Published:Updated:

டெஸ்ட்டிங்கில் கியா பிக்கான்ட்டோ... என்னவெல்லாம் ஸ்பெஷல்?! #KiaInIndia

உலக சந்தைகளில் வழக்கமான பிக்கான்ட்டோ மற்றும் அதன் க்ராஸ்ஓவர் வெர்ஷனான X-Line விற்பனை செய்யப்படுவதுபோல, இந்தியாவிலும் அது தொடரும் என நம்பலாம்.

டெஸ்ட்டிங்கில் கியா பிக்கான்ட்டோ... என்னவெல்லாம் ஸ்பெஷல்?! #KiaInIndia
டெஸ்ட்டிங்கில் கியா பிக்கான்ட்டோ... என்னவெல்லாம் ஸ்பெஷல்?! #KiaInIndia

கியா மோட்டார்ஸ்... அடுத்த ஆண்டில் இந்தியாவில் தனது முதல் காரை, இந்த கொரிய நிறுவனம் களமிறக்க உள்ளது. தற்போது இவர்களுக்கு ஒரு விநோதமான பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, SP கான்செப்ட் எஸ்யூவி (க்ரெட்டாவை அடிப்படையாகக் கொண்ட மாடல்) அல்லது 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி (கார்லினோவை அடிப்படையாகக் கொண்ட மாடல்) ஆகியவற்றில் எதை முதலில் இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்பதுதான் அந்தச் சிக்கல்.

ஏனெனில், சர்வதேசச் சந்தைகளில் 16-க்கும் அதிகமான மாடல்களை விற்பனை செய்தாலும், அதில் Stonic க்ராஸ்ஓவர் மற்றும் Grand Carnival எம்பிவி ஆகியவை இந்தியாவில் முதற்கட்டமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கியாவின் சிறிய சைஸ் காரான பிக்கான்ட்டோ, இந்தியாவில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரியவந்திருக்கிறது. பெங்களூருவில் இதனைப் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான ராஜ்குமார். i10 காரை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்த ஹேட்ச்பேக்கில் அப்படி என்ன ஸ்பெஷல்?

காரின் சைஸில் என்ன வித்தியாசம்?

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கியாவின் ஸ்டாலில் காட்சிப்படுத்தப்பட்டது, மூன்றாம் தலைமுறை பிக்கான்ட்டோ. உலக சந்தையில் விற்பனையில் இருக்கும் i10 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கார், இந்தியாவில் இருக்கும் கிராண்ட் i10 காரைவிட சிறிதாக இருக்கிறது. அதாவது, (3,595மிமீ நீளம்/1,485மிமீ அகலம்/1,595மிமீ உயரம்/2,400மிமீ வீல்பேஸ்) அளவுகளில் இருக்கும் பிக்கான்ட்டோ, கிராண்ட் i10 காரைவிட 170மிமீ நீளம்/175மிமீ அகலம்/25மிமீ வீல்பேஸ் ஆகியவற்றில் குறைந்திருக்கிறது. என்றாலும், உயரத்தில் 75மிமீ அதிகமாக இருப்பதால், இடவசதியில் பெரிதாக மாற்றமில்லாமல் இருக்கலாம். பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இரண்டு கார்களும் ஏறக்குறையச் சமமாகவே இருக்கின்றன (255 லிட்டர்). 

க்ராஸ்ஓவர் வெர்ஷனும் இருக்கிறதா?

சர்வதேசச் சந்தைகளைப் போலவே, இந்தியாவிலும் க்ராஸ்ஓவர் கார்களின்மீதான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாருதி சுஸூகி செலெரியோ எக்ஸ் - ஃபோர்டு ஃப்ரிஸ்டைல் -  டாடா டியாகோ NRG ஆகியவற்றை, இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். எனவே, உலக சந்தைகளில் வழக்கமான பிக்கான்ட்டோ மற்றும் அதன் க்ராஸ்ஓவர் வெர்ஷனான X-Line விற்பனை செய்யப்படுவதுபோல, இந்தியாவிலும் அது தொடரும் என நம்பலாம். வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, X-Line மாடலில் மெட்டல் Skid Plate உடனான பம்பர்கள், பாடி க்ளாடிங், சில்வர்/பச்சை வேலைப்பாடுகளுடன் கூடிய கிரில் - பனி விளக்குகள் எனக் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. மற்றபடி கிரவுண்ட் கிளியரன்ஸ், காரின் அளவுகள் என டெக்னிக்கலாகக் காரில் எந்த மாற்றமும் இல்லை. 

என்னென்ன பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்?

சர்வதேச பிக்கான்ட்டோ மாடலில், 67bhp/9.6kgm வெளிப்படுத்தும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 99bhp பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் - 84bhp பவரை வெளிப்படுத்தும் 1.25 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் போன்ற ஆப்ஷன்கள் இருக்கின்றன. 3 சிலிண்டர் இன்ஜின்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் என்றால், 4 சிலிண்டர் இன்ஜின்களுக்கு 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கிராண்ட் i10 காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் பொருத்தப்படலாம்.

பிக்கான்ட்டோவுக்கு யார் போட்டி? எப்போது கார் விற்பனைக்கு வரும்?

இந்த கியா காரின் சைஸ் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களை வைத்துப் பார்க்கும்போது, டாடா டியாகோ முதல் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் வரையிலான பல மாடல்கள் இதற்குப் போட்டியாக இருக்கலாம். கியாவின் பிரிமியன் பொசிஷனிங்கை வைத்துப் பார்க்கும்போது, பிக்கான்ட்டோவில் எக்கச்சக்க வசதிகள் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராட்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், 6 காற்றுப்பைகள், AEB, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பாடி கிட், அலாய் வீல்கள், Personalisation பேக்கேஜ், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், இண்டிகேட்டர்களுடன் கூடிய எலெக்ட்ரிக் மிரர்கள், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல்) இருக்கும் என நம்பலாம். இதனால் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இந்த காரின் விலையும் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். எனவே, முதலில் இந்த காரை கியா இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறைவுதான். எனவே சர்வதேச சந்தையைப் போலவே, முதலில் தனது பிரிமியம் செடான் அல்லது மிட்சைஸ் எஸ்யூவியை அந்த நிறுவனம் இங்கே அறிமுகப்படுத்தலாம்.