Published:Updated:

கராஜில் தரை துடைத்தவர் இப்போது லம்போகினியின் முதன்மை டெஸ்ட் டிரைவர்!

கராஜில் தரை துடைத்தவர் இப்போது லம்போகினியின் முதன்மை டெஸ்ட் டிரைவர்!
கராஜில் தரை துடைத்தவர் இப்போது லம்போகினியின் முதன்மை டெஸ்ட் டிரைவர்!

ஆட்டாமொபைல், மெக்கானிக்கல், டிசைன் மாணவர்களிடம் யார் உங்களுடைய இன்ஸ்பிரேஷன் என கேட்டால் ஃபெரூசியோ லம்போகினி பெயரைத்தான் அதிகமாகச் சொல்வார்கள். ஆனால், லம்போகினியிலேயே இன்னொருவர் இருக்கிறார். அவரைச் சுற்றிய ஒரு குறுகிய வட்டத்துக்கு அவர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் மனிதர். 

சூப்பர்ஸ்டார் உலாவும் துறையில் லாலேட்டனாக வலம் வந்தவர் வாலன்டினோ பால்போனி. 40 ஆண்டுகள் லம்போகியின் மிக முக்கியமான டெஸ்ட் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். 2,000 கார்களை கடக்காத லம்போகினியின் விற்பனை முதல் முறையாக 15,000 தாண்டியது கல்லார்டோ என்ற ஒரே மாடலால். ஒரு ஃபெராரியை தோற்கடிக்கும் அளவு அதன் டிரைவிங்கை செதுக்கியவர் வாலன்டினோ பால்போனி. 

யாருக்குமே கொடுக்காத மரியாதையை இவருக்குக் கொடுத்தது லம்போகினி. கல்லார்டோவில் பால்போனி எடிஷன் என்ற ஒரு ஸ்பெஷன் எடிஷன் காரை தயாரித்தது. உலகிலேயே 250 பால்போனி எடிஷன் கார்கள்தான் உண்டு.

ஒரு நாள் சர்ச் வளாகத்துக்குள் நண்பனோடு ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தார் பால்போனி. சர்ச்சில் இருந்து வெளியே வந்த பாதிரியார், 'கார்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறேன் வறீங்களா' என்று கேட்க, கார் என்றவுடன் உற்சாகமாக அவரோடு சென்றிருக்கிறார் பால்போனி. அந்த பாதிரியார் உறவினர் வீட்டுக்குள் செல்ல வெளியே காத்திருந்தவர், ஒரு டிரக்கில் இருந்து மியூரா காரின் பாடியை இறக்கிவைப்பதைப் பார்த்தார்.

டிசைன் செம அழகாக இருக்க, அருகே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசையில் டிரக்கில் இருந்த கார் பாடியை இறக்கி தொழிற்சாலைக்குள் கொண்டு போனாராம். உள்ளே இருந்த கார்களை பார்த்த உடனேயே லம்போகினி மீது காதல் வந்துவீட்டது. "யார்யா நீ வம்படியா வந்து ஹெல்ப் பண்றியே...எங்களுக்கு ஆள் வேணும் வேலைக்கு வரியா" என லம்போகினி தொழிற்சாலையின் காவலர் கேட்க, ஒரு வாரம் கழித்து வேலைக்கு அப்ளிகேஷன் போட்டாராம்.

ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 21, 1968-ல் லம்போகினி நிறுவனத்தில் மெக்கானிக் அப்ரன்டிசாக வேலை கிடைக்க உடனே சேர்ந்துவிட்டார். பால்போனிக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலை சர்வீஸ் சென்டரின் தரையைத் துடைப்பது, டூல்ஸ் மற்றும் பார்ட்ஸை துடைப்பது. கராஜில் இருக்கும் கார்களையெல்லாம் காலை வெளியே எடுத்துவைத்துவிட்டு, மீண்டும் இரவு உள்ளே வைத்துவிடவேண்டும். இது அப்ரன்டிஸ்களின் வேலை.

வழக்கமாக எல்லோரும் காரை வெளியே தள்ளிச்சென்று மீண்டும் அதேபோல இரவில் காரை தள்ளிக் கொண்டு வருவார்கள். ஆனால், பால்போனி காரை ஸ்டார்ட் செய்து அந்த பில்டிங்கை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பிறகு காரை வெளியே வைப்பார். ஒரு லம்போகினியை எப்படி ஓட்டுவது என்பதை அப்போதுதான் கற்றுக்கொண்டாராம். 

ஒருநாள் லம்போகியின் மேனேஜர் இவரைக் கூப்பிட்டு "நாங்க ஒரு டெஸ்ட் டிரைவரை கண்டுபிடிச்சி பயிற்சி தரணும். இந்தக் காரை ஓட்டக் கூடாதுனு தெரிஞ்சும் நீ தினமும் ஓட்டுறியே... உனக்கு டெஸ்ட் டிரைவராகுற தகுதி இருக்கானு நாங்க பார்க்கணும்" என்று சொல்லி, பிரபல டெஸ்ட் டிரைவர்  பாப் வாலேசிடம் கூட்டிப் போகிறார்கள்.

மெக்கானிக்குக்கு வந்த கார்களை சோதிக்கும் வேலையை  செய்கிறார். அடுத்த ஆண்டு, வாலேஸிடம் டெஸ்ட் டிரைவருக்கான அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு ஒரு முழுநேர டெஸ்ட் டிரைவராக பொறுப்பேற்றார். செப்டம்பர் 5, 1973-ல் முதல் முறையாக மியூரா கார் மாடலை லம்போகினி தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் சென்ற அனுபவம் வாழ்வில் மறக்கமுடியாதது. மியூராவின் கடைசி பேட்ச் கார் அது என்று பல முறை பகிர்ந்திருக்கிறார்.

2008-ம் ஆண்டு  லம்போகினியின் முதன்மை டெஸ்ட் டிரைவராக இருந்து விடைபெற்றார். இத்தாலியில்  Via Modena நெடுஞ்சாலையில் பால்போனியையும் அவர் டெஸ்ட் செய்யும் லம்போகினியையும் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் வருமாம். லம்போகியில் இவர் சேர்ந்து 50 ஆண்டுகள் முடிந்த போது அதைக் கொண்டாடும் விதமாக மூன்று நாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தது இந்நிறுவனம். யாருமே எதிர்பாராத ஒரு அதிசயம் அங்கு நடந்தது. முதல் முறையாக ஒரே நேரத்தில் 70 லம்போகினி கார்கள் அங்குக் குவிந்தன.

கார் மீது, அதிலும் லம்போகினி மீது கொண்ட காதல் மட்டுமே வாலன்டினோ பால்போனியின் வாழ்க்கையை மாற்றியது. அன்று அந்த பாதிரியாருடன் காரில் ஏறாமல் இருந்திருந்தால், மியூரா பாடியை பார்த்துவிட்டு அப்படியே நகர்ந்திருந்தால், அன்று காரை ஸ்டார்ட் செய்யாமல் மற்றவர்கள் போல வந்தோமா, வேலையைப் பார்த்தோமா என்று போய் இருந்தால்... இன்று டயப்லோ, கல்லார்டோ, முர்சிலாகோ, ரெவென்டான், செஸ்டோ எலெமென்ட்டோ போன்ற கார்கள் வந்திருக்காது.

தனக்குப் பிடித்ததை பிடித்த நேரத்தில் செய்ததனாலேயே உயர்ந்தவர் வாலன்டினோ பால்போனி. வெற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. சூப்பர் ஸ்டார்களுக்கு வெற்றி 100 கோடி சம்பளமாக இருக்கலாம். லாலேட்டன்களுக்கு வெற்றி 100 நாள் படம் ஓடுவது மட்டும்தான். " என்னுடைய வெற்றி நான் லம்போகினியுடன் இருந்ததுதான்" என்கிறார் இவர்.