ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிரடிப் பணி நீக்கம், ப்ளூ டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் உருப்படும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர். இதனால் எலான் மஸ்க், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?" என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் எலான் உறுதியளித்திருந்தார். இறுதியில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பின. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் (ஆம்) என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் பதவி விலக வேண்டாம் (இல்லை) என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து எலான் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்" என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் பலரும் தங்களது விவரங்களைக் குறிப்பிட்டு எலான் மஸ்க்கின் ட்விட்டர் சிஇஓ பதவிக்கு விண்ணப்பித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி, ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் பணியாற்ற விரும்புவதாக, இ-மெயிலை கண்டுபிடித்த சாதனைத் தமிழரான சிவா அய்யாதுரை ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "டியர் எலான் மஸ்க், நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். எம்.ஐ.டியிலிருந்து 4 பட்டங்களைப் பெற்றுள்ளேன். 7 வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளேன். எனவே ட்விட்டர் சிஇஓ பொறுப்புக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையைப் பற்றி எனக்குத் தெளிவுபடுத்தவும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.