சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டிரோன் போர்... சுரங்க அட்டாக்...

டிரோன்
பிரீமியம் ஸ்டோரி
News
டிரோன்

இந்தியாவை மிரட்டும் அண்டை தேசங்கள்!

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, கூட்டம் சேர்ந்து கேரம் ஆடியவர்களையும் கிரிக்கெட் பேட் பிடித்தவர்களையும் விரட்டி விரட்டிப் படம் பிடிக்க நாம் டிரோன்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் டிரோன்களை வைத்து ஒரு போரையே நடத்தி ஜெயித்துவிட்டது அஜெர்பைஜான் என்ற நாடு.

 ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இந்தியாவுக்குள் வருவது இப்போது கடினமாகியிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் இப்போது சுரங்கம் தோண்டி அவர்களை உள்ளே அனுப்புகிறது.

 ‘டிரோன்கள் மூலம் போதைப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி, தீவிரவாதிகளுக்கு மறைமுகமாகப் பண உதவி செய்கிறது பாகிஸ்தான்’ என இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

டிரோன் போர்... சுரங்க அட்டாக்...

இந்த மூன்று செய்திகளையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளி, நம் தேசத்தின் பாதுகாப்பு. ராணுவ அத்துமீறல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தற்காப்பு உத்திகள், போர்த் தாக்குதல்கள் போன்ற எல்லாமே பிரமாண்ட ஆயுதங்களும் நவீனத் தொழில்நுட்பங்களும் சார்ந்தவை என நாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், ‘எளிய ஆயுதங்களும் பழைய வழிமுறைகளுமே போதும்’ என உலகம் இப்போது நிரூபிக்கிறது.

எந்தத் தேசமும் போருக்குத் தயாரில்லை என்றாலும், எல்லா தேசங்களுமே ஆயுதங்களில் பெருமளவு முதலீடு செய்துதான்வருகின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்கா ராணுவத்துக்குச் செலவு செய்த தொகை மட்டும் 50 லட்சம் கோடி ரூபாய். வளர்ந்த தேசங்களே தங்கள் ஆயுதக் கிடங்குகளைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் போது, ‘இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்ற கேள்வி இயல்பாகவே எழும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்தபடியாக ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் தேசம் நாம்தான். 2019ம் ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாயை ராணுவச் செலவாகக் கணக்குக் காட்டியிருக்கிறோம். ‘அமெரிக்கா செலவு செய்வதில் பத்தில் ஒரு பங்குதானே இந்தியா செலவு செய்திருக்கிறது, அப்படியெனில் நாம் வளர்ச்சித் திட்டங்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறோமா’ என்கிற கேள்வி எழலாம். ஆனால், பிரச்னை அதுவல்ல. நம் பலத்தை எடைபோடும் தராசு, எப்போதும் எதிரியின் வீட்டுக்குள்தான் இருக்கிறது. கடந்த தசாப்தத்தைவிட இந்த தசாப்தத்தில் நம் ராணுவச் செலவு 37% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் செய்த செலவு 70% அதிகமாகியுள்ளது.

டிரோன் போர்... சுரங்க அட்டாக்...

ராணுவத்தில் நம் கவனம் எதில் இருக்கிறது? ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் நடக்கும் கண்காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அவை பண்டைய இலக்கியங்களில் வரும் குறிப்புகள் போல, பயன்படுத்தப்படாமல் புத்தம் புதிதாய்க் காட்சி தரும் பெரிய வகை ஏவுகணைகள். இந்தியாவிலிருந்து எலுமிச்சையை எடுத்துக்கொண்டு போய், பிரான்ஸிலிருந்து நாம் கொண்டு வந்த ரஃபேல் விமானங்கள்கூட ராட்சத அளவிலானவைதான். இவற்றைத் தாண்டி டிரோன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கடந்த சில மாதங்களாக அர்மேனியாவுக்கும், அஜெர்பைஜானுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இரண்டுமே ரஷ்யாவிலிருந்து பிரிந்த தேசங்கள். தீராத எல்லைத் தகராறு அவ்வப்போது போராக வெடிக்கும். இந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த போரில்தான் டிரோன்களின் சுயரூபத்தை மொத்தமாய் உலகம் கண்கள் விரியப் பார்த்தது. துருக்கியின் உபயத்தால் பெற்ற டிரோன்களின் மூலம் அர்மேனிய அரசின் ராணுவத்தை சல்லடையாக்கியது அஜெர்பைஜான். ரஷ்யாவின் உதவியுடன் பெரிய அளவிலான போர் விமானங்களை அர்மேனியா எடுத்து வானில் பறப்பதற்குள் எல்லாவற்றையும் முடித்துத் தள்ளியது அஜெர்பைஜான். பாரம்பர்ய போர் விமானங்களுக்கும் 2K டிரோன்களுக்குமான யுத்தத்தில் டிரோன்கள் மிக எளிதாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு அமைதியாக நின்றன. 450 ராணுவ வாகனங்கள், 70 ராக்கெட் லாஞ்சர்கள், 180 டாங்குகள், 90 ராணுவ வாகனங்கள் என அர்மேனியாவின் பலத்தை குறைந்த செலவிலான டிரோன்களின் மூலமே தீர்த்துக் கட்டியது அஜெர்பைஜான். 2,300 அர்மேனியா ராணுவ வீரர்கள் இதுவரையில் பலியாகியிருக்கிறார்கள். ரேடார்களின் கண்களில் சிக்காமல் மனிதர்களின் கை அசைவில் இந்த டிரோன்கள் செய்யும் மாயாஜாலங்களும் ஆச்சர்யங்களும் ஆயிரம்.

டிரோன் போர்... சுரங்க அட்டாக்...

மரபான போர் விமானங்கள்போல இந்த டிரோன்கள் ரேடாரின் கண்காணிப்பில் சிக்குவதில்லை. அதனால் இவை வருவதே யாருக்கும் தெரியாது. பெரிய ஏவுகணைகள் மூலம் இவற்றை வீழ்த்த முடியாது. அந்த அளவுக்கு சிறிய இலக்குகள். ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன பல நாடுகள். அந்தக் கட்டமைப்பை சர்வசாதாரணமாக தவிர்த்துவிடுகின்றன இவை. காகிதத்தில் விமானம் செய்து நிஜ விமானத்தை வீழ்த்துவது போன்ற சாகசம்தான் இது.

2001 செப்டம்பரில் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய தாலிபன் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பதிலடி கொடுத்தது டிரோன்கள் மூலமாகத்தான். கடந்த 20 ஆண்டுகளில் டிரோன்கள் அளவில் சிறியதாகவும், அசம்பாவிதத்தில் பயங்கரமாகவும் உருமாறிவிட்டன. சில ஆண்டுகளாக துருக்கியின் அனுக்கிரகத்தால் டிரோன்களை வாங்கிக் குவிக்கிறது பாகிஸ்தான். ஆம், அர்மேனியா மீதான தாக்குதலுக்கு அஜெர்பைஜான் பயன்படுத்திய பைராக்தார் TB-2 வகை டிரோன்களைத்தான் பாகிஸ்தானும் வாங்கிக் குவிக்கிறது.

ஒருபக்கம் பாகிஸ்தான், நேச நாடுகளின் துணையுடன் டிரோனில் செலவு செய்துவருகிறது. இன்னொரு பக்கம் சீன அரசாங்கமோ சுயமாகவே டிரோன்களை உருவாக்கிவருகின்றது. இந்தியா தற்போது வரையில் உளவு பார்க்கவும், ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மட்டுமே டிரோன்களைப் பயன்படுத்திவருகிறது. அதுவும் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹரோப் ரக டிரோன்கள். அமெரிக்காவிடமிருந்து 30 கார்டியன் ரக டிரோன்களை வாங்குவதற்கு நான்காண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இந்தியா. சமீபத்தில்தான் இந்த டீல் முடிந்தது. அவ்வளவு தாமதம்!

சிரியாவிலும் லிபியாவிலும் துருக்கிய டிரோன்கள்தான் அட்டகாசம் செய்தன. அர்மேனியாவை அச்சத்தில் உறைய வைத்ததும் துருக்கியின் டிரோன்கள்தான். ரஷ்ய போர்க்கருவிகளை வைத்திருந்த சிரியாவால், துருக்கியின் டிரோன்களை எதுவுமே செய்யமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். ஈராக், சிரியா, லிபியாவில் அமெரிக்காவும், பிரிட்டனும் டிரோன்களைத்தான் பயன்படுத்தின. கடந்த நான்காண்டுகளில் நிகழ்ந்த போர்களில் டிரோன்களின் பங்கு அளப்பரியவை. ‘போர் தவறு’ என்னும் வாதம் ஒருபுறம் பேசலாம் என்றாலும், ஓர் அரசு அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்தல் அவசியம்.

துருக்கி அளவுக்கு இல்லையென்றாலும், அதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பவை அமெரிக்க டிரோன்கள்தான். ஆனால், அவற்றை வாங்கவே நாம் காலம் தாழ்த்திவருகிறோம். நாம் வைத்திருக்கும் ஏவுகணைகள் பெரிய விமானங்களைத் தாக்குவதில் சர்வ வல்லமை பொருந்தியவை. ஆனால், இந்தச் சிறிய ரக டிரோன்களை அவற்றால் குறிவைத்துத் தாக்க இயலாது. கிட்டத்தட்ட கொசுவை பீரங்கியால் சுடுவது போன்ற அபத்தம் அது!

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக நம்மை சுரங்கப் பாதைகள் மூலமாகவும் டிரோன்கள் மூலமாகவும் அச்சுறுத்திவருகிறது பாகிஸ்தான். கடந்த மூன்று மாதங்களில் ஜம்முவின் சம்பா பகுதியில் இரண்டு சுரங்கங்களைக் கண்டுபிடித்திருக்கிறது இந்தியா. 200 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை வழியாக வந்த நான்கு பயங்கரவாதி களை ஜம்முவின் நக்ரோட்டா பகுதியில் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தான் எல்லையில் பெரிய அளவில் வளரும் யானைப்புற்களின் மறைவில் இரவு நேரத்தில் இந்தச் சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. இரு தேசங்களின் உடன்படிக்கையின் படி, இந்தப் புல்லை சரியான கால அளவில் வெட்ட வேண்டும். ஆனால், இந்தப் புற்களின் மறைவில் சுரங்கங்கள் தோண்டி, அவற்றின் வழியே பயங்கரவாதிகளையும், கடத்தல்காரர்களையும் பாகிஸ்தான் இந்தியாவுக்குள் அனுப்புவதாக புகார்கள் எழுந்துவருகின்றன. இவர்களுக்கு ஆயுதங்களை டிரோன் மூலம் சப்ளை செய்கிறது பாகிஸ்தான். இன்னொரு பக்கம் கடத்தல்காரர்களுக்கு போதை மருந்துகளை டிரோன்கள் மூலம் அனுப்பி, தீவிரவாதச் செயல்களுக்கு உதவி செய்கிறது.

சுரங்கம் தோண்டி ஊடுருவுவது பழைய டெக்னிக். ஆனால், வளரும் தொழில்நுட்ப யுகத்தில் இந்தச் சுரங்கங்களை எளிதாகக் கண்டறிய எந்த டெக்னாலஜியும் இல்லை. ராணுவ வல்லமை பொருந்திய இஸ்‌ரேலில் சுரங்கங்கள் மூலமே ஊடுருவித் தாக்குதல் நடத்து கிறார்கள் சில போராளி அமைப்பினர். அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்களைக் கடத்த மெக்சிகோ மாஃபியாக்கள் சுரங்கங்களையே பயன்படுத்து கிறார்கள். நேரடியாக ராணு வத்தினர் சென்று கண்காணித்தால் மட்டுமே இவற்றைக் கண்டறிய முடியும்.

சரி, எல்லாப் பழியையும் பாகிஸ்தான் மீதும், தொழில்நுட்பப் போதாமைகளின் மீதும் போட்டுவிட்டு, நாம் வளர்த்துக்கொண்டிருக்கும் தாடியைச் சொறிந்துகொண்டிருக்க முடியுமா என்ன? பாகிஸ்தானுடனான நம் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை நாம் கண்காணிக்க வேண்டும். ஆனால், வெறும் 5 கி.மீ அளவிலான தூரத்தை பரிசோதனை அடிப்படையில் கண்காணிப்பதற்காக நம் ராணுவம் மத்திய அரசிடம் அனுமதி வாங்கவே ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அப்படியெனில் மொத்தமுள்ள 3,000 கி.மீ-க்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?

சுரங்கங்களில் மெத்தனமாக இருக்கிறோம். டிரோன்களை நாமே உருவாக்க முடியாதா என்றால், நிச்சயம் முடியும். 2005-ம் ஆண்டு அப்படி உருவானதுதான் பைராக்தார் புராஜெக்ட். 26 வயதான செல்கக் பைராக்தார் என்பவர், துருக்கி ராணுவத்திடம் டிரோன்கள் பற்றிப் பேசுகிறார். பைராக்தாரின் நண்பர்கள் பலர் அமெரிக்காவிலேயே படித்துவிட்டு அமெரிக்காவுக்கு வேலைசெய்து லாபம் ஈட்டிவர, பைராக்தார் மட்டும் அமெரிக்காவிலிருந்து துருக்கிக்கு வந்து டிரோன்களில் ஆர்வம் காட்டினார். விளைவு... பதினைந்தே ஆண்டுகளில் உலகின் நம்பர் ஒன் இடத்தை, ஐரோப்பிய அமெரிக்க தேசங்களைக் கடந்து துருக்கியின் பைராக்தர் ரக டிரோன்கள் பெற்றிருக்கின்றன. கோடிங் எழுதும் மூளை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உண்டு. அப்படி ஓர் தேசபக்தி பைராக்தாரை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

உலக அளவில் டிரோன்களில் நம்பர் ஒன்னாக விளங்கும் துருக்கியின் ஆதரவு, பாகிஸ்தானுக்கு அசுர பலம். இன்னொரு பக்கம் சீனாவும் டிரோன்களைப் பறக்கவிட்டு மிரட்டுகிறது. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் விழித்துக்கொள்ள வேண்டும். லடாக்கைப் பங்கு போட சீனாவும், காஷ்மீரைப் பங்கு போட பாகிஸ்தானும் குறியாக இருக்கும்போது தூங்குவதே தவறு. விழித்துக்கொள்ள யோசனை செய்தபடி இருப்பது மாபிழை.