Published:Updated:

அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!

அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!
அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!

அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்!

பைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஹே! ரஹ்மான் புது சாங் வந்துருச்சே! எடுத்துட்டியா? எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா?”

“ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்!”

குறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

சேகரித்து வைத்த பாடல்கள்

இரண்டு வருடங்களுக்கு முன், ஸ்மார்ட்போன்களில் பாடல்களை மற்றவர்களிடம் கடன் வாங்கிச் சேமித்து வைத்துக் கேட்போம். தரவிறக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஆடியோ ஃபைல்கள் .MP3 (MPEG-1 or MPEG-2 Audio Layer III) வகையைச் சேர்ந்தவை. நல்ல தரமான ஒலியை, குறைவான ஃபைல் அளவில் அளிப்பதால், பல சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் வலைத்தளங்கள் இந்த ஃபார்மட்டை பயன்படுத்தத் தொடங்கின. ஐந்து நிமிட பாடல் ஐந்து MB என அளவை முடிந்த அளவு சுருக்கினாலும், 128kbps தரத்தில் அளிக்க முடிந்தது. ப்ராட்பேண்ட் வைத்திருந்தவர்கள் 320kbps தரம் வரை தயங்காமல் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறம் என்றால், பல படங்கள் தங்கள் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே அது பல இணையதளங்களில் MP3 வடிவில் வெளியாகி தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் தலைவலியை கொடுத்தது.

ஆடியோ சீடிக்களின் வீழ்ச்சியும், ஆன்லைன் தளங்களின் எழுச்சியும்

ஆடியோ சீடி விற்பனை இதனால் குறைய, iTunes போன்ற வழிகளில் மக்களுக்கு தங்கள் பட ஆடியோக்களை விற்க முன்வந்தனர் தயாரிப்பாளர்கள். இதற்கு, முன்னணி ஆடியோ நிறுவனங்கள் மிகவும் உதவின. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இதில் கோலோச்சின. இருந்தும் பைரஸியை ஒழிக்க முடியவில்லை. iTunesஇல் வந்த அரை மணி நேரத்தில் டோர்ரென்ட் (Torrent) தளங்களில் வெளிவந்தன. இதைச் சரிக்கட்ட, YouTube தளத்தில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில், அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டனர். இது பாடல்களையும், படங்களையும் நிறையப் பேருக்கு கொண்டு சேர்த்தது, ஆனால், அதிலும் தடங்கலாக, YouTube வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக மாற்றி மீண்டும் பைரஸியை கொண்டாடும் தளங்களில் அதைப் பதிவேற்றினர்.

ஸ்ட்ரீமிங் செய்யலாம் வாங்க…

எப்படித்தான் இந்த பைரஸியை ஒழிப்பது என்று விடாமல் யோசித்த ஆடியோ நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பவைதான் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ். Apple Music, Saavn, Jio Music, Wynk Music, Hungama, Gaana போன்ற ஆப்ஸ் சுலபமான வழிமுறைகளாலும், தன் துல்லிய ஒலியாலும் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டன. ஸ்ட்ரீமிங்னா, பஃபர் (Buffer) ஆகாமல் ஓடுமா? நம்முடைய இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு, தன் ஆடியோவின் தரத்தையும் ஏற்றி, இறக்கித் தங்கு தடையின்றி பாடல்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன இவ்வகை ஆப்கள்.

ஸ்ட்ரீமிங் புரட்சி எப்படி வந்தது?

சொல்லப்போனால், ஓவர்நைட்டில் நிகழ்ந்த மாற்றம்தான் இந்த ஸ்ட்ரீமிங் கலாசாரம். முதலில் எல்லாம், வெறும் 1GB இன்டர்நெட் டேட்டாவை வைத்து ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அப்போதெல்லாம், தெரியாத்தனமாக மொபைல் டேட்டாவில் ஒரு YouTube விடியோவை ஓபன் செய்து விட்டாலே போதும், பதறி விடுவோம். ஆனால், இப்போது மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப் உட்படப் பல சாதனங்களுக்கு இன்டர்நெட்டை அள்ளிக் கொடுக்கிறோம். புதிதாக வந்த ஜியோ நெட்வொர்க் எண்ணற்ற டேட்டா ஆஃபர்களை 4G தரத்தில் அளிக்க, பலர் சும்மாதானே கிடைக்கிறது என்று ஜியோ பக்கம் சாயத் தொடங்கினர். உஷாரான மற்ற முன்னணி நெட்வொர்க்குகளும் போட்டிக்கு, 4G டேட்டாவை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கின. இப்போது ஒரு நாளைக்கே 1GB கிடைக்கிறது என்றவுடன், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரீமிங் ஆப்களை பற்றிக் கேள்விப்பட்டு, டேட்டா பற்றாக்குறைக்காக அந்தப் பக்கம் போகாதவர்கள் கூட, மெல்ல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து மகிழ்ந்தனர்.

Saavn போன்ற ஆப்கள், ஒரு படி மேலே போய், பிரீமியம் அக்கௌன்ட் வாங்கினால், ஆப்லைனில் பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு, இன்டர்நெட் இல்லாதபோது கூட இசையைக் கேட்டு ரசிக்கலாம் என்றவுடன் தயங்கிக் கொண்டிருந்த மீதி கூட்டமும் ஸ்ட்ரீமிங் ஆப்களை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, பெரிய ஆடியோ நிறுவனங்கள் முதல் சிறிய ஆடியோ நிறுவனங்கள் வரை, பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை முதன்முதலாக  ஸ்ட்ரீமிங் ஆப்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது ஆப்களுக்கும், படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் சிறந்த விளம்பரமாக அமைந்து விட்டன. அது மட்டுமில்லாமல், முதலில் பாடல்களை சட்டவிரோதமாகத் தரவிறக்க தயங்கிய பலரும், தற்போது ஸ்ட்ரீமிங் என்றால் சரி என்று இங்கே வந்து விட்டனர். ஸ்ட்ரீமிங் என்ற இந்த வாகனம், டேட்டாவின் விலை குறைந்ததால், YouTube மீதம் வைத்த ஆடியோ பைரஸியின் அளவை மேலும் குறைக்க தொடங்கியுள்ளது. இந்த வகை ஆப்கள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்பட ஏற்பட, ஆடியோ பைரஸி என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.

அடுத்த கட்டுரைக்கு