Published:Updated:

"நீங்கள் எழுதுவது உங்களுக்கே சொந்தமில்லை!" - ட்விட்டரின் திடுக் விதி #NewTwitterRules

"நீங்கள் எழுதுவது உங்களுக்கே சொந்தமில்லை!" - ட்விட்டரின் திடுக் விதி  #NewTwitterRules
"நீங்கள் எழுதுவது உங்களுக்கே சொந்தமில்லை!" - ட்விட்டரின் திடுக் விதி #NewTwitterRules

ஐடியா எப்பவரும் பாஸ்? இப்ப ஒரு ட்வீட் போட்டே ஆகணுமேனு ட்விட்டர் ஆப்பை ஓப்பன் பண்ணி உக்காந்தா, ஒண்ணுமே தோணாது. பஸ்லயோ, ஷேர் ஆட்டோலையோ மொபைலே எடுக்க முடியாதபடி ட்ராவல் பண்ணிட்டு இருக்கிறப்ப, சும்மா பாயிண்ட்ஸா, கவிதையா கொட்டும். வீட்டுக்கு வந்தோன யோசிச்சா ஒரு மேட்டரும் ஞாபகம் வராது. இப்படியே போனா நாமளும் எப்பதான் ட்விட்டர் போராளி ஆகறதுனு சோகமா இருக்கும். நீங்க இந்த கேங்ல ஒரு ஆளுனா, இதோ உங்களுக்கு ஸ்பெஷலா இன்னொரு பிரச்னையும் ரெடி!

நாசா ஏதோ ஒன்று கண்டுபிடித்து விட்டதாகச் செய்தி தருகிறது. அதைப் படித்துவிட்டு தூங்கிப்போன உங்களுக்கு, அது தொடர்பாகவே அட்டகாசமான சம்பவம் ஒன்று கனவாக வருகிறது. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சந்தோசமாக ட்விட்டரில் பதிவிடுகிறீர்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதைப் பார்த்து விட்டு, அதையே தன் புதிய படத்திற்கு ஒன்லைனாக வைத்துக் கொள்கிறார். அதுவும் உங்களைக் கேட்காமலே. படம் செம ஹிட்! இப்போது நீங்கள் ஜேம்ஸ் கேமரூன் மீது வழக்குப் பதிவு செய்து ராயல்டி கேட்க முடியுமா? முடியாது என்கிறது ட்விட்டரின் புதிய நிபந்தனை.

புகழ்பெற்ற சமூக இணையதளமாக விளங்கும் ட்விட்டர், தனது சேவை விதிமுறைகளில் (Terms of Service) சில மாற்றங்கள் செய்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் வரும் அக்டோபர் முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி, நாம் போடும் ட்வீட்களை ட்விட்டர் யாருக்கு வேண்டுமானாலும் விற்கவோ, வேறு எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தவோ முழு உரிமை உண்டு. அது மட்டுமில்லாமல், சிறிய, பெரிய நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை நாம் போடும் ட்வீட்கள் அனைத்தையும் உள்ளடக்கம் செய்யவோ, ஒளிபரப்பு, விநியோகம் மற்றும் வெளியிடவோ முழு உரிமை உண்டு. இதில் யாரும் யாருக்கும் எந்த ராயல்டியும் கட்ட வேண்டியதில்லை. பிரசுரம் செய்து விற்பனை செய்யும் உரிமைக்காகக் கொடுக்கும் பங்கு என்பதை ட்விட்டரை பொறுத்தவரைச் சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், ட்விட்டர் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ட்வீட்களில் உள்ள விஷயங்களை ட்விட்டர் தளத்திற்கு சேவை வரியைப் போல தாரை வார்க்கிறார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், இது நமக்குத் தெரியாமல் முன்னர் நடந்து கொண்டிருந்த விஷயம்தான். இப்போது அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள், அவ்வளவே என்கின்றனர் ஒரு சாரர். அக்டோபரில் இப்படி மாறப்போகிறது என்று செப்டம்பரிலேயே சொல்லி விட்டார்கள் என்றாலும், இந்த முடிவு நிச்சயம் பலருக்கு அதிருப்திதான்.

முன்னரே பெரிய செய்தி இணையதளங்கள் எல்லாம் கமல் இதை ட்வீட் செய்தார், ஒரு பெண்மணி இப்படி ட்வீட் செய்தார் என்று எதோ ஒரு வகையில் ஒரு தனி மனிதனின் ட்வீட்களைப் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்படிப் பயன்படுத்தும் போது, அது யாருடையது என்று நிச்சயம் பெயர் இருக்கும். அந்த ட்வீட்கள் எப்படிப் போடப்பட்டனவோ அப்படியே வெளிவரும். இனி அந்த நிலை மாறலாம். உங்கள் ட்வீட்களை உங்களுக்கு கிரேடிட்ஸ் கொடுக்காமல் கூட பயன்படுத்தலாம். அதிலிருந்து கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மேலும் விரிவுபடுத்தி, தங்கள் சொந்தக் கருத்தாகக் கூட பலர் விளம்பரப் படுத்தலாம்.

“நம்ம போட்ட ட்வீட் எல்லாம் ஒருத்தன் யூஸ் பண்ணப் போறானா என்ன? அப்படியே பண்ணாலும் பண்ணிட்டு போறான். நமக்கு இது ஒரு வகையில பெருமை தானே” என்று இதை ஒரு சாதாரணமான விஷயமாகக் கடந்து செல்கிறார்கள் பலர். படைப்பாளிகள் மட்டும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு