Published:Updated:

விலை அதிகமாக இருந்தும் க்ரெட்டா, டாப் 10-ல் விற்பனையாவது ஏன்?!

விலை அதிகமாக இருந்தும் க்ரெட்டா, டாப் 10-ல் விற்பனையாவது ஏன்?!
விலை அதிகமாக இருந்தும் க்ரெட்டா, டாப் 10-ல் விற்பனையாவது ஏன்?!

கார்களின் டாப் 10 விற்பனைப் பட்டியலில் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் விலை உயர்ந்த ஒரே கார் ஹூண்டாய் க்ரெட்டாதான். இந்தப் பட்டியலில், ஆரம்ப விலையையே 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வைத்திருக்கும் காரும் இதுதான். விலை ஏகபோகத்துக்கு இருந்தாலும் மாஸ் மார்க்கெட்டில் க்ரெட்டா சக்கப்போடு போடுவதற்குக் காரணம் நிறைய உண்டு. ஏன் க்ரெட்டாவை வாங்கவேண்டும், வாங்காமல் இருக்க எது தடுக்கிறது? பார்ப்போம்.

க்ரெட்டாவின் பிளஸ்

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஸ்டைல் அதன் பெரிய ப்ளஸ். காம்பேக்ட் எஸ்யூவி என்றால் சின்ன சைஸ் எஸ்யூவி என்றுதான் அர்த்தம். அப்படியென்றால், பெரிய எஸ்யூவி-க்கு இருக்கும் கம்பீரத் தோற்றம் இந்தச் சின்ன எஸ்யூவி-க்கும் இருக்கவேண்டும்தானே! எக்கோ ஸ்போர்ட், S-cross இரண்டுமே சாதாரண ஹேட்ச்பேக்போலத்தான் இருக்கின்றன. டஸ்டரைப் பார்த்தால், மிரட்சி ஏற்படுவதில்லை... `வாவ்... க்யூட்!' என கமென்ட்தான் வருகிறது. TUV300 டிசைன் தனித்துவமாக இல்லை. இந்தப் பிரச்னை எதுவுமே இல்லாமல் சான்டாஃபீ-யின் மினி வெர்ஷனாகவே வந்தது க்ரெட்டா. எஸ்யூவி போல மிரட்டுகிறது. அதேசமயம் மாடர்ன் மனிதர்களுக்கும், க்ளாசிக் விரும்பிகளுக்கும் பிடித்த ஸ்டைலிலும் இருக்கிறது. 

இந்தியர்களுக்கு மாருதியும் ஹூண்டாயும் கொடுக்கும் திருப்தியை, வேறு எந்த காராலும் கொடுக்க முடியாது. காரணம், இவர்கள் ஊருக்கு ஒரு ஷோரூம், வீதிக்கு ஒரு மெக்கானிக் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஹூண்டாய் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும், சர்வீஸ் விலை மிகக் குறைவானது என்றும் பெயர்பெற்றுவிட்டன. இதே எஸ்யூவி வேறு ஏதாவது பிராண்டில் வந்திருந்தால், வரவேற்பு மட்டும்தான் கிடைத்திருக்கும். ஹூண்டாயில் வந்ததால்தான் ரெட் கார்ப்பெட் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

``முதலில் நான் XUV 500 எடுத்துக்கலாம்னுதான் சொன்னேன். ஆனா, என் மனைவிக்கு க்ரெட்டாதான் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலதான் இந்த கார் எடுத்தேன்" என்று நம் வாசகர் ஒருவர் சொன்னார். என்னதான் கார் உங்கள் சாய்ஸாக இருந்தாலும், உங்கள் வீட்டுப் பெண்களுக்கு கார் பிடிக்கவில்லை என்றால் அந்த வாரம் முழுவதும் இரவு கருகிய தோசைதான் கிடைக்கும் என்று அப்போதே ஒரு சித்தர் சொல்லிவைத்திருக்கிறார். க்ரெட்டாவின் வெற்றிக்கு இன்னொரு மிக முக்கியக் காரணம், இது பெண்களுக்குப் பிடித்த எஸ்யூவி. 

சிறப்பான ஸ்டீயரிங் கன்ட்ரோல், சொகுசான இன்டீரியர் மற்றும் அதிக வசதிகள் இருந்தால் பெண்களுக்குப் பிடிக்கும் என்று ஒரு சர்வே சொல்கிறது. பாதுகாப்பான கார்கள் மீதும் பெண்களுக்கு ஒரு கண் இருக்கும். ஹூண்டாய் க்ரெட்டா 400 லிட்டர் பூட் ஸ்பேஸ், 60:40 ஸ்பிளிட் சீட், கதவில் அதிக இடவசதி போன்றவை வைத்துக்கொண்டு பிராக்டிக்கலான காராக இருக்கிறது. பவர் டிரைவர் சீட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், ஸ்மார்ட் கீ, 7 இன்ச் AVN இன்ஃபோடெயின்மென்ட், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே என வசதிகளும் அதிகம். 6 காற்றுப்பைகளுடன் பாதுகாப்பிலும் 4 ஸ்டார் வாங்கியுள்ளது.

க்ரெட்டாவில் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. 126bhp பவர் மற்றும் 260Nm டார்க் தருகிறது. டர்போ லேக் இருந்தாலும் செம பர்ஃபாமென்ஸ் தரும் இன்ஜின் இது. 10 விநாடியில் சுலபமாக 0-100 கி.மீ வேகத்தைத் தொட்டுவிடும். அதிகபட்சம் ஒரு லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தரும். வைபரேஷன் இல்லை, இன்ஜின் சத்தம் கேபினில் கேட்காது. சஸ்பென்ஷன் சாஃப்ட் செட்டப்.

க்ரெட்டாவின் மைனஸ்

இந்த காரின் டாப் வேரியன்ட்டின் விலை 18.64 லட்சம் ரூபாய். இவ்வளவு விலை கொடுத்தும் பின் சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் கிடையாது. டேஷ்போர்டின் டிசைன் பழசு. விலை உச்சத்தில் இருந்தாலும் டேஷ்போர்டின் தரம் ஐ10, ஐ20 கார்களுக்கு நிகராகதான் இருக்கின்றன. செல்ஃப் டிரைவிங் செய்பவர்களுக்குப் பொருத்தமான கார். பின் சீட், `பிக் பாஸ்' வீடு போல வெளியில் நடக்கும் ஒன்றுமே தெரியாது. முன் சீட்டைவிட பின் சீட்டில் சொகுசும் குறைவு. 

ஒவ்வொரு காருக்கும் ஒரு கேரக்டர் உண்டு. சிலருக்கு ஹூண்டாய் கார்களின் கேரக்டர் பிடிக்கும். சிலருக்கு மஹிந்திரா கார்களின் கேரக்டர் பிடிக்கும். என்னதான் அதிக நிறைகள் இருந்தாலும் சிறிய குறை அது எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும். க்ரெட்டா நல்ல காரா இல்லையா... எல்லாம் உங்கள் சாய்ஸ்!