உலகில் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொற்று வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், டெக் உலகில் லைவ் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. கடந்த மாதம் கூகுள் நிறுவனம் திறந்த வெளியில் டெவலப்பர் மாநாட்டை நடத்தியிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர் மாநாடு WWDC (Worldwide Developers Conference) விர்ச்சுவலாக மட்டுமே நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் டெவலப்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, விர்ச்சுவல் ப்ளஸ் லைவ் என WWDC 2022 மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் WWDC 2022 மாநாட்டின் ஹைலைட் விஷயங்கள் இங்கே!

பவர்ஃபுல் M2-SoC சிப்
ஆப்பிளின் சொந்தத் தயாரிப்பான M1- அல்ட்ரா SoC சிப்-தான் தற்போது வரை சந்தையில் அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இப்போது அதன் அடுத்த தலைமுறை சிப்-பை இந்த மாநாட்டில் ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. M2 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது 5- நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள்ளே 20 பில்லியன் ட்ரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது முந்தைய M1 சிப்பை விடவும் 25% கூடுதலாகத் திறன் கொண்டதாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் 10-core GPU இருப்பதால், கிராஃபிக்ஸ் திறனும் முந்தைய சிப்பைவிட 35% கூடுதலாக இருக்கும்.

MacBook Air
மேக் புக் ஏர்-ன் வடிவமைப்பை முழுவதுமாக மாற்றியமைத்திருக்கிறது ஆப்பிள். 13.6 இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய மேக்புக் ஏர்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் உள்ள 10-பிட் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 1 பில்லியன் கலர்களை சப்போர்ட் செய்யும். நாட்ச் டிஸைனுடன் வரும் இந்த மேக் புக்கில் முதல் முறையாக 1080p கேமராவைக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். இதில் புதிய M2 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிஸ்பிளேவுக்கும், கீபோர்டுக்கும் இடையில் நான்கு ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 18 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்ட இந்த மேக் புக்கில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. பழைய மேக் புக்-களில் இருந்த மேக்சேஃப் சார்ஜிங் வசதியைத் திரும்பக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். சில்வர், கோல்டு, ஸ்பேஸ் கிரே மற்றும் மிட்நைட் என நான்கு நிறங்களில் மேக் புக் ஏர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 256GB மாடல் ரூ.1,19,900 மற்றும் 512GB மாடல் ரூ.1,49,900-க்கும் கிடைக்கும் .
இந்தப் புதிய மேக் புக் ஏர், ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

MacBook Pro
13-இன்ச் டிஸ்ப்ளேவுடன் புதிய மேக் புக் புரோ-வை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இதிலும் புதிய M2 Soc சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டுடன் வரும் இந்த மேக் புக்கில் டச் பார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கனெக்டிவிட்டி மற்றும் சார்ஜிங்கிற்காக Thunderbolt USB 4 போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியில் இதில் இருக்கிறது. புதிய சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் பேட்டரி பேக்கப் அதிகரித்துள்ளதாகக் கூறும் ஆப்பிள், இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கிறது. 256GB மாடல் ரூ.1,29,900 மற்றும் 512GB மாடல் ரூ.1,49,900-க்கும் விற்பனைக்கு வரவுள்ளது.MacBook Airபவர்ஃபுல் M2 - SoC சிப்

ios 16, macOS Ventura மற்றும் WatchOs9
ஐபோன்களுக்கான இயங்குதளமான iOS 16 இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் இந்த iOS 16-ல் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்திருப்பது லாக் ஸ்கிரீனில்தான். இனிமேல் லாக் ஸ்கிரீனில் உள்ள வால்பேப்பர், ஃபான்ட் ஸ்டைல் ஆகியவற்றை விருப்பத்திற்கேற்றபடி மாற்றம் செய்து கொள்ள முடியும். ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் வசதியும், திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இந்த இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் மேக் புக்-களுக்கான புதிய இயங்குதளமான macOS Ventura மற்றும் ஆப்பிள் வாட்ச்களுக்கான புதிய இயங்குதளமான WatchOS9-ஆகியவையும் பல்வேறு புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.