Published:Updated:

கிராண்டே, XM+, லிமிடெட் ப்ளஸ்... ஸ்கூட்டர்/எஸ்யூவிகளின் புதிய வேரியன்ட்கள்!

கடந்த ஆண்டில் வெளியான காம்பஸ், எஸ்யூவி பிரியர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருப்பது தெரிந்ததே. ஆனால், இதில் சில வசதிகள் மிஸ் ஆவதை அதன் உரிமையாளர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

கிராண்டே, XM+, லிமிடெட் ப்ளஸ்... ஸ்கூட்டர்/எஸ்யூவிகளின் புதிய வேரியன்ட்கள்!
கிராண்டே, XM+, லிமிடெட் ப்ளஸ்... ஸ்கூட்டர்/எஸ்யூவிகளின் புதிய வேரியன்ட்கள்!

ண்டிகை காலத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத் தயாரிப்பாளர்கள், தமது புதிய தயாரிப்புகளைக் களமிறக்குவது, ஒவ்வொரு வருடமும் வாடிக்கைதான். இதில் புதிய மாடல்கள், பேஸ்லிஃப்ட், ஸ்பெஷல்/லிமிடெட் எடிஷன்கள் ஆகியவை அடக்கம். அதற்கேற்ப இந்த மாதத்தில் ஆஸ்பயர் மற்றும் டிகோர் பேஸ்லிஃப்ட், மோட்டோ ராயல் சார்பில் 7 ப்ரீமியம் பைக்குகள், கோ மற்றும் கோ ப்ளஸ் பேஸ்லிஃப்ட், சான்ட்ரோ என வரிசைகட்டி வந்திருக்கின்றன. இவற்றைத் தவிர்த்து, தமது தயாரிப்புகளில் புதிய வேரியன்ட்களை சிலர் (டிவிஎஸ், ஜீப், டாடா மோட்டார்ஸ்) அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றித் தற்போது பார்ப்போம். இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை. 

டிவிஎஸ் ஜூபிட்டர் கிராண்டே

தற்போது விற்பனையில் இருக்கும் கிளாசிக் எடிஷனைத் தொடர்ந்து, ஜூபிட்டரில் மற்றுமொரு வேரியன்ட்டை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டிவிஎஸ். `கிராண்டே' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, டிரம் பிரேக் (55,936 ரூபாய்) மற்றும் டிஸ்க் பிரேக் (59,648 ரூபாய்) ஆப்ஷனுடன் கிடைக்கிறது. டிசைன் ரீதியாக எந்த மாற்றமும் இதில் இல்லை. External பெட்ரோல் டேங்க் மூடி, மொபைல் சார்ஜர், பார்க்கிங் பிரேக், பாஸ் லைட் ஸ்விட்ச் என வசதிகளில் வித்தியாசமில்லை. ஆனால், ஸ்கூட்டரை உற்றுநோக்கும்போது Starlight Blue கலர் ஆப்ஷன், LED ஹெட்லைட்ஸ், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டயமண்ட் கட் அலாய் வீல்கள், Quilted லெதர் போன்ற சீட்கவர் ஆகிய புதிய அம்சங்கள் தெரிகின்றன. ஒரே மெக்கானிக்கல் மாற்றம், பின்பக்கத்தில் இருக்கும் மோனோஷாக் சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பதுதான். ஆக்டிவா 5G, மேஸ்ட்ரோ எட்ஜ், ரே-Z ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டிபோடும் இந்த ஸ்கூட்டரில் இருப்பது, 8bhp பவர் மற்றும் 0.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - CVT கியர்பாக்ஸ் கூட்டணி.

டாடா ஹெக்ஸா XM+

நெக்ஸாவின் டாப் XT வேரியன்ட்டுக்கு முன்பாக, XM+ எனும் புதிய வேரியன்ட்டைச் சேர்த்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். 15.27 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் இதை XM வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது, 16 இன்ச் அலாய் வீல்கள் - தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்கால்  ஆன டேஷ்போர்டு - லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனிவிளக்குகள், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ரெயின் ரென்ஸிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கக்கடிய ரியர்வியூ மிரர்கள், 8 கலர் ஆம்பியன்ட் கேபின் லைட்டிங் போன்ற வசதிகள், காரில் கூடுதலாக இடம்பிடித்துள்ளன.

கிட்டத்தட்ட இதே வசதிகளுடன் கிடைக்கும் மஹிந்திரா XUV 500 W9 வேரியன்ட்டின் விலை 15.47 லட்சம் ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. ஹெக்ஸாவில் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, 156bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும், தற்போது டாடா டீலர்களில் 2 வருட வாரன்ட்டியுடன்கூடிய சன்ரூஃப் கிடைக்கிறது. இதை விருப்பமுள்ளவர்கள், தங்கள் ஹெக்ஸாவில் பொருத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜீப் காம்பஸ் லிமிடெட் ப்ளஸ்

கடந்த ஆண்டில் வெளியான காம்பஸ், எஸ்யூவி பிரியர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருப்பது தெரிந்ததே. ஆனால், இதில் சில வசதிகள் மிஸ்ஸாவதால் அதன் உரிமையாளர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். இதைக் கவனித்த ஜீப் நிறுவனம், அதற்கு வழங்கியிருக்கும் தீர்வுதான் லிமிடெட் ப்ளஸ் எனும் டாப் வேரியன்ட். 4X2 லிமிடெட் ப்ளஸ் டீசல் - மேனுவல்: 20.07 லட்சம் ரூபாய்; 4X2 லிமிடெட் ப்ளஸ் பெட்ரோல் - ஆட்டோமேட்டிக்: 21.41 லட்சம் ரூபாய்; 4X4 லிமிடெட் ப்ளஸ் டீசல் - மேனுவல்: 22.85 லட்சம் ரூபாய் விலைகளில் கிடைக்கும் இந்தப் புதிய டாப் வேரியன்ட், வழக்கமான லிமிடெட் (O) வேரியன்ட்டைவிட 1 லட்சம் ரூபாய் விலை அதிகம். அதற்கு 18 இன்ச் க்ரோம் அலாய் வீல்கள், லிமிடெட் ப்ளஸ் பேட்ஜிங்தான் வெளியே இருக்கும் மாற்றங்கள்; சீட் மெமரி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் சீட், ஆட்டோமேட்டிக்  Bi-Xenon HID ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள், எலெக்ட்ரானிக் ஆட்டோ Dimming Inner ரியர் வியூ மிரர், 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், Side & Curtain காற்றுப்பைகள் என புதிய வசதிகளின் பட்டியல் நீள்கிறது. 163bhp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 173bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் என, இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. இதில் டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் மேனுவல் செட்டப் கிடையாது.

டிவிஎஸ் வீகோ

53,207 ரூபாய்க்கு, வீகோவின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். புதிய ஸ்போர்ட்டியான கிராஃபிக்ஸ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் (சிவப்பு, நீலம், கிரே, கறுப்பு), ஸ்போர்ட்டியான சீட் கவர் மற்றும் ரிம் ஸ்டிக்கர், 20 லிட்டர் Utility Box, பாஸ் லைட் ஸ்விட்ச், MF பேட்டரி ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி Body Balance தொழில்நுட்பம், மெட்டல் பாடி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், Sync பிரேக்ஸ், 110சிசி இன்ஜின், 12 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - கேஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப், LED டெயில் லைட், External பெட்ரோல் டேங்க் மூடி ஆகிய அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.