Published:Updated:

காரிலும் சேமிக்கலாம் மின்சாரம்! V-KIT

ர.முகமது இல்யாஸ்

ஞா.சுதாகர், படங்கள்: தி.விஜய்

ம்பியரில் அளந்த காலம் மாறி, ஆட்சி மாற்றமே செய்யக்கூடிய அளவுக்கு 'பவர்ஃபுல்லானது’ மின்சாரம். இன்றைக்கு  விஞ்ஞானிகளையும் அரசியல்வாதிகளையும் தூங்கவிடாமல் உலுப்பிக் கொண்டிருக்கிறது மின்சாரப் பற்றாக்குறை. நம் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வாகனங்களில் உற்பத்தியாகி வீணாகும் மின்சாரத்தை, மாற்று வழியில் சேமித்துப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் கோவையில் வசிக்கும் வாசுதேவன் தச்சோத். அவரைச் சந்தித்தோம்.

காரிலும் சேமிக்கலாம் மின்சாரம்!  V-KIT

'நான் படித்தது பொருளாதாரம். சொந்தமாக எலெக்ட்ரானிக் தொழிற்சாலை நடத்தி வருகிறேன். எப்போதும் எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களுடனே இருப்பதால், அதன் பரிச்சயம் அதிகம். தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருக்கும் சமயத்தில்தான் மின்சாரத்தின் அருமையை நாம் உணர்கிறோம். வீட்டில் இன்வெர்ட்டர் இருந்தாலும்கூட, அதை முழுக்க சார்ஜ் செய்ய மின்சாரம் இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில்தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

எல்லா ஆட்டோமொபைல் வாகனங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆல்டர்னேட்டர் இயந்திரம் இருக்கிறது. இதன் பணி, ஜெனரேட்டராகச் செயல்பட்டு வாகனத்தில் உள்ள பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதுதான். இந்த பேட்டரி, வாகனத்தின் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களுக்கு மின்சாரத்தை வழங்குகிறது. பேட்டரியில் சேமித்திருக்கும் மின் ஆற்றலை, நாம் 100 சதவிகிதம் பயன்படுத்துவது இல்லை. மேலும், ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் உள்ள பேட்டரியில், மின் ஆற்றல் குறையும்போது ஆல்டர்னேட்டர் மூலம் சார்ஜ் ஆகி முழுமையாகிவிடும். பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆனதும் பேட்டரிக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். ஆனால், ஆல்டர்னேட்டர் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கும். அந்தச் சமயத்தில் உற்பத்தியாகும் மின் ஆற்றல் முழுக்க வீண்தான்.

காரிலும் சேமிக்கலாம் மின்சாரம்!  V-KIT

இது, எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும். அப்போதுதான் 'நாம் ஏன் இந்த ஆல்டர்னேட்டர் சக்தியை முழுமையாக உபயோகிக்கக் கூடாது’ என்று தோன்றியது. அதன் பலன்தான் நான் வடிவமைத்த இந்த வி-கிட் இயந்திரம். இதன் பணி, ஆல்டர்னேட்டரில் உற்பத்தியாகும் மின் ஆற்றலை, பேட்டரி சார்ஜ் ஆனதும் உபரியைச் சேமித்து வைத்துக்கொள்ளும். பின்பு, அதை நம் உபயோகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றித் தரும். இந்த வி-கிட் - பேட்டரி, சார்ஜ் கன்ட்ரோலர், சென்ஸார் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

ஆல்டர்னேட்டரில் உருவாகும் மின் ஆற்றல், பேட்டரியில் இணையும் இடத்தில் இருந்து ஒரு இணைப்பை எடுத்து, அதை காருக்குள் அல்லது டிக்கியில் உள்ள வி-கிட் இயந்திரத்தில் இணைத்துக் கொண்டால் போதும். வாகனத்தில் உள்ள பேட்டரியில் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும்பட்சத்தில், ஆல்டர்னேட்டர் மின்சாரத்தை இது எடுத்துக்கொள்ளாது. வாகனத்தின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதும்தான் இது சார்ஜ் ஆகும். எனவே, இதற்கு அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுவது இல்லை. இதை பலமுறை சோதித்துப் பார்த்து உறுதிப்படுத்தி உள்ளேன்.

தற்போது அனைவர் வீட்டிலும் குறைந்தது ஒரு பைக்காவது உள்ளது. இதை வெறும் 1,000 ரூபாயில் 7 AH  மின்கலனை அமைக்கலாம். இதன் மூலம் 40 W அளவுக்கு மின்சாரம் பெறலாம். 4 மணி நேரம் வாகனம் ஓட்டுவதன் மூலம், 5 எல்.ஈ.டி விளக்குகளை 5 மணி நேரம் ஒளிரவைக்கலாம்.

காரிலும் சேமிக்கலாம் மின்சாரம்!  V-KIT

கார் என்றால், சராசரியாக 20,000 ரூபாயில் 100  AH  பேட்டரி அமைத்து 500 W அளவுக்கு மின்சாரத்தை 5 மணி நேரம் வரை பெற முடியும். இதைக் கொண்டு விளக்குகள், டி.வி, மிக்ஸி போன்ற இயந்திரங்களை இயக்க முடியும். இந்த வி-கிட் இணைத்து 8 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டினால், முழுமையாக சார்ஜ் ஆகும். இதன் மூலம் 15 டியூப் லைட்டுகளை ஒளிரவைக்க முடியும். இது ஜெனரேட்டருக்கு மாற்றாக இருக்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், கூடுதல் செலவு வைக்காமல் வீணாகும் ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளேன். இதை அனைவரும் பயன்படுத்தினால், மின்சாரத்தைச் சேமிக்க முடியும்; மின்வெட்டுப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டவும் முடியும்' என முடித்தார்.