்ராட்டோ (4 வீல் டிரைவ்) தொழில்நுட்பத்துடன் வருகிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்ற வசதிகள் இல்லையென்றாலும் பாதுகாப்பை பொறுத்தவரை காற்றுப்பை, ஏபிஎஸ், EBD என யூரோ Ncap டெஸ்டில் 4 ஸ்டார் வாங்கியுள்ளது ஆடி Q7.

4. நிஸான் X-Trial

நிஸானில் இப்படி ஒரு கார் இருக்கிறது என்றே பல பேருக்கு தெரியாது. ஆனால், ஜிடிஆர் போல பலரையும் கவர்ந்த லக்ஸூரி எஸ்யூவிதான் இந்த எக்ஸ் டிரையல். இறக்குமதி முறையில் மட்டுமே விற்பனையான எக்ஸ் டிரையல் விரைவில் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. பிஎம்டபிள்யூ, ஆடி போல யூஸ்டு கார் சந்தையில் இந்தக் காருக்கு பெரிய டிமாண்டு கிடையாது என்பதால் இதன் விலை மிகவும் குறைவு. எக்ஸ் டிரையல் கிடைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை இந்தியாவில் விற்பனையில் இருந்த இரண்டாம் தலைமுறை எக்ஸ்டிரையல் காரை 8 லட்சம் ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய்க்கு வாங்கிவிடலாம். 148bhp பவர் மற்றும் 320 Nm டார்க் தரக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட இந்த 7 சீட்டர் காரில் டூர் என்றவுடன் கூட்டாளிகளை அல்லிப் போட்டுக் கொண்டுபோக எக்கச்சக்க இடம் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் மற்றும் நிஸானின் உலகத்தரம் ஹேண்ட்லிங் மற்றும் ரைடு குவாலிட்டிக்கு உத்தரவாதம் கொடுக்கும். 6 காற்றுப் பைகள், ஏபிஎஸ், ஈபிடி, பிரேக் அசிஸ்டன்ட், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் எனப் பாதுகாப்புக்கும் பஞ்சமில்லை. 

5. வால்வோ XC90

வால்வோ கார்களிலேயே விலை உயர்ந்தது  XC90. இந்தக் காரின் தற்போதைய ஆன்ரோடு விலை 1 கோடி. ஆனால், 2007 முதல் 2010 வரை வந்த இதே கார் 8.5 லட்சம் முதல் 18 லட்சம் வரை கிடைக்கிறது. 4.4 லிட்டர்  V8 இன்ஜின் கொண்ட இந்த கார் 311bhp பவரும் 440Nm டார்க்கும் தரக்கூடியது. காரின் டிசைன் இப்போது கொஞ்சம் அவுட் ஆஃப் டிரெண்டுதான். ஆனால், இதன் பெர்ஃபார்மன்ஸை புதிய பேபி வால்வோ கூட தரமுடியாது. பாதுகாப்பு என்றால் வால்வோதான் பெஸ்ட் என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை. பெரிய இடவசதி, சொகுசான சீட்டுகள், ஸ்மூத்தான ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ், அதிக பவர் கொண்ட இன்ஜின் என யூஸ்டு கார் சந்தையின் பொக்கிஷமான இது டிசைனில் 100-க்கு 35 மார்க் வாங்கினாலும் ஓட்டுதல் தரத்தில் 90 மார்க்.