Published:Updated:

ஸ்மூத் டீசல் இன்ஜின், 7 சீட் கேபின்... இதெல்லாம் போதுமா?! #ஹோண்டாCR-V ரிப்போர்ட்

ஸ்மூத் டீசல் இன்ஜின், 7 சீட் கேபின்...  இதெல்லாம் போதுமா?! #ஹோண்டாCR-V ரிப்போர்ட்
ஸ்மூத் டீசல் இன்ஜின், 7 சீட் கேபின்... இதெல்லாம் போதுமா?! #ஹோண்டாCR-V ரிப்போர்ட்

மஹிந்திரா XUV-யில் பெட்ரோல் வந்துவிட்டது என்றால், ஹோண்டா CR-Vயில் டீசல் வந்துவிட்டது. `CR-V எஸ்யூவி காரில் டீசல் கொண்டுவந்தால்தான் என்ன?’ என்று மக்கள் புலம்பியது, ஹோண்டாவின் காதில் கேட்டுவிட்டதோ என்னவோ. CR-V-ல் டீசல் வேரியன்ட்டை இறக்கிவிட்டது ஹோண்டா. இதுமட்டுமல்ல, ஹோண்டாவுக்கு எக்ஸ்ட்ரா குடோஸ் கொடுக்கலாம். காரணம், மூன்றாவது வரிசை சீட்டோடு 7 சீட்டராக வந்துவிட்டது. அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் இந்த 5-ம் தலைமுறை CR-Vயில் ஒரு ஷார்ட் டிரைவ்.

வெளியே

பார்த்தவுடன் சொல்லிவிடலாம். பழசைவிட புதுசு கொஞ்சம் நீளம். 4,571 மிமீ நீளத்தில் உள்ளது புது CR-V. டைமண்ட் கட் அலாய் வீல்கள் செம ஸ்டைலிஷ். பின்பக்கம் அதே மொழுக் டிசைன். சிங்கிள் க்ரோம் தடிமனான கிரில், LED ஹெட்லாம்ப்ஸ், `L' வடிவ டெயில் லைட்ஸ், சின்ன ஸ்பாய்லர், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் என லுக்கில் பல மாற்றங்கள். சொல்லப்போனால்,  மொத்தமாக மாறிவிட்டது CR-V. ஆனால், ஃபார்ச்சூனர், எண்டேவர்போல `வாவ்’ டிசைன் இல்லை.

உள்ளே

ஏற்கெனவே CR-Vயின் இன்டீரியர் ப்ரீமியம்தான். தரம், டேஷ்போர்டின் டிசைன், ஃபிட் அண்ட் ஃபினிஷ் எல்லாமே இப்போது இன்னும் ப்ரீமியம் லெவலுக்கு மாறிவிட்டது. ஃபுல் பிளாக் தீம் இன்டீரியரில் லெதர் ஃபினிஷ் செம கிளாஸி. பியானோ பிளாக் டேஷ்போர்டின் தரம் மற்றும் மர வேலைப்பாடுகள் உள்பக்கத்தை மெருகூட்டுகின்றன.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் எல்லாமே டிஜிட்டல் மயம். செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீனை வைத்து இன்னும் ரிச்சாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இரண்டும் ஸ்டாண்டர்டு ஆப்ஷன்ஸ். டீசல் CR-V-யில் கியர் லீவரே கிடையாது. பட்டன் கியர் செலெக்டர் கொடுத்துள்ளார்கள். சில கார்களில் கியர் லீவரே பாதி இடத்தை அடைக்கும். CR-Vயில் அது இல்லை என்பதால் ஏகப்பட்ட இடவசதி இருக்கிறது. பெரிய இரண்டு கப் ஹோல்டர்கள், ஸ்டோரேஜ் பாக்ஸ்கள், கப்பிஹோல்கள், யூஎஸ்பி போர்டு என மூன்று வரிசை சீட்டிலுமே பிராக்டிக்கலாக இருப்பது... வாவ்!

CR-Vயில் கெத்துக்காட்டுகிறது சொகுசான சீட். குஷனிங் சூப்பர். உயரமான கார் என்பதாலோ என்னவோ, சீட்டில் உட்கார்ந்து பார்த்தால் வெளிச்சாலை வியூ பிரமாண்டமாகத் தெரிகிறது. பின்பக்க சீட்கள் கொஞ்சம் குள்ளம்தான். ஆனால், புஷ்பேக்கைப் பயன்படுத்தினால் வால்வோ பஸ்கள்போல சொகுசு. காரணம், லெக்ரூம் தாராளம். சீட் ரெக்லைனிங்கும், தொடை சப்போர்ட்டும்கூட சொகுசுகார் ரகம்.

மூன்றாவது சீட் வரிசைதானே இங்கே புதுவரவு. மூன்றாம் வரிசை சீட்டில் இடவசதி வழக்கம்போல் ஒகே ரகம்தான். உள்ளே போய் வெளியே வருவது, பெரிய சாதனையாகத்தான் இருக்கிறது. ஸ்ட்ராப்பை இழுத்து, சீட்டை மடித்து, அப்புறம் மூன்றாவது வரிசைக்குப் போவது கொஞ்சம் காம்ப்ளிகேட்டடாகவே இருக்கிறது. மராஸோபோல ஒரே டச் கொண்டுவந்திருந்தால் கைதட்டல்களை அள்ளியிருக்கலாம். பெரியவர்களுக்கு லெக்ரூம் சுமார்தான். நீண்டதூரப் பயணங்களுக்கு பெரியவர்கள் நோ சொல்லிவிடுவதுதான் பெஸ்ட். கடைசி வரிசை சீட்களை தரையோடு தரையாகப் படுக்கவைக்க முடியவில்லை. இதனால் லக்கேஜ் இடவசதி மற்ற கார்களைவிட குறைவு. 150 லிட்டர்தான் பூட் ஸ்பேஸ்.

டிரைவிங்

ஒரு சந்தோஷமான விஷயம், ஒரு சாதாரணமான விஷயம். முதலில் சந்தோஷமான விஷயம். 1.6 லிட்டர் டீசலில் 160bhp பவர்கொண்ட ட்வின் டர்போ இன்ஜின். எத்தனை கிலோ எடையையும் விருட்டென இழுக்கும் சக்திகொண்டது. ஃபன் டு டிரைவ் பிரியர்கள், CR-Vயை வைத்து விளையாடலாம். வருத்தமான விஷயம், நாம் ஓட்டியது 120bhpகொண்ட சிங்கிள் டர்போ இன்ஜின்தான். நம் இந்தியாவுக்கு வரப்போவதும் இதுதான். இது 160bhp-யைவிட கிட்டத்தட்ட 1.5 லட்சம் ரூபாய் விலை குறைவு. பரவாயில்லை, பர்ஃபாமென்ஸில் சளைக்கவில்லை. ட்வின் டர்போவில் 35 kgm என்றால், இதில் 5kgmதான் குறைவு. அதாவது, 30kgm டார்க் தருகிறது இந்த இன்ஜின். ஸ்டார்ட்செய்து ஆக்ஸிலரேட்டர் மிதித்த 11.2 விநாடியில் 100 கி.மீ-யைக் கடந்திருந்தது. இதுவே ட்வின் டர்போ என்றால், 9.7 விநாடி என்று க்ளெய்ம் செய்கிறது ஹோண்டா.

இதன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில், டால் கியரிங் செட்-அப் கொடுத்திருக்கிறார்கள். 2000rpm கடந்த பிறகு, பேடில் ஷிஃப்டர்கள் தேவைப்படுகிறது. ஐடிலிங்கில் டீசல் இன்ஜினின் கரபுர சவுண்டு இருந்தாலும், டிரைவிங்கின்போது இன்ஜின் செம ஸ்மூத். முக்காத டிரைவிங்குக்கு ஏற்றபடி நன்றாக ட்யூன் செய்யப்பட்டிருந்தது கியர்பாக்ஸ். பேடில் ஷிஃப்டரும் இருந்தது. எஸ்யூவி-களில் டர்போ லேக்தான் படுத்தியெடுக்கும். CR-V த்ராட்டில் கொடுத்ததும் ஜாலியாகச் செல்கிறது. CR-V, ஃபன் டு டிரைவுக்கு கேரன்ட்டி. 

சில கார்களில் தரையில் படும்படி த்ராட்டிலில் ஏறி நிற்க வேண்டும். பாதி த்ராட்டிலிங்கிலேயே நம் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பறக்கிறது CR-V. பவர் டெலிவரி ஸ்மூத் அண்ட் லீனியர். பர்ஃபாமென்ஸும் அருமை. ஆத்திர அவசரத்துக்கு ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டலாம். சாதாரண நேரத்தில் எக்கோ மோடே போதுமான பர்ஃபார்மென்ஸைத் தருகிறது. மிட்ரேஞ்சில் பவரை அள்ளித்தருகிறது, டாப் எண்டில் பவர் இல்லாமல் திணறுகிறது. டாப் எண்ட் பிரியர்களுக்கு, இது மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால், ஹைஸ்பீடில் ஓவர்டேக்கிங்குக்குப் பெரிதாகப் பாடுபடவில்லை. ஈஸியாகவே இருந்தது.

ஹேண்ட்லிங்

சிட்டிக்குள் இவ்வளவு பெரிய காரை ஓட்ட கஷ்டமாகவே இல்லை. காரணம், இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங் சட் சட் என ரியாக்ட் ஆவதுதான். பிரேக்ஸும் நச். ஸ்டார்ட்-ஸ்டாப் டிராஃபிக்கில் தன்னம்பிக்கையாக இருக்கிறது. ரைடு குவாலிட்டியும் பழைய CR-Vயைவிட அதிகரித்திருக்கிறது. மோசமான பள்ளங்களை ஈஸியாகச் சமாளிக்கிறது சஸ்பென்ஷன். இதன் 198 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸும் சூப்பர். மொத்தமாக கம்ஃபெர்ட் லெவல் அதிகரித்திருக்கிறது. உயரமான கார் என்றதும், ஹைஸ்பீடு ஸ்டெபிலிட்டியை நினைத்து பயந்தேன். ஆனால், பயந்த அளவு இல்லை. நீளமான வீல்பேஸ், அகலமான டிசைன், பெரிய வீல்கள் நம்மை ரிலாக்ஸாகவே வைத்துக்கொள்கின்றன. டைட் கார்னரிங்கில் மட்டும் லேசான பாடிரோல் தெரிந்தது.

தீர்ப்பு

CR-Vயில் எல்லாமே மாறிவிட்டன. 7 சீட்டர், புதிய டீசல் இன்ஜின், பல்க்கான தோற்றம், அகலமான ப்ரீமியம் கேபின் என்று எஸ்யூவி பிரியர்களுக்கு இது ஓகேதான். சிட்டி டிரைவிங் அற்புதம். ஆனால், இதன் டாப் எண்ட் பர்ஃபாமென்ஸில் இருக்கும் பவர் குறைபாடு, வேகப் பிரியர்களை எந்தளவு ஈர்க்கும் எனத் தெரியவில்லை. 30 bhp எக்ஸ்ட்ராவாகக் கொடுத்திருக்கலாம். மேலும், 30 லட்சம் ரூபாய் விலைக்கு வருவதால், ஃபார்ச்சூனர், எண்டேவருடன் மோத வேண்டும் என்பதை நினைவில்கொண்டு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் ஹோண்டா!