Published:Updated:

நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்... ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்... ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23
நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்... ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23

நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்... ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23

'அரேபிய வசந்தம்' எனப்படும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய மக்கள் புரட்சி வளைகுடா நாடுகளின் சர்வாதிகாரிகள் பலரை தூக்கி அடித்தது. உல்லாச வாழ்வில் திளைத்த அரேபிய மன்னர்களை நடுங்க வைத்து, மக்களின் பக்கம் திருப்பி எண்ணற்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து ஆட்சியை தக்கவைக்க செய்தது. அன்று எந்த அரசாலும் இப்புரட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுகள் விழித்துக்கொள்ளும் முன்பே இந்த காட்டுத்தீ பரவிவிட்டது. இதை சாத்தியப்படுத்தியது ஒன்றே ஒன்று தான். ட்விட்டர் என்ற இணையக் குருவி. இந்த குட்டியூண்டு குருவியை கண்டு இன்றும் பல அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், சர்வாதிகாரிகள் மிகுந்த எரிச்சலும், உள்ளூர பயமும் கொள்கிறார்கள். அதனால் தான் டிவிட்டரை சீனா, வடகொரியா, இரான் போன்ற சர்வாதிகார நாடுகள் நிரந்தரமாக தடை செய்துள்ளன. 

நம் தேசத்தில்கூட காஷ்மீரில் சிலமுறை இணையமே தடை செய்யப்பட்டது. காரணம், மக்கள் எழுச்சியின் மீதான அரசுகளின் அச்சமே. வேறு எந்த சமூகவலைதளத்தை விடவும் டிவிட்டர் வேகமானது. 140 எழுத்துக்களில் உங்கள் கருத்தை பதிய வைக்க வேண்டும் என்ற வரையறையே காரணம். விரிவாக எழுத தேவையில்லை என்பது இளைஞர்களுக்கு பிடித்த சவால். அதனால் அரசுகளுக்கு எதிராக ட்விட்டரை மிக வலுவாக கையாண்டார்கள் இளைய சமூகத்தினர்.

அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய அழகான நகரம் செயின்ட் லூயிஸ். அங்கே மிகச்சாதாரண நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவர் ஜாக் டோர்சே (Jack Dorsey). ’காதல் கொண்டேன்’ படத்தில் வரும் தனுஷ் போல சரியான நோஞ்சான் ஆனால் ஜீனியஸ் வகையறா. பதினாலு வயதிலேயே ஒரு ஒப்பன்சோர்ஸ் புரோகிராம்மை எழுதியிருக்கிறார். அது இன்றும் கொரியர் கம்பெனிகள், டாக்சி கேப் நிறுவனங்களுக்கு பயன்பட்டு வருகிறது. பள்ளிப்படிப்புக்கு பிறகு மிசெளரி பல்கலைகழகத்தில் கணினி தொழில்நுட்பம் படிக்கிறார். பாதி படிக்கும்போதே நியுயார்க் செல்ல அங்குள்ள நியுயார்க் பல்கலைகழகத்தில் அந்த படிப்பை தொடர்கிறார். அதுவும் கொஞ்சநாள் தான். டிகிரி முடிக்காமலேயே கிளம்பி விடுகிறார். 

அது, ரூபி-ஆன்-ரயில் என்ற இணைய மொழி பரவலாக ஆரம்பித்தகாலம். ஜாக் அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்கிறார். அப்போது அவரது ஆசை இணையதளம் மூலமாக கொரியர், டாக்சி புக்கிங் மற்றும் பல எமர்ஜென்சி சேவைகளை கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கு மிகவும் ஏற்ற மொழியாக ரூபி இருந்தது. ஆனால் அந்த ஐடியா பெரிதாக இருந்தது. அதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்று தோன்றியது. அந்தச் சமயம் AOL நிறுவனத்தின் இன்ஸ்டன்ட் மெசெஞ்சர் ஜாக்கை கவர்ந்தது. அதை இன்னும் எளிமை படுத்தி SMSஇன் வடிவத்தையும் சேர்த்து அவர் மனதில் ஓர் ஐடியா தோன்றியது. அதைத் தன் நண்பர் பிஸ்-ஸ்டோனுடன் இணைந்து வளர்த்தெடுத்தார். இரண்டுவாரங்களில் ஒரு மாடல் தளத்தை உருவாக்கி அப்போது டெக்ஸ்ட் மெசஞ்சரில் ஆர்வம் கொண்டிருந்த ஓடியோ (Odeo) என்ற நிறுவனத்திடம் சென்று டெமோ காட்டினார்கள். ஓடியோவும் அப்போது ஒரு ஸ்டார்ட்அப் தான். ஆனால் நிதிஉதவி பெற்று வலுவான நிலையில் இருந்தது. அந்த ஸ்டார்ட்அப்பின் நிறுவனரான இவான் வில்லியம்ஸ், நோவா இருவரும் மிக ஆர்வமாகிவிட அவர்களையும் நிறுவனர்களாக இணைத்துக் கொண்டு டிவிட்டர் பிறந்தது. 

ஆரம்பத்தில் ஜாக் ரெம்பவும் விளையாட்டு பிள்ளையாக சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்க அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைமை செயல் அதிகாரி பதவி பறிக்கப்பட்டது. பிறகு 2009இல் டிவிட்டர் பெருமளவில் மக்களிடம் சேரத் தொடங்க, அதற்கு பிறகு அதன் வளர்ச்சியின் தேவை மீண்டும் ஜாக்கிடம் பதவியை கொடுத்தது. ஏனென்றால் டிவிட்டர் ஜாக்கின் அறிவுக் குழந்தை. அவரைத் தவிர அதன் அடுத்தகட்ட வளர்ச்சியை யாரும் சரியாக கணிக்கமுடியாது. 

அதன்பிறகு முதலீட்டாளர்கள் டிவிட்டரின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் காட்டினார்கள். முதலீடு பெருகியது. ஒரு மில்லியனில் ஆரம்பித்து படிப்படியாக 35 மில்லியன் டாலர்கள் வரை பல கட்ட முதலீட்டுபடிகளுக்கு பிறகு பெருக்கினார்கள்.

டிவிட்டர் பிறந்தபோது தினமும் 4 லட்சம் டிவிட்டுகள் செய்யப்பட்டன. 2011இல் இது ஒருநாளைக்கு 14 கோடி என உயர்ந்தது. இன்று ஒரு நிமிடத்திற்கு 350000 டிவிட்டுகள், ஒருநாளைக்கு சராசரியாக 50 கோடி டிவிட்டுகள் இடப்படுகின்றன. பேஸ்புக்கில் இல்லாத பிரபலங்கள் கூட உண்டு; டிவிட்டர் இல்லாத பிரபலங்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு எங்கும் டிவிட்டர்மயம். 

2013 நவம்பரில் பங்குச் சந்தையில் முதலீடு கோரி டிவிட்டரின் பங்குகள் வெளியிடப்பட்டன. 25$ க்கு வெளியிடப்பட்ட பங்கு ஒரே நாளில் 44$க்கு எகிறியது. ஆனால் அதற்கு பின் கொஞ்சம் சறுக்கியது. காரணம் தலைமை நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சியில் பெரிய திட்டம் இல்லாதிருந்தது, புதிய முயற்சிகளில் சுணக்கம் காட்டியது ஆகியவை முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தபோதும் டிவிட்டரின் அடித்தளம் மிக மிக வலிமையாக இருக்கிறது. இன்றும் இதன் வளர்ச்சியை பேஸ்புக்கை தவிர்த்து வேறு எந்த சமூக வலைதளத்தாலும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. 

ஜாக் இதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஸ்கொயர் (Square) என்ற இன்னொரு ஸ்டார்ட்அப்பையும் தொடங்கி சிறப்பாக கொண்டு சென்றுவருகிறார். இரு நிறுவனத்திற்கும் இவரே தலைமை செயல் அதிகாரி. இந்த ஸ்டார்ட்அப் மொபைல் பேமென்ட் உள்ளிட்ட பணபரிவர்த்தனை சேவைகளுக்கான மென்பொருள்களை கொடுத்து வருகிறது. யாகூவின் CEO மரிசா மேயர் முதல் கோல்ட்மேன் சாக்ஸ் வரை  பெரிய பெரிய தலைகள் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதுவும் பங்குசந்தையில் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 

இன்று ஜாக்கின் சொத்து மதிப்பு 13000 கோடிகளுக்கும் மேல். நாளை இது பன்மடங்கு பெருகும் என்று கணித்திருகிறார்கள். காரணம் ஸ்கொயர் மற்றும் டிவிட்டர் இரண்டுமே வருங்காலத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்பது தான்.

ஸ்டார்ட்அப் பாடம்

டிவிட்டர் சமூக வலைதளங்களிலேயே மிக எளிதான வடிவம். இதை உருவாக்க நிறைய நாட்கள் தேவைப்படவில்லை. ரூபி என்ற மொழி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காகவே பிறந்த புதுமையான மொழி. கற்றுக்கொள்வது மிக எளிது. ஆனால் வலிமையான கட்டமைப்புகள் கொண்டது. ஜாக் இதை விரைவில் கற்றுக்கொண்டார். இதை வைத்து விரைவில் ஒரு சிறிய சமூகவலைதளத்தை நிறுவிவிட வேண்டும் என்று விரும்பினார். அப்படி உருவாகியது தான் டிவிட்டர்.
ஸ்டார்ட்அப் ஆர்வம் இருப்பவர்கள் புதுமையான தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள எப்பொழுதும் தயாராக வேண்டும். குறைந்தபட்சம் அதன் பயன்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

எளிமையான ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் நல்ல பலனை கொடுக்கும். சமிபத்தில் சரஹா என்ற இணையதளம் மிக மிக எளிய ஐடியாவுடன் வந்து கலக்குகிறது. எந்த அடையாளத்தையும் தெரிவிக்காமல் உங்களை பற்றி யாரும் அனானி கமென்ட் கொடுக்கலாம். இதை உருவாக்க நிறைய நாட்கள் தேவையில்லை. 

ஆகவே ஐடியாக்களுக்கு இங்கு பஞ்சமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு விரைவாக புதுமையாக எளிமையாக வழங்குகிறோம் என்பதில் இருக்கிறது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி.  
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு