Published:Updated:

2019 ஹோண்டா சிவிக்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

``நல்ல எக்ஸிக்யூட்டிவ் செடான் வேண்டும், கொஞ்சம் ஸ்போர்டியாகவும் இருக்கவேண்டும். அதேசமயம் வீக் எண்ட் டிரிப்புக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அந்த காரை பெரும்பாலும் நான் மட்டும்தான் ஓட்டுவேன்" என்பவர்களுக்கு சிவிக் நல்ல தேர்வு.

2019 ஹோண்டா சிவிக்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
2019 ஹோண்டா சிவிக்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய செடான் சந்தையைக் கலக்கிய ஹோண்டா சிவிக், இப்போது மீண்டும் வந்துவிட்டது. இதன் விலை மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெங்களூரில் இந்த காரில் ஒரு டிரைவ் முடித்துவிட்டு வந்தோம். பழைய சிவிக் காரிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் 2019-ம் ஆண்டு சிவிக், தற்போதைய தலைமுறைக்கு நிச்சயம் பிடிக்கக்கூடிய கார்தான். புதிய சிவிக் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள் இங்கே...

இதெல்லாம் பிடிச்சிருக்கு...

1. ஸ்போர்ட்டி டிசைன்: அமேஸ், சிட்டி என டிசைனில் டீசன்ட் காட்டி வந்த ஹோண்டா, சிவிக்கில் ஸ்போர்ட்டியாகக் களமிறங்கியுள்ளது. ஒல்லியான LED ஹெட்லைட், தடினமான க்ரோம் கிரில், பெரிய வீல் ஆர்ச்சுகள், ஃபாஸ்ட்பேக்/கூப் போன்ற பின்பக்க ஸ்டைல், செக்மென்ட்டிலேயே பெரிய 17 இன்ச் ஸ்போர்டியான டைமண்ட் கட் அலாய் வீல் என சிவிக்கின் ஒவ்வோர் அங்குலமும் செம ஸ்போர்ட்டி. அதிலும், C வடிவ டெயில் லைட் அக்ரசிவ்வான தோற்றத்தைக் கொடுக்கிறது.

2. பிராக்டிக்காலிட்டி: டிசைனை ஸ்போர்ட்டியாக மாற்ற பிராக்டிக்காலிட்டியில் எந்தச் சமரசமும் செய்யவில்லை ஹோண்டா. ஃபாஸ்ட்பேக் போல காரின் கூரையை வடிவமைத்திருந்தாலும் ஹெட்ரூமில் பாதிப்பில்லை. டிக்கி சாதாரண செடன் கார் போலத்தான் இருக்கிறது. இதன் 430 லிட்டர் பூட் ஸ்பேஸில் பொருள்களை ஏற்றி இறக்குவது சுலபம். அகலமாகத் திறக்கிறது பூட் கதவு.

3. இன்டீரியர்: பழைய சிவிக் அளவு, புது காரின் இன்டீரியர் ஸ்போர்ட்டியாக இல்லை. கொஞ்சம் ஸ்போர்ட் கொஞ்சம் எக்ஸிக்யூடிவ் ஸ்டைல். இது ஹோண்டாவா, ஹூண்டாயா எனச் சந்தேகப்படும் அளவுக்கு காரில் நிறைய ஸ்டோரேஜ் வசதிகளை வைத்திருக்கிறார்கள். பெரிய க்ளவ் பாக்ஸ், கதவுகளில் பெரிய டோர் பாக்கெட் மற்றும் பாட்டில் ஹோல்டர். பார்க்கிங் பிரேக்குக்குப் பெரிய லீவர் இல்லை. அதனால், முன்பக்கம் சீட்டுகளுக்கு இடையில் அதிக இடவசதி இருக்கிறது. 

4. வசதிகள்: LED ஹெட்லைட், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் (டெம்ப்ரேச்சர் மற்றும் ஃபூயல் காஜ் மட்டும் அனலாக்), சன்ரூஃப் எனத் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் வசதிகள் இருக்கின்றன. 

5. பாதுகாப்பு: ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், காரின் கதவை மூடாமல் சாவியை எடுத்துச் சென்றால் ஆட்டோ லாக் ஆகும் வசதி, லேன் மாற உதவும் கேமரா என செக்மன்ட்டுக்கு புதுவரவுகளாக சில வசதிகள் உள்ளன. 6 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக் எனப் பாதுகாப்பு வசதிகள் பாராட்டுகளை வாங்குகின்றன.

6. இன்ஜின்: பழைய சிவிக் காரில் டீசல் இன்ஜின் இல்லை என்பது பெரிய குறையாக இருந்தது. இந்த காரில் CRV-யில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றிருக்கிறது. 120bhp பவர் மற்றும் 300Nm டார்க் கொடுக்கிறது இந்த இன்ஜின். பெட்ரோல் இன்ஜினைப் பொறுத்தவரை 141bhp பவர் தரும் 1.8 லிட்டர் i-VTEC இன்ஜின் இருக்கிறது. டீசல், பெட்ரோல் இரண்டு இன்ஜினுமே செம ஸ்மூத். அராய் மைலேஜ் அம்மாடியோவ் என வாய் பிளக்கவைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் 16.5 கி.மீ, டீசல் இன்ஜின் 26.8 கி.மீ!

7. சேஸி மற்றும் ஹேண்ட்லிங்: புது சிவிக்கில் இருக்கும் சிறப்பான இரண்டு விஷயங்கள் ஹேண்ட்லிங் மற்றும் கிரவுண்ட் க்ளியரன்ஸ். ஹேண்ட்லிங் வேற லெவல். பழைய சிவிக் பல இடங்களில் தரைதட்டும். இந்த சிவிக்கில் அந்தப் பிரச்னையே இல்லை. 171மிமீ கிரவுண்டு க்ளியரன்ஸ் இருக்கிறது. பாடி ரோல் தெரியவில்லை என்பதால், கார்னர்கள் சிறப்பானதாக இருக்கின்றன. கார்னர்களில் வேகமாக ஓட்டத்தூண்டுகிறது. ஸ்போர்ட்டியான ரைடுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது சஸ்பென்ஷன். வேகமான குண்டுகுழிகளில் ஏறி இறங்கும்போதுகூட நம்மைத் தூக்கிப்போடாமல் சமத்தாக வேலைசெய்கிறது சஸ்பென்ஷன்.

ப்ச்ச்...இதெல்லாம் நல்லா இருந்திருக்கலாம்!

8. பெட்ரோல் இன்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை, டீசல் இன்ஜினில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இல்லை. ரெவ் செய்யத் தூண்டுகிறது இதன் பெட்ரோல் இன்ஜின். ஆனால், ரப்பர்பேண்டு எஃபெக்ட் அதிகமாக இருப்பதால் கடுப்பைக் கிளப்புகிறது CVT கியர்பாக்ஸ். மிட் ரேஞ்சில் டார்க் போதவில்லை. 3000-5000rpm ரேஞ்சில் மலை சாலைகளிலோ, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சாலையிலோ ஓட்டும்போது கியரைக் குறைக்கவேண்டும் அல்லது ஆக்ஸிலரேட்டரை மிதிக்கவேண்டும்போல உள்ளது. டீசல் இன்ஜினில் பன்ச் போதவில்லை. மந்தமான ஆரம்பம். 

9. டிரைவருக்கு சிறந்த கார். பின்பக்கம் உட்கார்ந்து போகிறவர் உடலை நீட்டி, வளைக்கப் பழகிக்கொள்வது நல்லது. சீட் உயரம் குறைவாக இருப்பதால் பெரியவர்கள் ஏறி இறங்கச் சிரமப்படுவார்கள். லெக்ரூம் ஏராளம், பின்பக்க சீட், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கிறது. ஆனால், உயரமானவர்கள் ஹெட்ரூம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பின்பக்க ஜன்னல்கள் சின்னதாக இருக்கிறது. 

10. பின் சீட் பயணிகளுக்கு ரியர் ஏசி வென்ட் கிடையாது, USB சார்ஜர் இல்லை, 12V சாக்கெட்கூட இல்லை. கூல்டு சீட், டிரைவர் சீட் மெமரி, முன்பக்க பார்க்கிங் சென்சார், ஆட்டோமேட்டிக் பூட் என சில வசதிகள் மிஸ்ஸிங். ஸ்பீடு சென்சிங் டோர் லாக் 5 லட்சம் ரூபாய் காரில்கூட வருகிறது. ஆனால், இதில் இல்லை என்பது பெரிய ஏமாற்றம்.

``நல்ல எக்ஸிக்யூட்டிவ் செடான் வேண்டும், கொஞ்சம் ஸ்போர்டியாகவும் இருக்கவேண்டும். அதேசமயம் வீக் எண்ட் டிரிப்புக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அந்த காரை பெரும்பாலும் நான் மட்டும்தான் ஓட்டுவேன்" என்பவர்களுக்கு சிவிக் நல்ல தேர்வு.

ஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா? - https://bit.ly/2Im9btZ