Published:Updated:

இசுஸூ D-Max V-Cross பேஸ்லிஃப்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?!

ராகுல் சிவகுரு

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, இசுஸூவின் தாய் சந்தையான ஜப்பான், தாய்லாந்து, சீனா ஆகியவற்றில் உள்ள D-Max V-Cross காரின் பேஸ்லிஃப்ட் மாடல் போலவே இருக்கிறது.

இசுஸூ D-Max V-Cross பேஸ்லிஃப்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?!
இசுஸூ D-Max V-Cross பேஸ்லிஃப்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?!

டந்த 2016-ம் ஆண்டில் அறிமுகமான இசுஸூவின் D-Max V-Cross லைஃப் ஸ்டைல் பிக்-அப், இந்திய ஆஃப் ரோடிங் ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பது தெரிந்ததே. ஆனால், இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு கமர்ஷியல் லைசென்ஸ் அவசியம் என்பதால், அனைவராலும் பயன்படுத்த முடியாத காராக இருக்கிறது.

இந்திய கார் சந்தை ஆட்டோமேட்டிக் கார்களை நோக்கி மெள்ள நகர்ந்து வருகிறது. அதற்கேற்ப காம்பேக்ட் கார்களில் AMT மற்றும் மிட் சைஸ் கார்களில் CVT/டார்க் கன்வர்ட்டர் என வகைவகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன்கூடிய கார்களைத் தற்போது காண முடிகிறது. எனவே, எக்ஸிக்யூட்டிவ் செக்மென்ட்டைச் சேர்ந்த D-Max V-Cross காரிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைச் சேர்க்கும் முடிவில் இருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான இசுஸூ. 

ஏன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டும்?

ஆஃப் ரோடிங் செல்லும்போது, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களை கன்ட்ரோல் செய்வது எளிதாக இருக்கும்; தவிர இந்த வகைக் கார்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் மேனுவல் கியர்பாக்ஸ் இருப்பதையே விரும்புவர். என்றாலும், கால ஓட்டத்துக்கு ஏற்ப ஈடு கொடுக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு ஆப்ஷனாகவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் என நம்பலாம். D-Max V-Cross தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில் தயாராகும் MU-X எஸ்யூவியில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதால், அதே செட்-அப் இங்கே இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதில் Sequential Shift & Brake Shift Lock, 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பது கூடுதல் ப்ளஸ்.

டெஸ்ட்டிங்கில் பேஸ்லிஃப்ட் மாடல்.... என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பொங்கல் பரிசாக மேம்படுத்தப்பட்ட D-Max V-Cross காரை 6 வண்ணங்கள் - 2 வேரியன்ட்களில் களமிறக்கியது இசுஸூ. LED DRL, LED டெயில் லைட், புதிய டெயில் கேட், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய பின்பக்க பம்பர், Side Step என வெளித்தோற்றத்தில் சிறிய மாறுதல்கள் இருந்தன. உள்ளே கறுப்பு நிற லெதர் சீட்ஸ், 6 Way எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், 2 Din டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் எனப் புதிய வசதிகள் இடம்பெற்றிருந்தன. பயணிகள் பாதுகாப்புக்கு டிராக்‌ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. கடந்த மாதத்தில் D-Max V-Cross காரின் விலையை, 50 ஆயிரம் ரூபாய் வரை இசுஸூ அதிகரித்த நிலையில், பேஸ்லிஃப்ட் மாடல் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

இது சேலம் பை-பாஸ் நெடுஞ்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகியான வித்யா முருகேசன். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, இசுஸூவின் தாய் சந்தையான ஜப்பான், தாய்லாந்து, சீனா ஆகியவற்றில் உள்ள D-Max V-Cross காரின் பேஸ்லிஃப்ட் மாடல் போலவே இருக்கிறது. எனவே, இந்திய மாடலிலும் புதிய க்ரோம் கிரில், LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், புதிய பம்பர்கள், புதிய பானெட் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புற மாற்றங்களாக இருக்கும். கேபினைப் பொறுத்தமட்டில், ரூஃப் ஸ்பீக்கர்களுடன் கூடிய 8 இன்ச் Connect World டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - கறுப்பு நிற டேஷ்போர்டு - MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை புதியவையாக இருக்கலாம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் மாற்றம் இருக்குமா?

இந்திய மாடலில் 136bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் - 4WD கூட்டணி இருக்கிறது. ஆனால், சர்வதேச மாடலில் இருக்கும் புதிய 1.9 லிட்டர், 4 சீலிண்டர் Ddi Blue Power டர்போ டீசல் இன்ஜின் - 147bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது அளவில் 600சிசி சிறிதாக இருந்தாலும், அதைவிட 10% கூடுதல் பவர் - 9% கூடுதல் டார்க் - 20% குறைவான எடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. எனவே, இது முந்தைய மாடலைவிட அதிக பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜை வழங்கலாம். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த இன்ஜின் இங்கே பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. டாடா ஸெனான் மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ GetaWay ஆகிய பிக்-அப் உடன் போட்டிபோடுகிறது இசுஸு D-Max V-Cross. இந்தியாவில் MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் இந்த ஆண்டின் இறுதியில் வரவுள்ள நிலையில், இது இசுஸூவின் இந்தியாவுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கலாம்.