Published:Updated:

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

Vikatan Correspondent

சார்லஸ்

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

புதிய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. அதனால், மீண்டும் எந்த கார் அதிக மைலேஜ் தருமோ, அதை வாங்குவதுதான் இப்போதைய ட்ரெண்ட். மைலேஜ் கார்கள் என்றால், பழையபடி டீசல் கார்கள்தான் முதல் இடம் பிடிக்கும். இந்த டாப் டென் கார்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெட்ரோல் கார், டாடா நானோ மட்டுமே! மைலேஜ் கார்கள் என்றாலே, பொதுவாக ஹேட்ச்பேக் மற்றும் மிட் சைஸ் கார்கள்தான் இடம்பிடிக்கும். ஆனால், இதிலும் விதிவிலக்காக, 10 லட்ச ரூபாய் விலைகொண்ட காரான ஹோண்டா சிட்டி இடம் பிடித்திருக்கிறது.

இங்கே டாப் டென் மைலேஜ் கார்களை மட்டும் சொல்லாமல், 'இந்த காரை வாங்கினால் மாதந்தோறும் எரிபொருளுக்காக எவ்வளவு செலவாகும்’ என்பதையும் கணக்கிட்டிருக்கிறோம். இது மாதந்தோறும் சராசரியாக 1,000 கி.மீ பயண தூரம் எனவும், இதில் 500 கி.மீ தூரம் நகருக்குள்ளும், 500 கி.மீ தூரம் நெடுஞ்சாலைப் பயணம் என்றும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். 25 ஜூன் 2014 நிலவரப்படி, சென்னையில் 1 லிட்டர் டீசலின் விலை 61.12 ரூபாய். 1 லிட்டர் பெட்ரோல் விலை 74.71 ரூபாய். இதை வைத்து காருக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டிருக்கிறோம்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் மைலேஜ் விபரங்கள் அனைத்துமே, நம் ஊர் சாலைகளில் ஓட்டி டெஸ்ட் செய்தது. கார் நிறுவனங்கள் சொல்லும் 'அராய்’ மைலேஜ் அல்ல!

டாப் டென் மைலேஜ் கார்களில் உங்களுக்கான கார் எது?

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

இந்தியாவின் நம்பர் ஒன் மைலேஜ் காராக, ஹோண்டா தனது சிட்டி காரைச் சொல்ல, நம்முடைய டெஸ்ட் ரிப்போர்ட்டின்படி, இந்தியாவின் நம்பர் ஒன் மைலேஜ் கார், ஹூண்டாய் எக்ஸென்ட்தான். ஹூண்டாய் எக்ஸென்ட் காரின் 1,120 சிசி, 3 சிலிண்டர் டீசல் இன்ஜின், நகருக்குள் லிட்டருக்கு 16.2 கி.மீ மைலேஜ் தருகிறது. நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை லிட்டருக்கு 20.3 கி.மீ மைலேஜ் தருகிறது ஹூண்டாய் எக்ஸென்ட். இது, ஹோண்டா அமேஸைவிட 0.5 கி.மீ குறைவு. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது லிட்டருக்கு 18.25 கி.மீ சராசரி மைலேஜ் தருகிறது ஹூண்டாய் எக்ஸென்ட். மாதத்துக்கு 1,000 கி.மீ பயணம்; இதில் 500 நகரம், 500 நெடுஞ்சாலை என்ற கணக்கின்படி பார்த்தால், டீசலுக்காக நீங்கள் மாதந்தோறும் செலவிடும் தொகை, 3,391 ரூபாய். ஒரு ஆண்டுக்கு 12,000 கி.மீ நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், டீசலுக்காக மட்டும் 40,692 ரூபாய் செலவிடுவீர்கள்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

இந்தியாவின் நம்பர் 2 மைலேஜ் கார், ஹோண்டா அமேஸ். ஹோண்டாவின் முதல் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்த அமேஸ், மைலேஜில் கில்லி. நகர மைலேஜில் ஹூண்டாயிடம் தோல்வி அடைந்தாலும் பவர்ஃபுல் இன்ஜின்கொண்ட அமேஸ், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 20.8 கி.மீ மைலேஜ் அளிப்பது அதிசயம். மாதந்தோறும் 1,000 கி.மீ பயணம் என்ற கணக்கின்படி, ஹோண்டா அமேஸுக்கு நீங்கள் மாதந்தோறும் 3,479 ரூபாய்க்கு டீசல் நிரப்ப வேண்டியிருக்கும். ஹூண்டாய் எக்ஸென்ட்டுடன் ஒப்பிடும்போது, நீங்கள் ஹோண்டா அமேஸ் வாங்கினால் ஆண்டுக்கு 1,056 ரூபாய்தான் கூடுதலாகச் செலவு செய்வீர்கள். மைலேஜில் இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பெர்ஃபாமென்ஸைப் பொறுத்து, இரண்டில் எது உங்களுக்குப் பிடித்த கார் என்பதை முடிவு செய்யுங்கள்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

டீசல் கார்களுக்கான ஏரியாவில், சின்ன பெட்ரோல் இன்ஜினுடன் களம் இறங்கி, மைலேஜ் கார்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, டாடா நானோ. ஆனால், இது பெட்ரோல் கார் என்பதால், 1,000 கி.மீ பயணத்துக்கு நீங்கள் மாதந்தோறும் 4,286 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆண்டுக்கு நீங்கள் பெட்ரோலுக்காக மட்டும் 51,432 ரூபாய் செலவு செய்வீர்கள். ஆனால், ஹூண்டாய் எக்ஸென்ட்டின் விலைக்கு நீங்கள் கிட்டத்தட்ட 3 நானோ கார்களை வாங்கி விடலாம் என்பதால், எரிபொருள் செலவு இங்கே ஒரு பொருட்டு அல்ல. 3 லட்சம் ரூபாய்க்குள் அதிக மைலேஜ் கிடைக்கும் கார் வேண்டும் என்றால், டாடா நானோதான் ஒரே சாய்ஸ்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

செவர்லே பீட் டீசலுக்கும், நானோவுக்கும் மைலேஜில் பெரிய வித்தியாசம் இல்லை. ஹூண்டாய் எக்ஸென்ட்டுக்கு அடுத்தபடியாக, நகருக்குள் லிட்டருக்கு 16 கி.மீ வரை மைலேஜ் தரும் கார் செவர்லே பீட்தான். ஆனால், 936 சிசி திறன்கொண்ட இந்தச் சிறிய டீசல் இன்ஜின், நெடுஞ்சாலையில் அதிக டீசல் குடிக்கிறது. இதனால், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 19.1 கி.மீ.தான் மைலேஜ் தருகிறது பீட். இதனால்தான் நான்காவது இடத்துக்குப் பின்தங்கிவிடுகிறது செவர்லே பீட் டீசல்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

ஹூண்டாய் எக்ஸென்ட் மற்றும் கிராண்ட் ஐ10  - இரண்டு கார்களிலுமே இருப்பது ஒரே டீசல் இன்ஜின்தான். இந்த 1.1 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின், எக்ஸென்ட்டின் அதிக எடை காரணமாக, அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், கிராண்ட் ஐ10 காரைவிட, ஹூண்டாய் எக்ஸென்ட் ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், எக்ஸென்ட்டின் மைலேஜ் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

டாப் டென் மைலேஜ் கார்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கும் டாடாவின் இரண்டாவது கார், டாடா இண்டிகோ இசிஎஸ். 1396 சிசி, 69 bhp சக்திகொண்ட டாடாவின் இந்த டீசல் இன்ஜின், உண்மையிலேயே மைலேஜில் சிறந்த காராக இருக்கிறது. மாதக் கணக்கின்படி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரைவிட, இண்டிகோ இசிஎஸ் காருக்கு நீங்கள் மாதம் 13 ரூபாய்தான் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

மாருதி ஸ்விஃப்ட், ஸ்விஃப்ட் டிசையர், ரிட்ஸ் ஆகிய மூன்று கார்களிலுமே இருப்பது ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான். ஆனால், சிறந்த ட்யூனிங் காரணமாக ஸ்விஃப்ட்டைவிட கொஞ்சம் அதிக மைலேஜ் தரும் காராக இருக்கிறது டிசையர். மற்ற இரண்டு கார்களும் மைலேஜில் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. டிசையர், ஸ்விஃப்ட், ரிட்ஸ் ஆகிய மூன்று கார்களுமே நகருக்குள் 14.6 கி.மீ மைலேஜ் கொடுக்க, நெடுஞ்சாலை மைலேஜில்தான் வித்தியாசம். டிசையர் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 19.8 கி.மீ, ஸ்விஃப்ட் 19.5 கி.மீ, ரிட்ஸ் 19.3 கி.மீ மைலேஜ் தருகின்றன.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

ரெனோவின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட நிஸான் மைக்ரா, இந்தியாவின் டாப் டென் மைலேஜ் கார்களில் ஒன்று. அதிகபட்சமாக 63 bhp சக்தியை வெளிப்படுத்தும் மைக்ரா, நகருக்குள் லிட்டருக்கு 14.6 கி.மீ மைலேஜ் தருகிறது. இதே இன்ஜின்தான் பல்ஸ், டஸ்ட்டர், சன்னி, ஸ்காலா ஆகிய கார்களில் இருந்தாலும் மைலேஜுக்காகவே ட்யூன் செய்யப்பட்டு இருப்பதால், மைக்ரா முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

அதிக விலைகொண்ட, அதே சமயம் அதிக மைலேஜ் தரும் மிட் சைஸ் கார், ஹோண்டா சிட்டி மட்டுமே. ஆனால், அராய் சான்றிதழ்படி இந்தியாவின் நம்பர் ஒன் மைலேஜ் கார் சிட்டிதான் என்கிறது ஹோண்டா. நம்முடைய டெஸ்ட்டின்படி நகருக்குள் 14.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.5 கி.மீ மைலேஜ் தருகிறது, ஹோண்டா சிட்டி டீசல்.

இந்தியாவின் டாப்10 மைலேஜ் கார்கள்!

டாப் டென் மைலேஜ் கார்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஃபோர்டின் ஒரே கார், ஃபிகோ மட்டுமே! 1.4 லிட்டர், 68bhp சக்திகொண்ட ஃபோர்டின் இன்ஜின், ஹோண்டா சிட்டி டீசலைவிட குறைவான மைலேஜையே தருகிறது. ஹோண்டா சிட்டியைவிட நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 1 கிமீ வரை மைலேஜ் குறைவாகக் கொடுக்கிறது ஃபிகோ.