Published:Updated:

அலறிய HBO... ஓஹோ ஒபாமா... ஓரியோ என்ட்ரி ... ஜியோ போன்... ஆகஸ்ட் மாத டெக் அப்டேட்ஸ்!

அலறிய HBO... ஓஹோ ஒபாமா... ஓரியோ என்ட்ரி ... ஜியோ போன்... ஆகஸ்ட் மாத டெக் அப்டேட்ஸ்!
அலறிய HBO... ஓஹோ ஒபாமா... ஓரியோ என்ட்ரி ... ஜியோ போன்... ஆகஸ்ட் மாத டெக் அப்டேட்ஸ்!

டெக்னாலஜி உலகில் ஒவ்வொரு நாள் அல்ல, ஒவ்வொரு மணி நேரமுமே மிக முக்கியம். காரணம் புது கேட்ஜெட்ஸ், புது கண்டுபிடிப்புகள் என உலகின் ஏதேனும் ஒரு மூலையில், ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்துகொண்டேதான் இருக்கும். அப்படி கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய கேட்ஜெட் முதல் ஆதார் கார்டு வரை மிஸ் செய்யக்கூடாத டெக்னாலஜி அப்டேட்ஸின் தொகுப்புதான் இது. 

பிளாக்பெரி KEYone:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் மொபைலான KEYone-ஐ இந்த மாதம் வெளியிட்டது பிளாக்பெரி நிறுவனம். பெஸல்லெஸ் டிஸ்ப்ளே, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என ஆண்ட்ராய்டு முதல் ஐபோன் வரை மொபைலின் முன்பக்க ஸ்க்ரீனை மாற்றிக்கொண்டே இருக்க, பிளாக்பெரியோ பிசிக்கல் Qwerty கீ-போர்ட் கொண்ட மொபைலாக இதனை வெளியிட்டிருக்கிறது. விலை ரூ.39,990

ஹேக்கர்ஸ் கண்ணாமூச்சி:

இந்த வருடம் வெளியான கேம் ஆப் த்ரோன்ஸின் கிளைமாக்ஸை விடவும் சுவாரஸ்யமான சம்பவங்களை நடத்திக்காட்டினர் HBO நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள். எபிசோட்களை முன்னரே லீக் செய்தது, ஸ்க்ரிப்ட்டை வெளியிட்டது, HBO நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியது, ஹேக்கர்களுக்கு Bug Bounty Program எனச்சொல்லி HBO பணம் கொடுத்தது என கேம் ஆப் த்ரோன்ஸ்-ஐத் தாண்டியும் செய்திகளில் இடம்பிடித்தது HBO.

ஃப்ளிப்கார்ட்டின் புதிய பிராண்ட்:

ஆன்லைன் வணிகத்தைத் தாண்டியும் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி வருகிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஸ்மார்ட்பை என்ற பெயரில் ஏற்கெனவே சொந்தமாக ஒரு பிராண்ட்டைத் தொடங்கிய ஃப்ளிப்கார்ட், தற்போது 'Billion' என இன்னொரு பிராண்ட்டையும் அறிமுகம் செய்திருக்கிறது. மிக்ஸர் கிரைண்டர், பேக்பேக் போன்ற பொருள்களை இந்த பில்லியன் பெயரில் வெளியிடவிருக்கிறது.

5 பில்லியன் டவுன்லோட் ஆன ஆப்:

கூகுள் ப்ளே ஸ்டோரில் முதன்முதலாக ஒரு ஆப் 500 கோடி டவுன்லோட்களைக் கடந்துள்ளது. என்ன ஆப் எனக் கேட்கிறீர்களா? கூகுள் ப்ளே சர்வீஸ்தான் அது! எந்தவோர் ஆண்ட்ராய்டு டிவைஸிலும் இன்பில்ட்டாகவே இருக்கும் ஆப்தான் இந்த கூகுள் ப்ளே சர்வீஸ்.

ஆப்லைன் ஸ்டோர்களில் கவனம்:

ஆன்லைன் மார்க்கெட் தாண்டி ஆப்லைன் சந்தையிலும் கால்பதிக்க மொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. அதன் விளைவாக மோட்டோரோலா மற்றும் எம்.ஐ நிறுவனங்கள் ஆப்லைன் ஸ்டோர்களைத் திறந்திருக்கின்றன. தனது முதல் ஆப்லைன் ஸ்டோரை நொய்டாவில் திறந்திருக்கிறது மோட்டோ. இதற்கு மோட்டோ ஹப் எனப் பெயரிட்டுள்ளது. ஜியோமி ஏற்கெனவே இரு நகரங்களில் MI ஹோம் என்ற பெயரில் ஆப்லைன் ஸ்டோர்களைத் திறந்துவிட்டது. தற்போது சென்னைக்கும் வரவிருக்கிறது MI ஹோம். செப்டம்பர் 2 அன்று Forum விஜயா மாலில் கடை திறக்கப்படவிருக்கிறது. 

கூல்பேட் நோட் 5 லைட் C:

ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ், Snapdragon 210 பிராசஸர், 5 இன்ச் டிஸ்ப்ளே, 8 எம்.பி ரியர்கேமரா, 5 எம்.பி முன்புற கேமரா மற்றும் ரூ. 7,777 விலை எனப் புதிய பட்ஜெட் போனாக வெளிவந்தது கூல்பேட் நோட் 5 லைட் C. இதுதவிர கூல்பேட் ப்ளே 6 என்ற மொபைலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது கூல்பேட் இதன்விலை ரூ.14,999.

ஜியோனி A1 லைட்:

மோட்டோ G5 ப்ளஸ் மற்றும் ரெட்மி நோட் 4 போன்களுக்குப் போட்டியாக ஜியோனி A1 லைட் என்ற போனை வெளியிட்டது ஜியோனி. ஏற்கெனவே வெளிவந்த ஜியோனி A1 மற்றும் A1 ப்ளஸின் மினி வெர்ஷன்தான் இந்த மாடல். 20 எம்.பி செல்ஃபி கேமரா, 13 எம்.பி ரியர் கேமரா, 4000 mAh பேட்டரி, 3 GB ரேம், 32 GB மெமரி போன்றவை இதன் ஸ்பெஷல். இதேபோல ரூ.8,999 பட்ஜெட்டில், ஜியோனி X1 என்ற மொபைலை அறிமுகம் செய்தது ஜியோனி. 

LG Q6:

14,990 ரூபாய் பட்ஜெட்டுடன் இந்திய மார்க்கெட்டைத் தொட்டிருக்கிறது LG Q6 மொபைல். 5.5 இன்ச் டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 435 பிராசஸர், 3 GB ரேம், 32 GB இன்டர்னல் மெமரி, 13 MP ரியர் கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, 3000 mAh பேட்டரி மற்றும் நௌகட் ஓ.எஸ். உடன் வந்திருக்கிறது Q6.

கில்லர் நோட் K8:

இந்திய மொபைல் மார்க்கெட்டில் ஊருக்கண்ணு...உறவுக்கண்ணு என எல்லா கண்ணும் ரெட்மியின் மார்க்கெட் மீதுதான். கம்மி பட்ஜெட், கலக்கல் வசதிகள் என கலக்கிவரும் ரெட்மியை முறியடிக்க பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஃபார்முலாக்களைக் கொண்டு முயற்சி செய்து வருகின்றன. அந்த வரிசையில் லெனோவா நிறுவனம் களமிறக்கியிருக்கும் மெர்சல் போன்தான் இந்த K8 நோட். 12,999 ரூபாய் மற்றும் 13,999 ரூபாய் என இரண்டு வேரியன்ட்களில் ரெட்மி நோட் 4-க்கு சவால் அளித்திருக்கிறது லெனோவா.

பேனசோனிக் எலூகா A3 , A3 ப்ரோ:

ஆப்லைன் மார்க்கெட்டிற்காக இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்தது பேனாசோனிக் நிறுவனம். பேட்டரி திறன் அதிகம் வேண்டுமென்பவர்கள் இவற்றை டிக் அடிக்கலாம். 4000 mAh பேட்டரி என்பது இவற்றின் ஹைலைட். 

A3-ன் விலை: ரூ. 11,290 

A3 ப்ரோவின் விலை:  ரூ.12,790

இதேபோல 7,190 ரூபாய் விலைக்கு எலூகா I2 ஆக்டிவ் என்ற மாடலையும் அறிமுகம் செய்தது.

ஃபேஸ்புக் Watch:

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போல ஃபேஸ்புக் நிறுவனமும் டிவி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு காரணம் ஃபேஸ்புக்கின் புதிய Watch வசதிதான். தற்போது அமெரிக்காவின் சில இடங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் ஃபேஸ்புக்கிலேயே யூடியூப் போல வீடியோக்களைக் கண்டு ரசிக்கமுடியும். விரைவில் மற்ற இடங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஷேப் மெமரி பாலிமர்:

இந்தப் பெயரை இதற்கு முன்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், வருங்காலங்களில் அதிகம் வாய்ப்புண்டு. மொபைல் டிஸ்ப்ளே உடைந்தால், தானாகவே சரியாகும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அந்தத் தொழில்நுட்பத்தின் பெயர்தான் இந்த ஷேப் மெமரி பாலிமர்.

Asus ZenFone Zoom S:

போட்டோகிராபி பிரியர்களுக்கென்றே பிரத்யேகமாக அசூஸ் நிறுவனம் அறிமுகம் செய்த மொபைல் போன்தான் இந்த ஜென்போன் Zoom S. ப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.26,999.

சீன நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய அரசு:

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே திடீரென போர் பதற்றம் உருவாக, வாட்ஸ்அப்பில் இருந்து ஃபேஸ்புக் வரை கலந்துகட்டி வதந்திகள் உலாவந்தன. இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் 21 சீன மொபைல் போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனைவரும் மொபைல் போன்களில் எதுமாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இந்தியர்கள் அதிகம் சீன மொபைல்களையே பயன்படுத்துவதால் மக்களின் தகவல்களின் பாதுகாப்பு காரணமாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு அறிவித்தது.

பின்வாங்கிய ஜியோ போன்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ போனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்கள் குவிய, திக்குமுக்காடிப் போனது ஜியோ. 48 மணி நேரத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். உடனே முன்பதிவை தற்காலிகமாக நிறுத்திவைத்தது அந்நிறுவனம். இது ஒருபக்கம் இருக்க, இன்னொருபக்கம் ஏர்டெல் நிறுவனமும் 4G கோதாவில் புதிய போனுடன் இறங்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஜியோ போலவே 2500 ரூபாய்க்குள் ஒரு போனை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதற்காக மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆண்ட்ராய்டு ஓரியோ:

எல்லோரும் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு 8.0-வின் பெயர் 'ஓரியோ' என அதிகாரபூர்வமாக அறிவித்தது கூகுள். ஏற்கெனவே எதிர்பார்த்த பெயர் என்பதால் 'இதுக்குதான் இத்தனை மாசம் பில்ட்அப்பா?' எனக் கலாய்த்தனர் டெக்கீஸ். வழக்கம்போல கூகுளின் நெக்ஸஸ் மற்றும் பிக்ஸல் டிவைஸ்களுக்குதான் ஆண்ட்ராய்டு ஓரியோவின் முதல் தரிசனம்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி:

10,000 ரூபாய் பட்ஜெட்டில் புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது மைக்ரோமேக்ஸ். கேன்வாஸ் இன்ஃபினிட்டி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த போனின் விலை ரூ.9,999. 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 16 எம்.பி முன்பக்க கேமரா, 13 எம்.பி ரியர்கேமரா, 3 GB ரேம் போன்றவை இதன் ஹைலைட்ஸ்.

சாரா:

மொட்டைக் கடுதாசியை இந்த உலகம் இவ்வளவு விரும்பும் என்பதை இந்த ஆகஸ்ட் மாதம்தான் உணர்த்தியது. திடீரென ஆப்பிள், ஆண்ட்ராய்டு, ஆன்லைன் என எல்லா பக்கமும் சாரா என்ற ஆப் வைரலாக, சோஷியல் மீடியாக்களில் எங்கெங்கும் காணினும் சாரா ஸ்க்ரீன்ஷாட்களாக நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இந்த ஆப், இன்ஸ்டால் செய்தவரின் போனில் இருக்கும் தொடர்புகள் அனைத்தையும் சாராவின் சர்வருக்கு அனுப்புவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்போகும் வசதி என இதற்கு பதிலளித்துள்ளது சாரா. 

அன்பைப் பொழிந்த அந்த ஒரு ட்வீட்:

"பிற மனிதர்களின் நிறம், மதம், பின்னணி ஆகியவற்றை வைத்து, அவர்களை வெறுப்பதற்காக இங்கே பிறக்கவில்லை"- டெக்னாலஜி பக்கத்தில் தத்துவம் எதற்கு என்கிறீர்களா? மேலே பார்த்த இந்த ட்வீட்தான் ட்விட்டரில் இதுவரைக்கும் அதிக லைக்ஸ் வாங்கிய ட்வீட். சுமார் 45 லட்சம் பேர் இதனை லைக்கியிருக்கிறார்கள். இதனை ட்வீட்டியவர்? வேறு யார், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாதான் அது.

மாறிய லோகோ:

அறிமுகமாகி 12 வருடங்களில் முதல்முறையாக தனது லோகோவை மாற்றியிருக்கிறது யூடியூப் நிறுவனம். இதோடு சேர்த்து மொபைல் ஆப் டிசைன், டெஸ்க்டாப் டிசைன் என அனைத்தையும் ட்ரெண்ட்டியாக மாற்றியிருக்கிறது யூடியூப். ஏற்கெனவே இருந்த லோகோவை லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து, புதிய லோகோவை யூடியூப் அறிமுகம் செய்ய, "யாருப்பா அந்த புத்திசாலி கிரியேட்டர்?" எனக் கலாய்த்தனர் நெட்டிசன்ஸ்.

பத்தாண்டு பயணம்:

ஆகஸ்ட் 23-ம் தேதியோடு தனது பத்தாண்டு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது #Hashtag. 2007-ம் ஆண்டு கிரிஸ் மெஸ்ஸினா என்பவரின் மூளையில் ஒளிர்ந்த பல்ப்தான் தற்போது நாம் ட்விட்டரில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் '#'. இதனை #Hashtag10 என்ற டேக்கோடு கொண்டாடியது ட்விட்டர். 

ஆகஸ்ட்டில் வந்த ஆகஸ்ட்:

தன்னுடைய இரண்டாவது மகளுக்கு ஆகஸ்ட் எனப் பெயர் வைத்து ஆச்சர்யப்படுத்தினார் மார்க் சக்கர்பெர்க். இதனை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஆக பதிவு செய்த மார்க், இத்துடன் மகளுக்காக உருகி உருகி எழுதிய கடிதத்தையும் ஷேர் செய்ய, ஹார்ட்டின்ஸ் கொட்டி வாழ்த்தியது உலகம். 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பிரபலமான பெயர் என்பதாலேயே ஆகஸ்ட் என்ற பெயரை மகளுக்கு வைத்திருக்கிறாராம் மார்க்.

வாட்ஸ்அப் அப்டேட்ஸ்:

UPI மூலம் பணப்பரிமாற்றம், ஃபேஸ்புக் போலவே கலர் கலரான ஸ்டேட்டஸ் என ஆகஸ்ட் மாதம் நிறைய விஷயங்களை சோதித்தும், அறிமுகம் செய்தும் இருக்கிறது வாட்ஸ்அப். இதுதவிர ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போல சில வாட்ஸ்அப் கணக்குகளை 'Verify' செய்து ப்ளூடிக் போல க்ரீன்டிக் தரவும் முடிவு செய்திருக்கிறது. வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வசதி.

புதிய ரெட்மி 4A:

3 GB ரேம், 32 GB மெமரி என அப்டேட் ஆகி வந்திருக்கிறது ரெட்மி 4A. ஏற்கெனவே 6000 ரூபாயில் வெளிவந்து ஹிட் அடித்த இந்த மாடல் இந்தமுறை 6,999 ரூபாய்க்கு வந்திருக்கிறது. 

மூன்று வி.ஐ.பி.,க்கள்:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று போன்கள் பற்றிய அப்டேட்ஸ் பற்றி பார்ப்போம். சாம்சங் கேலக்சி நோட் 8, நோக்கியா 8, மோட்டோ G5S ப்ளஸ் ஆகியவைதான் அந்த போன்கள். 

பேட்டரி பிரச்னையால் பெரும் இழப்புகளைச் சந்தித்த சாம்சங் நிறுவனம் இந்தமுறை நம்பிக்கையுடன் களமிறக்கவிருக்கும் ஸ்மார்ட்போன்தான் இந்த கேலக்ஸி நோட் 8. 6.3 இன்ச் 1440×2960 பிக்ஸல் AMOLED திரை, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, 6 GB ரேம் மற்றும் Exynos 8895 ஆக்டாகோர் பிராசஸர், 12 + 12 மெகாபிக்ஸல் டூயல் ரியர் கேமரா, 8 மெகாபிக்ஸல் முன்புற கேமரா, 3300 mAh பேட்டரி திறன், ஆண்ட்ராய்டு நௌகட் OS என ஃபுல் பார்மில் இருக்கிறது கேலக்ஸி நோட் 8. முன்பதிவு மட்டும் தொடங்கியிருக்கிறது. 

5.5 இன்ச் திரை, ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸசர், 13+13 மெகாபிக்சல் பின்புற டூயல்கேமரா, 8 மெகாபிக்சல் முன்புற கேமரா, 3000 mAh பேட்டரி திறன், ஆண்ட்ராய்டு 7.1 நொளகட்  போன்ற வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது மோட்டோ G5S ப்ளஸ். 

"செல்ஃபி மட்டுமே பத்தாது பாஸ்... இனி போத்தி (Bothie) எடுங்க" எனச் சொல்லி வெளியாகியிருக்கிறது நோக்கியா 8. செல்ஃபியோடு சேர்த்து, போத்தியை லைவ் ஸ்ட்ரீமிங்கும் செய்யலாம் என்பது இதன் ஸ்பெஷல்.

இப்படி அடுத்தடுத்த மொபைல்களின் வரவுகள், அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள் என நீண்ட ஆகஸ்ட் மாதம், ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான டெட் லைன் நீட்டிப்போடு முடிந்திருக்கிறது. செப்டம்பர் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.