Published:Updated:

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஜீப் காம்பஸ் ட்ரெய்ல் ஹாக்

ஆஃப் ரோடு செய்வதற்கென்றே அளவெடுத்துச் செய்ததைப் போல ஒரு புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஜீப். ‘காம்பஸ் ட்ரெய்ல் ஹாக்’ வருகையை இப்படி அடக்கி வாசித்தால், ஜீப் ஏற்றுக் கொள்ளாது. ஒரு புதிய மாடல் கார் அறிமுகமானால் என்ன அலப்பறை செய்வார்களோ, அந்த அளவுக்கு இதற்கு டெம்ப்போ ஏற்றுகிறது ஜீப்.

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஜீப் காம்பஸின் முரட்டுத்தனமான வெர்ஷன் என்று ட்ரெய்ல் ஹாக்கை வர்ணிக்கலாம். அதனால்தான் இதன் டெஸ்ட் டிரைவை புனேவை அடுத்திருக்கும் லோனாவாலாவின், ‘19 டிகிரி நார்த்’ என்ற சோதனைக் கூடத்தில் நடத்தியது. ஆம்! சோதனைக் கூடம்தான். பகீர் பள்ளம், திடீர் மேடு, சேறு, சகதி, பாறைகளாலான பாதை, சலசலக்கும் ஓடை, மணல் திட்டு என்று சகலவிதமான பகுதிகளாலும் அமைந்த நிலப்பரப்பு இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 இதில் ட்ரெய்ல் ஹாக்-கை ஓட்டினோம். இந்த அனுபவத்தை சாகசம் என்று சொல்லலாம். சர்க்கஸ் என்றும் கூறலாம்.

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

இப்படியான ஒரு நிலப்பரப்பில் ட்ரெய்ல் ஹாக்கை ஓட்ட வேண்டும் என்றால், அதில் நிச்சயம் சில மாற்றங்களைச் செய்தாகத்தான் வேண்டும் இல்லையா? முன்பக்க பம்பரும், பின்பக்க பம்பரும் அடிபடாமல் பெரிய பெரிய பாறைகளில் ஏறி இறங்க வேண்டும் என்பதால்... இதன் பம்பர்களை மாற்றி அமைத்திருக்கிறது ஜீப். அதனால் இதன் அப்ரோச் ஆங்கிள் இப்போது 26.5 டிகிரியாகவும், ரேம்ப் பிரேக்ஓவர் 21.2 டிகிரியாகவும், டிப்பார்ச்சர் ஆங்கிள் 31.6 டிகிரியாகவும் உயர்ந்திருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸை 27 மிமீ அளவுக்6கு அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, இப்போது இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ. சாதாரண வேரியன்ட்டாக இருந்தால் ‘வாட்டர் வேடிங் டெப்த்’  330 மிமீ. இது இப்போது 840 மிமீயாக உயர்ந்திருக்கிறது. ஜீப் எடுத்திருக்கும் முயற்சிகள் வீண்போகவில்லை என்பது இந்த சாகச டிரைவின்போது கண்கூடாகத் தெரிந்தது.

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

சாதாரண ஜீப் காம்பஸில் 4X4 ஆல் வீல் டிரைவ் உண்டுதான். ஆனால் இப்போது கூடுதலாக ‘Active Drive Low’ என்ற புதிய ஆப்ஷனைக் கூட்டியிருப்பதால், பள்ளத்தில் சிக்கிக்கொண்டால்கூட காரைச் சுலபமாக மேலே எடுக்க முடியும். ஜீப் காம்பஸில் என்ன மாதிரியான பிரதேசத்தில் பயணிக்கிறோமோ, அதற்குத் தகுந்த மாதிரி Auto, Snow, Sand, Mud என தேவையான Terrain-ஐத் தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றோடு இப்போது Rock என்று புதிய ஆப்ஷனையும் கொடுத்திருப்பதால்... மலைப்பாதைகளில் எல்லாம் கவலையே இல்லாமல் ட்ரெய்ல் ஹாக்கைப் புரட்டி எடுத்தோம்.

இந்த செக்மென்ட்டில் எவ்வளவோ SUV கார்கள் இருக்கின்றன என்றாலும், உண்மையான SUV-க்கான அனைத்து முரட்டுப் பண்புகளும் இதில் இருப்பது உண்மைதான். அதனால் தினம் தினம் இதை எடுத்துக் கொண்டு ஆஃப்ரோடு அட்வென்ச்சர் போக முடியுமா என்ன? சிட்டி டிராஃபிக், நெடுஞ்சாலை என்று அதை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா? அதனால் ஜனசந்தடியான சாலை தொடங்கி, கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதைகள்வரை பல்வேறுவிதமான சாலைகளில்  காரை ஓட்டிப் பார்த்தோம்.

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

மற்ற ஜீப் காம்பஸில் இருப்பதைப்போல, 173bhp சக்தியையும், 350Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ட்ரெய்ல் ஹாக்கிலும். ஆனாலும் இதில் இருப்பது புதிய இன்ஜின். விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப, அதாவது BS6 கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், இந்த இன்ஜினோடு இயைந்து வேலை செய்யும் 9 ஸ்பீடு  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். வேகத்துக்கு ஏற்ப கியர் மாறுவதே தெரியாமல் படு ஸ்மூத்தாக மாறுகிறது. எவ்வளவு சக்தி வேண்டுமானாலும், ‘இந்தா நீ கேட்ட சக்தி’ என்று இன்ஜின் நீட்டுகிறது. ஆனால், அது போடும் சத்தம்தான், மூடியிருக்கும் கண்ணாடி ஜன்னல்களைத் தாண்டி கேபினுக்குள்ளே கேட்கிறது. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மற்ற வேரியன்ட்களைவிட சத்தம் குறைந்திருக்கிறது என்றாலும்... இன்னும் குறைய வேண்டும் என்பதே உண்மை.

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

வெளித்தோற்றத்திலும், உள் அலங்காரத்திலும் என்ன மாறியிருக்கிறது என்பதை இரண்டு மூன்று வாக்கியங்களில் சொல்லி விட முடியும். செங்குத்தான பாதைகளில் ஏறும்போது, காரின் பானெட்தான் முக்கால்விகிதம் கண்ணுக்குத் தெரியும். அது பளபளவென்று இருந்தால் சூரிய ஒளியில் கண்கள் கூசுமல்லவா? அதனால் பானெட்டின் மையப்பகுதியில், ‘டீகேல்’... அதாவது கறுப்பு வண்ணத்தைச் சேர்த்திருக்கிறது ஜீப். காரின் உட்புறமும் இப்போது முழுமையாகக் கறுப்பு வண்ணத்துக்கு மாறியிருக்கிறது.

நேவிகேஷன் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளைக் கொண்ட 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் இதன் ஹைலைட்.  சன் ரூஃப்பும் உண்டு. ஆனால் இதற்கு எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டும். இப்போது விற்பனையில் இருக்கும் லிமிட்டெட் ப்ளஸ் வேரியன்ட்டில் இருக்கும் டிரைவருக்கான பவர் சீட், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ்... இதில் இல்லை.அதாவது காஸ்ட் கட்டிங்!

ஆஃப்ரோடுக்காக அளவெடுத்துச் செய்த ஜீப்!

ஆறு காற்றுப்பைகள், ABS, ESC, ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் சென்ஸார்ஸ் மற்றும் கேமரா ஆகியவை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

விற்பனையில் இருக்கும் ஜீப் காம்பஸ் வேரியன்ட்களிலேயே அதிக விலை கொண்ட வேரியன்ட்டாக இந்த ட்ரெய்ல் ஹாக் இருக்கும். டீசல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிங் கியர்பாக்ஸ் என்பது இதன் அட்ராக்‌ஷன். விலையும் கவர்ச்சியாக இருக்கவேண்டும்தானே? ஆனால், இதன் எக்ஸ் ஷோரூம் விலையே `27 லட்சத்தைத் தொடுகிறது.

 வேல்ஸ், படங்கள்:  துளசிதரன்