Published:Updated:

முடிவுக்கு வரும் முப்பது ஆண்டுகால சகாப்தம்... விடைபெறும் மாருதி ஆம்னி

மு.ராஜேஷ்
முடிவுக்கு வரும் முப்பது ஆண்டுகால சகாப்தம்... விடைபெறும் மாருதி ஆம்னி
முடிவுக்கு வரும் முப்பது ஆண்டுகால சகாப்தம்... விடைபெறும் மாருதி ஆம்னி

இந்திய வாகனச் சந்தையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்த மாருதி ஆம்னியின் தயாரிப்பு கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 1984-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இது பல வருடங்களாகப் பிரபலமான வாகனமாக இருந்து வருகிறது. கால் டாக்ஸி, சரக்கு வாகனம், குடும்பத்திற்கான வாகனம் என மாருதி ஆம்னி பல வகைகளில் உருமாற்றம் அடைந்து சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 2020-ம் ஆண்டிலிருந்து இதன் தயாரிப்பை நிறுத்தும் முடிவை தற்பொழுது எடுத்திருக்கிறது மாருதி சுசுகி நிறுவனம். வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தர மதிப்பீடுகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. அவற்றை மாருதி ஆம்னி பூர்த்தி செய்ய இயலாது என்பதால் இந்த முடிவுக்கு மாருதி சுசுகி நிறுவனம் வந்திருக்கிறது.

அறிமுகமானதிலிருந்து இன்று வரை அதே 800 cc இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதன் வெளித்தோற்றத்திலும் பெரிதாக மாறுதல்கள் செய்யப்படவில்லை. எனவே பல வருடங்களுக்குத் தனித்தன்மையோடு இருந்தது. இன்றைக்கும் கூட இதற்குச் சந்தையில் வரவேற்பு இருக்கிறது, கணிசமான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. திடீரென இந்தத் தகவல் வெளியானதால் சமூக வலைதளங்களில் பலர் மாருதி ஆம்னி தொடர்பான நாஸ்டால்ஜிக் நினைவுகளை பகிந்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்னால் திரைப்படங்களில் மாருதி ஆம்னியை அதிகமாகப் பார்க்க முடியும். இப்பொழுது எப்படி டாடா சுமோ, ஸ்கார்பியோ கார்களோ அதைப் போல பல வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்தில் இருந்தது மாருதி ஆம்னிதான். திரைப்படங்களில் மாருதி ஆம்னியின் பங்கு அதிகமாகவே இருந்தது. கோலிவுட்டாக இருந்தாலும் சரி பாலிவுட்டாக இருந்தாலும் சரி யாரையாவது கடத்த வேண்டும் என்றால் அதற்குப் பயன்படுத்தப்படும் வாகனம் மாருதி ஆம்னியாகத்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருந்ததது. படத்தைப் பார்த்து விட்டு ஆம்னியை நேரில் பார்க்கும் போது எங்கே நம்மையும் கடத்தி விடுவார்களோ என்று பயந்த 80'ஸ், 90' ஸ் கிட்ஸ்களுக்கு மாருதி ஆம்னி எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.