Published:Updated:

`எங்கள் போன்களை ஹேக் செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசு!' -இது கூகுளின் ஆஃபர்

இவை அனைத்துமே தற்போது வரை அப்டேட் செய்யப்பட்ட பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

இன்று ஸ்மார்ட்போன் என்றாலே ஆண்ட்ராய்டுதான் முதலில் நினைவுக்கு வரும். அந்த ஆண்ட்ராய்டை வடிவமைக்கும் நிறுவனம் கூகுள். இந்த நிறுவனம் சில வருடங்களாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களும் தயாரித்து வருகிறது. அப்படி தான் தயாரிக்கும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அறிவித்துள்ளது கூகுள்.

இந்த அறிவிப்பின்படி, கூகுளின் பிக்ஸல் 3 மற்றும் பிக்ஸல் 4 ஸ்மார்ட்போன்களை நூதன முறையில் ஹேக் செய்பவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பரிசை வெல்ல இந்த போன்களில் இருக்கும் டைடன் எம் என்ற பாதுகாப்பு சிப்பை முறியடிக்க வேண்டியிருக்கும். இது ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு சிப்களுக்கு இணையான ஒரு பாதுகாப்பு சிப். உதாரணத்துக்கு ஹேக்கர் ஒரு மால்வேரை ஆண்ட்ராய்டு மொபைலில் ஏற்றப் பார்க்கிறார் என்றால் உடனடியாக ஆப்களின் பாஸ்வோர்டை இது பாதுகாக்கும்.

பிக்ஸல் போன் | Pixel Phone
பிக்ஸல் போன் | Pixel Phone

இதனுடன் கூடுதலாக ஆண்ட்ராய்டின் Developer preview-ல் இருக்கும் கோளாறுகளைக் கண்டுபிடித்தால் $1.5 மில்லியன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மொபைலில் உள்ள தகவல்களைத் திருடுதல் மற்றும் லாக் ஸ்க்ரீன் பை-பாஸ் போன்ற குறிப்பிட்ட வகையான தாக்குதல்களுக்கு 5,00,000 டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றதொரு போட்டியை ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது.

டார்க் தீம், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோடு... எப்படி இருக்கு `ஆண்ட்ராய்டு 10'? #HandsOn

நவம்பர் 21-லிருந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த அதிக பரிசுத் தொகை செல்லும். எதற்கெல்லாம் என்ன பரிசுத் தொகை என்பதைக் கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பரிசுத் திட்டத்தின் விதிமுறை பக்கத்தில் சென்று பார்க்கலாம். இவை அனைத்தும் தற்போது வரை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கூகுள்
கூகுள்

சமீபத்தில் எல்லா பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் புதிய மெபைல் சாதனங்களின் பாதுகாப்பை பலப்படுத்த இதுபோன்ற 'Bug Bounty' போட்டிகள் நடத்தப்பட்டு பெரிய தொகை பரிசாக அளிக்கப்பட்டுவருகிறது. கூகுள் நிறுவனம், கடந்த 12 மாதங்களில் மட்டும் $1.5 மில்லியனை இத்தகைய ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது.

இந்நிறுவனம் அதிகபட்ச பரிசுத் தொகையை குவாங்க் காங்க் என்பவருக்கு ஒரே டச்சில் பிக்சல் 3-யை ஹேக் செய்ததற்காக வழங்கியது . இதில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு வெகுமதி திட்டத்தின் கீழ் $1,61,337 டாலரும் குரோம் திட்டத்தின் கீழ் $40,000 டாலரும் என மொத்தம் $ 2,01,337 டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் கூகுள் $2,00,000 வெகுமதியாக வழங்கியதே அதிகபட்ச தொகையாக இருந்தது. கூகுளைவிட அதிகமாக வாவே (huawei) நிறுவனம் ரீமோட் முறையில் தனது ஆண்ட்ராய்டு சாதனங்களை ஹேக் செய்ததற்காக $2,20,000 வழங்கியிருந்தது.

தகவல் திருட்டு மற்றும் அடுத்தவர் மொபைலில் ஊருடுவது போன்ற செயல்கள், இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே, தொழில்நுட்ப நிறுவனங்களின் இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.