Published:Updated:

பனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி?!

பனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி?!
பனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி?!

நம் புதிய 2 ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் சிங்கத்தின் பிடரி மறையும்படி இருந்தால் அது நல்ல டயர். சிங்கத்தின் மண்டைக்குக் கீழ் தெரிந்தால், ட்ரெட் தேய்ந்துவிட்டது என்று அர்த்தம்.

மழை வந்தாலே குதுகலம்தான். ஆனால், முதல் துளி விழுந்த உடனேயே ஆரம்பித்துவிடுகிறது சாலைகளில் பிரச்னை. சற்றென மழையில் சறுக்கி விளையாடுவது குழந்தைகளுக்கு வேண்டுமென்றால் உற்சாகம் தரலாம். ஆனால், பெரியவர்கள் சறுக்கினால் சரமாரியாக அடிகள்தாம் விழும். மழை நேரங்களில் காரை ஓட்டுவது சவாலான விஷயம். காரில் உட்கார்ந்த பிறகு மழையை எப்படிச் சமாளிப்பது? அதற்குதான் இப்போது சில டிப்ஸ்.

டயர்

மழைத் துளிகள் சாலைக்கு மேல் தண்ணீரால் ஒரு லேயரை உருவாக்கிவிடுகிறது. சாலையில் இருக்கும் ஆயில் மற்றும் தூசு இந்தத் தண்ணீரின் மீது மிதந்து அது இன்னொரு லேயரை உருவாக்குகிறது. தண்ணீரில் கூட க்ரிப் கிடைக்கும். ஆனால், இந்த தூசும், ஆயிலும் கலந்த லேயரில் க்ரிப் சுத்தமாகக் கிடைக்காது. இதற்குதான் நம் டயரில் ட்ரெட் உள்ளது. கார் டயர் மீது வரிவரியாக இருக்கும் தடம்தான் ட்ரெட். 

எவ்வளவு பெரிய டயராக இருந்தாலும் சாலையோடு சேர்ந்திருப்பது என்னவோ, ஒரு செருப்பை விடக் குறைவான பகுதிதான். சாலையில் இருக்கும் தண்ணீர், சகதி போன்றவை டயர் பதியும் இடத்திலிருந்து இந்த ட்ரெட்டுக்குள் சென்றுவிடுவதால் நமக்கு க்ரிப் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், ட்ரெட் தேய்ந்துவிட்டால் அவை க்ரிப் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தொந்தரவு தரும். 

நம் புதிய 2 ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் சிங்கத்தின் பிடரி மறையும்படி இருந்தால் அது நல்ல டயர். சிங்கத்தின் மண்டைக்குக் கீழ் தெரிந்தால், ட்ரெட் தேய்ந்துவிட்டது என்று அர்த்தம். டயரை உடனே மாற்றவேண்டும். இலைகள், ஓலைகள் இருக்கும் பகுதியைக் கண்டால் வழக்கத்தைவிட இன்னும் கவனம் தேவை. இலைகள் மீது காரை ஓட்டும்போது க்ரிப் கிடைக்காது. 

ஹைட்ரோபிளேனிங்

கார் டயர்கள் சாலையில் படாமல் மழை நீர் மீது வழுக்கிக்கொண்டு போவதுதான் ஹைட்ரோ பிளேனிங். தண்ணீர் இருக்கும் சாலைகளில் காரை மெதுவாக ஓட்டினாலே இதைத் தவிர்த்துவிடலாம். கார் எடை குறைந்தது போலவும், ஸ்டீரிங் லைட்டாகவும் இருந்தால் சாலையில் இருக்கும் தண்ணீர் மீது மிதக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் நீங்கள் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரில் பயணிக்கிறீர்கள் என்றால், எந்தப் பக்கமாக கார் வழுக்கிக்கொண்டு திரும்புகிறதோ, அதே பக்கம் ஸ்டீரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாக ரிலீஸ் செய்ய வேண்டும். இதுவே, ரியர் வீல் டிரைவ் கார் என்றால், வழுக்கும் திசைக்கு எதிர்ப் பக்கமாக ஸ்டீரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாகக் கொடுக்கவேண்டும். இப்படிச் செய்தால் ஹைட்ரோ பிளேனிங்கிலிருந்து தப்பித்துவிடலாம். மழை சமயங்களில் க்ருஸ் கன்ட்ரோல் வசதியைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. 

பிரேக்

மழை நேரங்களில் சடாரென பிரேக்கைப் போட்டு காரை நிறுத்த முயற்சி செய்யக் கூடாது. குறைவான வேகத்தில் செல்வதே நல்லது. டிராஃபிக்கில் சென்றாலும் கூட முன் செல்லும் வாகனத்துடன் ஒட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். நெடுஞ்சாலைகளில் போகும்போது உங்களுக்கும், முன்னால் இருக்கும் வாகனத்துக்கும் இடையே இரண்டு கார்கள் நிற்கும் அளவு இடைவெளி விட்டு ஓட்டுங்கள். மழைக் காலத்தில் காரில் மிகவும் பாதிக்கப்படுவது பிரேக்குகள்தாம். டிரம் பிரேக்கை ஒவ்வொருமுறை இயக்கும்போதும், பிரேக் ஷூ தேய்ந்து தூசாக மாறி, பிரேக் டிரம்மிலேயே தங்கிவிடுகிறது. இவற்றுடன் மறை நீர் சேர்ந்து அது பேஸ்ட் போல மாறிவிடும். இதை அகற்றவில்லை என்றால் பிரேக் ஃபெயிலியர் ஆக அதிக வாய்ப்பு உண்டு.

இதுவே டிஸ்க் பிரேக் என்றால், கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகளில் தூசு, நீர் இரண்டும் சேர்ந்து ஒரு லேயர் போல மாறி, பிரேக்கின் திறனைக் குறைத்துவிடும். இந்தத் தூசு, துரு, அழுக்கு ஆகியவற்றைச் சுத்தம் செய்ய பிரேக் க்ளீன் ஸ்பிரே பயன்படுத்துங்கள். இதனால் பிரேக் பிடிக்கும்போது கேட்கும் `கீச் கீச்' சத்தமும் இருக்காது. 

பனி பிரச்சனைக்கு தீர்வு

விண்ட்ஷீல்டில் பனி படர்ந்து, கார் ஓட்டும்போது சாலை தெரியாமல் பிரச்னை ஏற்படும். டீஃபாகர் உள்ள கார்களில் பிரச்னை இல்லை. சாதாரண ஏசி கார்கள் என்றால் புளோயரை ஓடவிட்டு, `ஃப்ரெஷ் ஏர் இன்டேக் மோடு’ ஆன் செய்துவிட்டு, (ரீ-சர்க்குலேட் மோடு வேண்டாம்) ஏர் வென்ட்டை மேல்பக்கம் பார்த்தபடி வைத்து ஏ.சி-யை ஆன் செய்யவும். பனி சட்டெனக் காணாமல் போகும்.

எலெக்ட்ரிக்கல்

எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்தான் மழைக் காலத்தில் மிகப்பெரிய எதிரி. இன்டீரியரிலும் சரி; பானெட்டிலும் சரி - வொயர்கள் வெளியே தெரியும்படி இருந்தால் உடனே சரி செய்துவிடுங்கள். தண்ணீர் கொட்டிக் கிடக்கும் இடங்களில் காரை ஐடிலிங்கில் நிறுத்திவிட்டு, ஏ.சி போட்டு நீண்ட நேரம் இருக்கக் கூடாது.

வைப்பர்

மழை நேரத்தில் வைப்பர்கள் இல்லாமல் கார் ஓட்டுவது கண்களைத் திறந்து கொண்டு உள்நீச்சல் அடிப்பதுபோல. சாலை தெளிவாக தெரியவேண்டும் என்றால், காரை கிளப்பும் முன்பு விண்டுஷீல்டை சுத்தம் செய்துகொள்ளுங்கள். சுத்தம் செய்தபிறகு வைப்பரை ஆன் செய்வதுதான் சிறந்தது. காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் வைப்பரை ஆன் செய்யக் கூடாது. இதனால், வைப்பர் மோட்டாரின் ஃப்யூஸ் உடைய அதிக வாய்ப்புகள் உண்டு. 

ஹெட்லைட்

டிசம்பர் மாதம் மழையும், பனியும் மாறி மாறி அடிப்பதால் இதுபோன்ற சமயங்களில் ஹெட்லைட்டை ஆன் செய்து வைத்திருந்தால்தான் மற்ற வாகனங்களுக்கு நம் கார் சுலபமாகத் தெரியும். எக்ஸ்ட்ரா ஹெட்லைட் பல்ப், ஃப்யூஸ் போன்றவை கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். எலக்ட்ரிக் விஷயங்களில் ஏதாவது பிரச்னை என்றால் சர்வீஸ் சென்டர் செல்லும் முன் ஃப்யூஸை மாற்றிப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு