
முடிவுக்கு வருகின்றனவா டி.டி.ஹெச், கேபிள் டி.வி-கள்?
வீடுகளில் மக்களுக்கான பொழுதுபோக்கு என்றாலே கேபிள் டி.வி, டி.டி.ஹெச் மற்றும் டி.வி.டி-யில் சினிமா பார்ப்பது என்கிற காலம் காலாவதியாகிவருகிறது. ‘இரண்டாயிரத்தின் குழந்தைகள்’ இப்போது வேறு லெவல். அவர்கள் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் (Over The Top) என்னும் இணையவழி பொழுதுபோக்குச் சேவைகளுக்கு மாறிவருகிறார்கள்.
ஜியோவின் ‘அதிரடி’ அறிமுகம், பொழுதுபோக்குச் சந்தையில் ஏற்பட்ட புரட்சி எனலாம். கேபிள் டி.வி, டி.டி.ஹெச் இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இன்றைய இளம் தலைமுறையினரின் இனிய சாய்ஸ், இணையம் மட்டுமே. விரல்நுனியில் விரும்பிய திரைகள் செல்போன்களில் விருந்தளிக்கின்றன. திரைப்படங்கள், சீரியல்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள், செய்தி சேனல்கள் என எதுவுமே இதிலிருந்து தப்ப முடியாது. விளைவாக, நாடு முழுவதுமே கேபிள் மற்றும் டி.டி.ஹெச் பயனாளர்கள் குறைய தொடங்கியிருக்கிறார்கள்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’யின் சமீபத்திய அறிக்கையும் இதையே உறுதிசெய்கிறது. 2019, மார்ச் மாத முடிவில் இந்தியாவில் டி.டி.ஹெச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.2 கோடி. இதுவே 2019, ஜூன் மாத முடிவில் 5.4 கோடியாகச் சரிந்திருக்கிறது. 2019, மார்ச் மாதம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச் சேவைக் கட்டணங்களில் ‘டிராய்’ கொண்டுவந்த மாற்றமும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
நாடு முழுவதும் கேபிள் டி.வி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் பணி கிட்டத்தட்ட முடிவை எட்டிவிட்டது. இதனால், ‘கேபிள் மற்றும் டி.டி.ஹெச் சந்தையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். இந்தச் சேவைகள் ஒரே சீரான கட்டணத்தில் கிடைக்க வேண்டும்’ என்று கட்டண நிர்ணயத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது டிராய். ஆனால், வாடிக்கையாளர்கள் பலரும் இந்தக் கட்டண மாற்றங்களால் அதிருப்தி யடைந்தனர். கேபிள் டி.வி வாடிக்கையாளர் களோ, ‘இந்த நடைமுறையில் குறைந்த எண்ணிக்கையிலான சேனல்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது’ என நொந்துகொண்டனர். இப்படியாகத்தான் கேபிள் டி.வி-க்களும் டி.டி.ஹெச் சேவையும் பின்னடைவை நோக்கிச் செல்லத் தொடங்கின.
இந்தச் சூழலில்தான் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளும் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கின. (எதிர்காலத்தில் விலை உயரலாம்). இதுபோதாதென ஸ்மார்ட் டி.வி-களும் சந்தையில் குவிந்தன. இப்படியாகத்தான் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் சேவைகள் இன்று ஓஹோவென வளர்ந்துவருகின்றன.
தற்போது இந்தியாவில் இருக்கும் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் தளங்களை மூன்றாகப் பிரித்துவிடலாம். ஒன்று, சர்வதேச அளவில் இயங்கும் அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகள். இவற்றுக்கு பணம் கட்டவேண்டும். இவற்றில் படங்கள் மற்றும் சர்வதேசத் தொடர்கள் அதிகம் இருக்கும். வேகமான டெலிவரி, மியூசிக் ஸ்ட்ரீமிங் போன்ற சேவைகளும் கிடைப்பது கூடுதல் ப்ளஸ்.

இரண்டாவது, பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ5 போன்ற சேவைகள். நம் ஊர் சீரியல்களை இணையத்தில் பார்க்க விரும்புபவர்களின் சாய்ஸ் இவை.
மூன்றாவது, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஜியோ சினிமா, டி.வி, வோடஃபோன் பிளே போன்ற சேவைகள். டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் தொலைத்தொடர்பு சேவைகளுடன் இலவசமாகத் தரும் ஸ்ட்ரீமிங் சேவைகள் இவை. இந்த டிரண்டை இந்தியாவில் தொடங்கிவைத்தது ஜியோதான். வேறு வழி இல்லாமல் மற்ற நிறுவனங்களும் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. இந்தச் சேவைகளில் பல டி.வி சேனல்களை லைவ்வாகப் பார்க்க முடியும். இதுபோக, வேறு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் இதில் கிடைக்கின்றன. இவை தவிர, விளம்பரங்களுடன் இயங்கும் யூ டியூப், எம்.எக்ஸ்.பிளேயர் போன்ற இலவசச் சேவைகளும் இருக்கின்றன.
இப்படித் தேர்ந்தெடுக்க அதிக ஆப்ஷன்கள் இருப்பதுதான் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங்கின் மிகப்பெரிய பலம். மேலும், இவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் அல்லது வசதியான நேரத்துக்குக் கிடைக்கும் ஆன் டிமாண்ட் (On-demand) சேவைகள். டி.வி சேனல்களைப்போல் ஒரு நிகழ்ச்சிக்காகவோ திரைப்படத்துக்காகவோ குறிப்பிட்ட ஒரு நேரத்துக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நேரலை நிகழ்ச்சிகளைத் தவிர அனைத்தையும் எங்கேயும் எப்போதும் பார்த்துக்கொள்ளலாம்.
இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஐந்தில் நான்கு பேர், குறைந்தபட்சம் ஒரு ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இந்தத் தொழில்நுட்பத்தில் உலக அளவில் பெரும்வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தத் தொழில்நுட்ப வீச்சின் எல்லை இனி எவ்வளவு காலம் என எட்டிப்பார்க்க இயலவில்லை. இணையம் என்பதால் இதன் பரிணாம வளர்ச்சி நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதனால், இந்தியாவில் தற்போது சுமார் 17 கோடி வாடிக்கையாளர்களைக்கொண்ட ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் சந்தை 2022-ம் ஆண்டுக்குள் 30 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேபிள் டி.வி மற்றும் டி.டி.ஹெச் சரிவுக்கு மற்றொரு காரணம், ஓ.டி.டி ஸ்ட்ரீமிங்கில் உடனுக்குடன் வெளிவரும் திரைப்படங்கள். இன்றெல்லாம் பெரும்பாலான படங்கள் வெளியான இரு மாதங்களுக்குள் இந்தத் தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதுவும் திரையரங்குகளில் வெளியாகும் அதே ‘4K’ தரத்தில். தற்போது தென்னிந்திய திரையுலகில் படம் வெளியாகி, குறைந்தபட்சம் 30 நாள்கள் கழித்துதான் ஓ.டி.டி ஸ்ட்ரீமிங்கில் வெளியிட வேண்டும் என்ற ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு வந்த ‘கைதி’ படம்கூட தற்போது ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்தக் கால இடைவெளி வரும் நாள்களில் இன்னும்கூட குறையலாம். இது திரையரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்கிற விவாதங்கள் இப்போதே றெக்கைக் கட்டுகின்றன. இன்னும் இடைவெளி குறைந்தால் அவ்வளவுதான். ஆனால், தொழில் போட்டி என வந்துவிட்டால் தரமும் முன்கூட்டியே கொடுப்பதும்தானே பிரதானம்!
அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில், சிறப்பு நாள்களுக்காகக் காத்திருந்து டி.வி-யில் படம் பார்க்கும் பொறுமையெல்லாம் இன்று யாருக்குமில்லை ப்ரோ!
`அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் போன்ற ஓ.டி.டி (over-the-top) ஸ்ட்ரீமிங் தளங்களின் வருகையால், டி.டி.ஹெச் மற்றும் கேபிள் டிவிகளின் எதிர்காலம் என்னாகும்?’ - மக்களிடம் கேட்டோம். அவர்கள் சொல்லும் பதிலை காணொலியில் காண...