Published:Updated:

20 நொடிகளில் 'மோடி' யின் மொபைலையும் இந்த 'மோடி'யால் ஹேக் செய்ய முடியும்!

20 நொடிகளில் 'மோடி' யின் மொபைலையும் இந்த 'மோடி'யால் ஹேக் செய்ய முடியும்!
20 நொடிகளில் 'மோடி' யின் மொபைலையும் இந்த 'மோடி'யால் ஹேக் செய்ய முடியும்!

"ஸீ...ஒரு விஷயம்... பயப்படாதீங்க ஓகே. பயமுறுத்துறதுக்காக இதை நான் செய்யலை.  நீங்க எல்லோரும் ஒண்ண புரிஞ்சுக்கணும் . மொபைல்களால இணைக்கப்பட்டிருக்கும் கனெக்ட்டிவிட்டி உலகத்துல ரெண்டே ரெண்டு வகையிலான மனுஷங்கத்தான் இருக்காங்க. ஒண்ணு தாங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கோம்ன்னு தெரிஞ்சவங்க, ரெண்டாவது அது தெரியாதவங்க..." இதை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உட்கார்ந்திருக்கிறார்.

"ப்ரோ உங்க மொபைல கொடுக்க முடியுமா..." என்று அந்தக் கூட்டத்திலிருக்கும் ஒருவரிடம் மொபைலை வாங்குகிறார். 

கவுண்ட் டவுன் டைமர் ஓடத் தொடங்குகிறது. 20...19...18...17... அது 01யை நெருங்குவதற்குள் மொபைலை அவரிடம் கொடுத்துவிடுகிறார்.

" ப்ரோ... உங்க மொபைல்ல ஏதாவது மாற்றங்கள் தெரிதா... ஐ மீன் ஏதாவது ஹேக் செய்ததற்கான அறிகுறிகள் ? கருப்பு ஸ்க்ரீன், பச்சை எழுத்துக்கள், பீப் சவுண்ட்... இப்படி ஏதாவது ? " 

"இல்லை மிஸ்டர். சாகேத் மோடி "

"சூப்பர்... இப்போ இந்த அதிசயத்தப் பாருங்க. " என்று சொன்னபடி தன் "ஆப்பிள் மேக்"கில் சில நொடிகள் ஏதோ வேலைகளைச் செய்கிறார். 

அடுத்து சில நொடிகளில், அந்த மொபைலில் இருக்கும் மொத்த தரவுகளும் புரொஜெக்டர் ஸ்கிரீனில் ஓடத்தொடங்குகிறது. அவரின் கான்டாக்ட்ஸ் (Contacts), எஸ்.எம். எஸ் (SMS) - அதில் நிறைய OTPக்களும் இருக்கின்றன, அவருடைய ஜி.பி.எஸ் லொகேஷன், ஜி.பி.எஸ் ஹிஸ்டரி, ப்ரெளசர் ஹிஸ்டரி என அனைத்தும்... எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த மொபைலின் ஆடியோ ரெக்கார்டரை ஆக்டிவேட் செய்து அந்த மொபைலிருக்கும் இடத்தில் நடக்கும் உரையாடல்களை ஆடியோ பதிவாகவும் கேட்க வைத்தார். 

இது அங்கிருந்த யாரோ ஒருவரின் மொபைலில் மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் மொபைலிலும், ஏன் பிரதமர் நரேந்திர மோடியின் மொபைலிலும் கூட அவரால் இதைச் செய்ய முடியும். அது ஆன்ட்ராய்டாக இருந்தாலும், ஆப்பிள் ஐஓஎஸ் (IOS) ஆக இருந்தாலும் சரி, இவரால் எதிலும் புகுந்து தரவுகளைத் திருட முடியும்... டெக் நாகரிகத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஹேக் செய்ய முடியும்.

சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோ, பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களிடமிருக்கும் மொபைலை ஒருவித பயத்தோடு பார்க்க வைக்கிறது. 

இதை இப்படிச் செய்தவர் யார் என்பதை முதலில் பார்க்கலாம்.

பெயர் : சாகேத் மோடி.

ஊர் : கொல்கத்தா.

பணி : சிஈஓ - லுசிடியஸ் (CEO - Lucideus) - சைபர் செக்யூரிட்டி மற்றும் எத்திகல் ஹேக்கிங் செய்யும் நிறுவனம். 

சாகேத் மோடி

இதை இவர் எப்படிச் செய்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ரொம்ப சிம்பிள். மொபைலை வாங்கினார். ஒரு "ஆப்"பை (APP) டவுன்லோட் செய்தார். மொபைலை திரும்பக் கொடுத்துவிட்டார்.  தன் லேப்டாப்பில் அந்த ஆப்பின் மூலம், அந்த மொபைலை ஆக்ஸஸ் செய்யத் தொடங்கினார். 

சாகேத் இதைச் செய்ததற்கான காரணம் தன்னையோ அல்லது தன் நிறுவனத்தையோ விளம்பரப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே இன்றைய டிஜிட்டல் மைய உலகின் பேராபத்துக்களை மக்களுக்கு உணர்த்தும் நோக்கமாக இருந்திருக்கலாம்... ஆனால், அந்த இடத்தில் " டிஜிட்டல் இந்தியா " கனவைப் பேசிக் கொண்டிருக்கும் ஓர் அரசில் இருக்கும் அமைச்சரின் முன்னிலையில் அதைச் செய்துக் காட்டியது ... அந்த அரசு மேற்கொண்டுவரும் பல முன்னெடுப்புகளின் மீது பெரும் அவநம்பிக்கையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாகேத்தின் இந்த நடவடிக்கையைப் பார்த்து அமைச்சர் கோபமடைவதைக் கண்ட சாகேத், சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக , " நான் சொல்வது இந்திய அரசின் பீம் (BHIM) போன்ற ஆப்களுக்கெல்லாம் கிடையாது. அதெல்லாம் ஹேக் செய்ய முடியாத அளவிற்குப் பாதுகாப்பாகத் தானிருக்கின்றன." என்று சொன்னார்.

ஹேக்கிங்கிலிருந்து தப்ப முடியுமா ? 

மிக மிக மிக மிக கடினம் என்பது தான் பதில். ஹேக் பண்ண முடியாததற்கு சில "அன் ஹேக்" ஆப்கள் இருக்கின்றன. ஆனால், இதையும் திரும்ப ஹேக் செய்திட முடியும் நிலையிலேயே இருக்கின்றன. தேவையற்ற ஆப்களை டவுன்லோட் செய்வது, திடீரென முளைக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்யாமல் இருப்பது, முக்கியமான தகவல்களை நம்பகத்தன்மையற்ற ஆப்களில் பதிவேற்றுவது என ஹேக்கிங்கிலிருந்து தப்ப பல வழிகளைச் சொன்னாலும், இது முழுமையான தீர்வுகளைத் தருவதில்லை.

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏற்றப்படும் ஆப்களின் பிரைவஸி பாலிசிகளில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவது, பதிவேற்றப்படும் ஆப்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது என இன்னும் சில விஷயங்களையும் முன்னெடுக்கலாம். ஆனால், போடப்படும் ஒவ்வொரு பூட்டுக்கும் கள்ளச் சாவிகள் கொட்டிக் கிடக்கின்றன. 

புளியமரத்தடியில் உட்கார்ந்து கொட்டாப் பாக்கும், வெத்தலையும் மெல்லும் பாட்டிக் கூட சுண்ணாம்பு வாங்க கார்டு தேய்க்க வேண்டும் என அறிவுறுத்தும் "டிஜிட்டல் இந்தியா"வில் 20 நொடிகளில் ஒரு மொபைலிலிருந்து ஒருவரின் அந்தரங்க அடையாளங்களைக் கூட களவாடிட முடியும் என்பதை, அமைச்சரின் முன்னிலையிலேயே ஒருவர் நிரூபித்திருக்கிறார். இதற்கு மேல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளை கூகுளில் தேடிப் பயனில்லை. 

ஒன்று கேள்விக் கேட்கத் தயாராக வேண்டும். அல்லது எந்நேரமும் நம்மை யாரோ கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார்கள், நாம் தும்முவதையும், முத்தமிடுவதையும், YUP என நாம் அழுத்தும் மெஸேஜைக் கூட யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். 

சரி... உங்க மொபைலை ஒரு 20 நொடிகள் மட்டும் கொடுங்கள் ! 

அடுத்த கட்டுரைக்கு