Published:Updated:

"என் வழி தனி வழி..!" - மெர்சல் காட்டும் மெடிக்கல் ட்ரோன்ஸ்

"என் வழி தனி வழி..!" - மெர்சல் காட்டும் மெடிக்கல் ட்ரோன்ஸ்
"என் வழி தனி வழி..!" - மெர்சல் காட்டும் மெடிக்கல் ட்ரோன்ஸ்

"என் வழி தனி வழி..!" - மெர்சல் காட்டும் மெடிக்கல் ட்ரோன்ஸ்

பெருநகர நெரிசலில் ஒய்யாரமாக உட்கார்ந்து போக டாக்ஸியை தேர்ந்தெடுங்கள், அவசரமாகப் போக ஆட்டோவை தேர்ந்தெடுங்கள், அதை விட வேகமாகப் போக வேண்டும் என்றால் நடந்தே போய்விடுங்கள் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். சாதாரண பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குக் கூட நேரம் தவறாமல் போக விரும்புபவர்கள், ஐந்து கி.மீ. தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் முன்பே கிளம்பி விடுவார்கள். மக்கள் தொகை அதிகமான இடங்களில் அவசரக்கால தேவைகள் என்று ஏதாவது வந்தால், அதைச் செய்து முடிப்பதற்குள் ஒரு உலக யுத்தம் செய்த களைப்பு வந்து விடும். மக்கள் பயணப்படுவதே இவ்வளவு கடினம் என்னும் போது அத்தியாவசிய பொருட்களை அனுப்புவது எப்படி? நகரத்திற்குள் இடம்பெயர்ந்து கொள்ள அந்தப் பொருள்களும், மக்கள் செல்லும் சாலைகளையே பயன்படுத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு முன்னேறியதாய் புகழப்படும் டெக்னாலஜி எதாவது தீர்வு கொண்டு வந்தால் தான் என்ன என்று புலம்புவர்கள் உண்டு. அவர்களுக்குத் தெரியாது, இதற்கு எல்லாம் தீர்வு எப்போதோ ட்ரோன்கள் வடிவில் வந்துவிட்டது என்று!

எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

மருத்துவத்துறை இந்த ட்ரோன்களை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம்? பாதுகாப்பு மற்றும் சேவை மேம்படுத்துதல் போன்ற விஷயங்களைத் தாண்டி அவசரக் காலத்தின் போது முதலுதவி மருந்துகள், இரத்தம், பரிசோதனைகளுக்கான இரத்த மாதிரிகள் மற்றும் இதர பரிசோதனை மாதிரிகள் போன்றவற்றை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு, பரிசோதனை கூடங்களுக்கு என ட்ரோன்களை பிரத்தியேகமாக இயக்க முடியும். அவசரக் காலங்கள் தவிர்த்து ட்ரோன்களை கொண்டு வீட்டு நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து மருந்துகள், மருத்துவ சோதனையின் முடிவுகள் போன்றவற்றை அனுப்ப முடியும். இதன் மூலம், நேரத்தையும், தேவையில்லாத அலைச்சலையும் நோயாளிகள் தவிர்க்கலாம்.

கூடுதல் சிறப்பாக, அரிய வகை இரத்தங்கள் கிடைக்கவில்லை என்றால் ட்ரோன்களின் உதவியைத் தயங்காமல் நாடலாம். அந்த அரிய இரத்த வகை கொண்ட மனிதர் தொலைவில் இருக்கிறார் என்றால், ட்ரோன்களை அனுப்பி இரத்தத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கார் எடுத்துக் கொண்டு அவரைச் சந்தித்து இரத்தம் பெறுவதை விட இதற்குக் குறைவான நேரமே ஆகும். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு பொட்டலங்கள் போன்றவற்றைக் கொண்டு செல்ல ட்ரோன்களின் மேஜிக் நிச்சயம் தேவைப்படும்.

ஸ்விட்சர்லாந்தின் முன்மாதிரி முயற்சி

கலிஃபோர்னியாயவை சேர்ந்த பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான மேட்டர்னெட் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு முன்மாதிரி முயற்சியை விரைவில் செயல்படுத்தவுள்ளது. அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், சிறிய கிளினிக்குகள் போன்றவற்றை ட்ரோன்கள் கொண்டு இணைக்க இருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு இடத்திலும், ட்ரோன் நிலையங்கள் நிறுவப்படும். ஒரு இடத்தில் ஏற்றப்படும் பொருட்கள், வேண்டிய இடத்தை விரைவில் சென்றடையும். அதை விளக்கும் காணொளியை கீழே பாருங்கள்.

QR கோட் கொண்டு செயல்படும் இது பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுப்புநரும், பெறுநரும், சரியான QR கோட்கள் கொண்டு ஸ்கேன் செய்தால் மட்டுமே, பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும். இந்த முன்மாதிரி முயற்சிக்கு உலகிலேயே ஸ்விட்சர்லாந்து நாடு தான் முதன் முதலில் அனுமதி வழங்கியுள்ளது. மேட்டர்னெட் செயல்படுத்தப்போகும் இந்த ட்ரோன் போக்குவரத்து அங்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஸ்விஸ் போஸ்ட் என்ற அதன் தேசிய தபால் சேவை நிறுவனம் உதவி செய்யவுள்ளது. 70 கி.மீ. வேகத்தில் பறக்க கூடிய இந்த ட்ரோன்களை  20 கி.மீ. தூரம் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை ட்ரோன்கள் அதற்கான நிலையங்களில் தரையிறங்கும் போதும், அதுவே அடுத்த பயணத்திற்காக தன்னை தானே சார்ஜ் செய்து கொள்ளும். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால், ட்ரோன்களின் பயன்பாடு மேலும் விரிவடையும். மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் உள்ள பல பிரச்னைகளை இதைக் கொண்டு சீர்ப்படுத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு