Published:Updated:

ஓடிக் களைத்த கார்களின் ஒய்யார அணிவகுப்பு... ஊட்டியில் வின்டேஜ் கார் ரேலி!

கண்ணைப்பறிக்கும் வண்ணம், காண்போரை கவரும் டிசைன் சாலைகளில் அரிதாகவே காணக்கிடைக்கும் பழங்கால கார்கள் எனக் களைகட்டியது கார் கண்காட்சி.

சாலையில் அணிவகுத்த பழங்கால கார்கள்
சாலையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ( கே.அருண் )

கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாத நீலகிரி மாவட்டத்தில், கோடைவிழா மாதமான மே மாதம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில், கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெறும். கடந்த 14 ஆண்டுகளாக ஊட்டி கோடை விழாவை அலங்கரித்த ஒன்று, பழங்காலத்து கார் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு.

புல்லட் ஃபேஸ் கார்
புல்லட் ஃபேஸ் கார்

நீலகிரி வின்டேஜ் அண்ட் கிளாசிக் கார் சங்கம் சார்பில், ஊட்டியில் பழங்காலத்து பாரம்பர்ய கார்களின் அணி வகுப்பு மற்றும் கண்காட்சி மே மாதம் நடைபெறும். கோடையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகம் வருவதால், போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், அப்போது பழைமை வாய்ந்த பாரம்பர்ய கார்களின் அணி வகுப்பு நடத்துவது சிரமமாக இருந்தது.

எனவே, இந்த ஆண்டு பழங்கால கார்களின் அணிவகுப்பு ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.

திட்டமிட்டப்படி ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. ஒரு வாரத்துக்கு முன்பே ஏற்பாடுகள் தயாராகின. இரண்டு தினங்களுக்கு முன்பே பாலக்காடு, பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளிலிருந்து, பழங்கால கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நின்றன. கண்ணைப் பறிக்கும் வண்ணம், காண்போரை கவர்ந்திழுக்கும் டிசைன் என 80 கார்களும் 40 பைக்குகளும் வரிசைகட்டி நின்றன.

கண்காட்சியில் இடம் பெற்ற சிறிய வகை கார்கள்
கண்காட்சியில் இடம் பெற்ற சிறிய வகை கார்கள்

ஊட்டியில் காலையிலிருந்து கன மழை பெய்துகொண்டிருந்தது. கடுமையான குளிரும் நிலவியது. ஆனாலும், மழையைப் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி ரேலி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கொடி அசைத்து ரேலியைத் தொடங்கி வைத்தார். வாகனங்கள் நகரத் தொடங்கின. 1931 முதல் 1960 வரை உற்பத்தி செய்யப்பட்ட பழங்காலக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லாத, சாலைகளில் மிக அரிதாகப் பார்க்கக்கூடிய புராதான கார்களான புல்லட் ஃபேஸ், ஆஸ்டின், மாரிஸ், செவர்லே, மெர்சிடஸ் பென்ஸ், இத்தாலியன் ஃபியட், பிளைமவுத், யாஸ், ஜீப், ஃபோர்டு ராணுவ ஜீப், கேரவன் உட்பட பல்வேறு வாகனங்களும் பங்கேற்றன.

பழங்கால கார் மற்றும் பைக்குகள்
பழங்கால கார் மற்றும் பைக்குகள்

கார்களின் அணிவகுப்பு, தமிழகம் மாளிகையில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. முக்கிய சாலை வழியாக கார்கள் அணி வகுத்து வருவதை சாலைகளின் இரு மருங்கிலும் நின்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் ரசித்து, புகைப்படம் எடுத்தனர்.

பினார் ஆனந்தகிரி திடலில் கண்காட்சிக்காக ஒவ்வொரு வாகனாமாக நிறுத்தப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இதை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரஜினிகாந்த் கூறுகையில், “இந்த முறை 1931 முதல் 1960 வரையில் உற்பத்திசெய்யப்பட்ட கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் ஜாக்குவார், பென்ஸ், டாட்ஜ் போன்ற பழைமையான கார்கள் அதிகளவு வந்துள்ளன. அதேபோல், 40 வகையான இரு சக்கர வாகனங்களும் பங்கேற்றுள்ளன. இவை அனைத்தும் ஓடும் நிலையில் உள்ளது பெருமைக்குரியது. மழையையும் பொருட்படுத்தாமல் பலரும் இந்தக் கார்களை காண வருவது சந்தோஷம்” என்றார்.

40-க்கும் அதிகமான பழங்கால கார்களைப் பராமரிக்கும் பொள்ளாச்சி நவீன் கூறுகையில், “எங்கள் தாத்தா காலத்தில் இருந்து ஊட்டியில் வின்டேஜ் கார்களைப் பராமரித்து வருகிறோம். நான் பள்ளிக்குச் சென்றதே புராதன காரில்தான்.

பொள்ளாச்சி நவீன்
பொள்ளாச்சி நவீன்

தற்போது 40 கார்கள் எங்களிடம் உள்ளன. இந்த ஆண்டு ஊட்டி வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு டாட்ஜ் 440 மற்றும் சவர்லே ஆகிய இரண்டு கார்களைக் கொண்டுவந்தோம். இந்தக் கார் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒரு குடும்ப நிகழ்வுபோல நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சி. அதேநேரம், விலைமதிப்பு மிக்க பழங்கால கார்களின் அருமை தெரியாத பலர், அதைக் குப்பையில் வீசுவதைப்போல, துருப்பிடிக்கச் செய்வது வேதனையளிக்கிறது’’ என்றார்.