Published:Updated:

இதெல்லாம் சர்வதேச மாடலில்கூட இல்லை... இந்திய கிக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்!

தோற்றம் மட்டும்தான் ஒன்று. மற்றபடி சர்வதேச சந்தையில் விற்கப்படும் கிக்ஸ் விட இந்திய கிக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்.

இதெல்லாம் சர்வதேச மாடலில்கூட இல்லை... இந்திய கிக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்!
இதெல்லாம் சர்வதேச மாடலில்கூட இல்லை... இந்திய கிக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்!

நெநெடுவென வளர்ந்த ஹேரியரின் புகழை அடித்து ஓரமாகப் படுக்கப்போட்டுவிட்டது நிஸான் புயல். புத்தாண்டுக்குப் புதிதாக வரவிருக்கும் நிஸான் கிக்ஸ் காரின் டெஸ்ட் டிரைவ் முடிந்துவிட்டது. கிக்ஸ்தான் இப்போது கார் விரும்பிகளிடையே ஹாட் டாப்பிக். டட்ஸனில் கவனம் செலுத்திவந்த நிஸான் 5 ஆண்டுகள் கழித்து ஒரு புதிய காரைக் கொண்டுவந்துள்ளது. அதுவும் சர்வதேச சந்தையில் ஹிட் கொடுத்த கார். தோற்றம் மட்டும்தான் ஒன்றுபோல இருக்கிறது. மற்றபடி சர்வதேச சந்தையில் இருக்கும் கிக்ஸும் இந்திய கிக்ஸும் வேறு வேறு. இந்தியாவுக்குத் தனியாக மெனக்கெடுத்திருக்கிறது நிஸான். ஏன் என்று பார்ப்போம்.

பிளாட்ஃபார்ம்

சர்வதேச மாடலில் மைக்ராவில் பயன்படுத்தப்படும் B பிளாட்ஃபார்ம் உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் இதில் டஸ்டரின் M0 பிளாட்ஃபார்ம் பயன்படுத்தியுள்ளார்கள். விலையை முடிந்த அளவு குறைவாக வைப்பதற்காக இதைச் செய்துள்ளது நிஸான்.

இன்ஜின்

பிளாட்ஃபார்ம் மட்டுமில்லை இன்ஜினும் ரெனோவிடம் வாங்கியதுதான். கேப்ச்சரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டீசல் பொறுத்தவரை 110bhp பவர் மற்றும் 240Nm டார்க் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியாக வருகிறது. பெட்ரோல் வேரியன்ட் 106bhp பவரும் 142Nm டார்க்கும் உருவாக்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இப்போது இல்லையென்றாலும், எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வரும்.

பெரிய உருவம்

தோற்றம் ஒன்றுபோல இருந்தாலும் சர்வதேச மாடலைவிட இந்தியா கிக்ஸ் கொஞ்சம் பெருசு. இதன் நீளம் 4,384 மி.மீ (89 மி.மீ அதிகம்). நீளம் மட்டுமில்லை அகலம் (1,813 மி.மீ ), உயரம் (1,656 மி.மீ), வீல் பேஸ் (2,673 மி.மீ) என எந்தப் பக்கம் பார்த்தாலும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. ஏர் இன்லெட் கொண்ட முன்பக்க பம்ப்பர், பனி விளக்குகள், அலுமினியம் ஸ்கிட் பிளேட் போன்றவை புது டிசைனில் உள்ளது.

இன்டீரியர் 

பிளாட்ஃபார்ம், இன்ஜின் மட்டுமில்லை இன்டீரியரும் இந்தியா ஸ்பெஷல். ஸ்டீரிங் வீல் டிசைன் சர்வதேச மாடலில் இருப்பது போன்று இருந்தாலும் அதில் இருக்கும் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் நமக்குக் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் டேக்கோமீட்டர் மற்றும் ஃப்யூல் கேஜ் பெரிதாக அனலாக் ஸ்டைலில் உள்ளது. இவை இரண்டுக்கும் நடுவே ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் இருக்கிறது. இதுவே சர்வதேச மாடல்களில் ஒரு பக்கம் ஸ்பீடோமீட்டர், இன்னொரு பக்கம் டேக்கோமீட்டர் நடுவில் இன்ஃபர்மேஷன் டிஸ்ப்பிளே இருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுக்கு மேலே இருக்கவேண்டிய ஏசி வென்ட்டுகள் டிஸ்பிளேவின் பக்கவாட்டுப் பகுதிக்கு சென்றுவிட்டன. சென்ட்டர் கன்சோலின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. 

செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகள்

இந்திய மாடல்களுக்கு கொஞ்சம் கூடுதல் உழைப்பை கொடுத்திப்பது போலத் தெரிகிறது. ஏனென்றால், தற்போது சந்தையில் இருக்கும் மிட் சைஸ் கார்களை ஒப்பிடும்போது கிக்ஸ்-ன் இன்டீரியர் சொகுசாகவும் செம ரிச்சாகவும் இருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, டேஸ்போர்டில் லெதர் வேலைப்பாடுகள் போன்றவை இந்த செக்மன்ட்டில் முதல் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் டாப் 10 விற்பனை பட்டியலில் இருக்கும் க்ரெட்டாவுக்கு போட்டியாகக் களமிறங்குகிறது கிக்ஸ். இந்தியாவில் தயாரிக்கப்படும் கிக்ஸ் விலையை முடிந்தளவு குறைவாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல மாற்றங்கள் செய்துள்ளார்கள். இதன் முன்பதிவுகள் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. கார் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும். மிட் சைஸ் எஸ்யூவி செக்மன்ட்டின் ராஜா யார் என்பதை விலைதான் முடிவு செய்யப்போகிறது.