Published:Updated:

இணையதளங்களில் திருடப்படும் தகவல்களை வைத்து என்ன செய்வார்கள்? | Doubt of Common Man

தகவல் திருட்டு
News
தகவல் திருட்டு

திருடப்படும் தகவல்கள் மொத்தமாக டார்க் வெப்பில் பல லட்சும் ரூபாய்க்கு விற்பனையாகும். ஒரு நபருடைய தகவல் தொகுப்பில் எவ்வளவு தகவல்கள் இருக்கின்றன என்பதைப் பொருத்து பல ஆயிரம் ரூபாய் வரை விலை போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Published:Updated:

இணையதளங்களில் திருடப்படும் தகவல்களை வைத்து என்ன செய்வார்கள்? | Doubt of Common Man

திருடப்படும் தகவல்கள் மொத்தமாக டார்க் வெப்பில் பல லட்சும் ரூபாய்க்கு விற்பனையாகும். ஒரு நபருடைய தகவல் தொகுப்பில் எவ்வளவு தகவல்கள் இருக்கின்றன என்பதைப் பொருத்து பல ஆயிரம் ரூபாய் வரை விலை போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தகவல் திருட்டு
News
தகவல் திருட்டு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் ஆகாஷ் என்ற வாசகர், "திடீர் திடீர் என்று குறிப்பிட்ட இணையதளங்களில் நாம் பயன்படுத்திய பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அந்தத் தகவல்களை வைத்து என்னதான் செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

நவீன டெக்னாலஜி யுகத்தில் இது போன்ற தகவல் திருட்டுகள் தடுக்க முடியாதவை. உலகின் முன்னணி டெக் ஜாம்பவானாக வலம் வரும் அமெரிக்க அரசின் சில தளங்கள் கூட இந்த வருடத் தொடக்கத்தில் கணிணி வைரஸால் தாக்கப்பட்டு, அதில் இருக்கும் தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. கடந்த மே மாதம் கூட பிக் பாஸ்கெட், ப்ளிப்கார்ட் மற்றும் ஏர் இந்தியா போன்றவற்றின் தளங்களின் இருந்து தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்போதும் இத்தனை மில்லியன் தகவல்கள் திருட்டு என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தத் தகவல்களை வைத்து என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் நமக்கு அவ்வப்போது எழும். அதேபோன்ற ஒரு சந்தேகம்தான் நமது டவுட் ஆஃப் காமன் மேன் வாசகருக்கு எழுந்திருக்கிறது.

Hacking | டிஜிட்டல் தகவல்கள்
Hacking | டிஜிட்டல் தகவல்கள்

பொதுவாக இது போன்ற இணையத் தகவல் கசிவு அல்லது இணையதள தகவல் திருட்டில் தகவல்கள் என்றால் என்னென்ன மாதிரியான தகவல்கள் என்ற சந்தேகம் இருக்கும். ஒவ்வொரு தளத்திலும் அந்தத் தளத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு தகவல்களைக் கொடுத்து வைத்திருப்போம். நமது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெரும்பாலும் அனைத்துத் தளத்திலும் பயன்படுத்தியிருப்போம். தகவல் திருட்டில் முதன்மையாகத் திருடப்படுபவை பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள் ஆகியவைதான். கடவுச் சொற்கள் பாதுகாக்கப்படும் அம்சம் என்பதால் இந்தத் தகவல்களுடன் நமது கடவுச்சொற்களும் கிடைப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இல்லை.

இந்தத் தகவல்களைத் தனித்தனியாகப் பிரித்தால் ஒரு உபயோகமும் கிடையாது. நம் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை வைத்தே பல காரியங்களைச் செய்ய முடியும். ஆனால், இதனைத் திருடும் அனைவருக்கும் உபயோகப்படுத்தத் தெரியுமா என்பது தெரியாது. எனவே, திருடப்படும் தகவல்கள் மொத்தமாக டார்க் வெப்பில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு நபருடைய தகவல் தொகுப்பில் எவ்வளவு தகவல்கள் இருக்கின்றன என்பதைப் பொருத்து நூறு ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை விலை போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நமது வங்கித் தகவல்கள், நம்முடைய பெயர் மற்றும் மொபைல் எண் உட்படக் கிடைத்தால் பல ஆயிரங்கள் விலைக்குக்கூட வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள்.

தகவல் திருட்டு
தகவல் திருட்டு

நம்முடைய தகவல்களை வைத்து போலியாக ஒரு சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் நம்முடைய நட்பு வட்டங்களில் இருந்து பணம் பறிக்க முயலலாம். இப்படித் திருடப்படும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏராளம். நம்முடைய மின்னஞ்சல் முகவரியுடன் அதன் கடவுச்சொல்லும் கிடைத்தால், அவ்வளவுதான். நம்முடைய மொத்த இணைய வாழ்வும் அவர்கள் கையில் என வைத்துக் கொள்ளலாம். இதனால்தான் எல்லாத் தளத்திற்கும் ஒரே கடவுச் சொல்லைப் பயன்படுத்தாதீர்கள் எனத் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு தளத்திற்கான கடவுச் சொல்லை யாராவது கண்டறிந்தாலும் அந்தத் தளத்தைத் தவிர வேறு தளங்களை அவர்களால் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதால்தான்.

தகவல் திருட்டில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி
தகவல் திருட்டில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி

தப்பிப்பது எப்படி?

இது போன்ற தகவல் திருட்டுகளில் இருந்து தப்பிக்கவே முடியாதா என்றால், முடியாது என்பதுதான் சோகமான உண்மை. ஆனால், நம் தகவல்களைப் பெறுபவர்கள் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும். மேலே கூறியது போல நாம் பயன்படுத்தும் தளங்களுக்கு வெவ்வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தலாம். மிக முக்கியமான வங்கிக் கணக்கு, நம் மின்னஞ்சல் கணக்கு போன்றவற்றுக்கு அதிக பாதுகாப்பிற்காக Two-Factor Authentication-ஐ பயன்படுத்தலாம். நம்பகம் இல்லாத இணையதளங்களில் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேவையற்ற தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம். இது போன்ற சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தேவையில்லாமல் நமது தகவல்கள் அடுத்தவர் கைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

இதேபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man