Published:Updated:

சர்ச் இன்ஜின் முதல் ஆல்ஃபபெட் வரை... அழிக்க முடியாத பிரவுசிங் ஹிஸ்டரி! #HBDGoogle

சர்ச் இன்ஜின் முதல் ஆல்ஃபபெட் வரை... அழிக்க முடியாத பிரவுசிங் ஹிஸ்டரி! #HBDGoogle
சர்ச் இன்ஜின் முதல் ஆல்ஃபபெட் வரை... அழிக்க முடியாத பிரவுசிங் ஹிஸ்டரி! #HBDGoogle

சர்ச் இன்ஜின் முதல் ஆல்ஃபபெட் வரை... அழிக்க முடியாத பிரவுசிங் ஹிஸ்டரி! #HBDGoogle

"அன்பே நீயில்லாத நாட்களை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை" - இந்த வரிகள்  ஏதோ ஒரு ஒரு காதல் கடிதம் போல தோன்றுகிறதா?

இருக்கலாம். ஆனால் தினமும் நம் காதலன் / காதலியை விடவும் அதிகம் தேடுவது இவரைத்தான். மொபைலோ, டெஸ்க்டாப்போ... இவர் முகத்தில் விழிக்காமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. வேறு யார், நம்ம கூகுள்தான் அந்த நபர். மேலே பார்த்த வரிகளின் அர்த்தம் இப்போது புரிகிறதா? டிஜிட்டல் யுகத்தில் சர்வவல்லமை பொருந்திய கூகுளுக்கு இன்றுதான் பிறந்தநாள். பண்டிகைகள், பிறந்தநாள், நிகழ்ச்சி என எல்லாவற்றிற்கும் டூடுல் விடும் கூகுள், தன் பிறந்தநாளுக்கு மட்டும் சும்மா இருக்குமா? 19-வது பிறந்தநாளை ஒட்டி ஸ்பெஷல் டூடுல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

எந்த சந்தேகம் என்றாலும் உடனே கூகுளில்தான் டைப்புவோம். உடனே ஆயிரக்கணக்கான தகவல்களை நம்மிடம் கொண்டுவந்து கொட்டும். ஆனால் தன்னுடைய பிறந்தநாள் எது என்பதில் கூகுளுக்கே குழப்பம். காரணம், google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்ட நாள் செப்டம்பர்  15, 1997 , கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட வருடம் செப்டம்பர் 4, 1998-ம் ஆண்டு. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது?. இந்தக் குழப்பத்தின் காரணமாகவே 2003-ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி, 2004-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 26 என வெவ்வேறு நாட்களில் பிறந்தநாள் கொண்டாடியது கூகுள். அதன்பிறகு ஒரு முடிவெடுத்து 2006-ல் இருந்து செப்டம்பர் 27-ம் தேதியை தன் பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது. 

இந்த 18 வருடங்களில் நாம் இணையத்தை பயன்படுத்தும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது கூகுள். ஏதாவது ஒன்றை பற்றி தெரிய வேண்டுமென்றால் பக்கம் பக்கமாய் காகிதங்களை புரட்டி தேடிய காலம் இப்பொழுது இல்லை. ஓரிரு கீ-வேர்டுகளை டைப் செய்தால் போதும். A to Z தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த எளிமையும், வேகமும்தான் கூகுளின் வெற்றி. உடனே மக்கள் கூகுளுக்கு லைக்ஸ் குவிக்க, மற்ற சர்ச் இன்ஜின்களை விடவும் வேகமாக வளர்ந்தது கூகுள். கூகுளைத் தவிர்த்து வேறு சர்ச் இன்ஜின்களின் பெயரைக் கூட நாம் யோசித்திருக்கவே மாட்டோம். காரணம், அதற்கான தேவையே இல்லை என்பதுதான். 

கூகுள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது பல மாற்றங்களை கண்டிருக்கிறது. அதே போல பல மாற்றங்களை இணைய உலகிலும் நிகழ்த்தியிருக்கிறது. வெறும் தேடுபொறியாக மட்டும் களத்தில் இறங்கிய கூகுள் இன்றைக்கு அதையும் தாண்டி பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கிறது. கூகுளின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணம் எதிர்காலத்தில் வெற்றிபெறக்கூடிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அதை செயல்படுத்துவதுதான். 2005-ம் ஆண்டு வெறும் 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் இன்றைக்கு ஸ்மார்ட்போன் சந்தையையே ஆக்கிரமித்துவிட்டது. இன்றைக்கு உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடம் ஆண்ட்ராய்டுக்குதான். சந்தையில் எது வெற்றி பெறுமோ அதை வாங்குவதற்கும் தயக்கமே காட்டுவதில்லை கூகுள். யூ-டியூபில் இருந்து பிக்ஸல் போன் தயாரிக்க HTC நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை வாங்குவது வரைக்கும் இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். கடந்த சில மதங்களுக்கு முன்னால் கூட ஹல்லி லேப்ஸ் எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் துறை தொடர்பான புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்கி கொண்டது.

பெரும்பாலான சேவைகளை இலவசமாகவே அளிக்கும் கூகுள் வருமானம் ஈட்டுவது நம்மை பற்றிய "பிக் டேட்டா" க்களை வைத்துதான். மின்னஞ்சல், மேப்ஸ், யூ-டியூப் என நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான சேவைகள் கூகுளுக்கு சொந்தமானவைதான். இப்படி ஒவ்வொரு யூசரையும் எல்லா ஏரியாவிலும் சென்றடைவதால், விளம்பரங்களுக்கு தேவையான டேட்டாக்களுக்கு பஞ்சமே இல்லாமல் பணம் பார்க்கிறது. இந்த டேட்டா கூகுளின் பெரும்பலம். இப்படி கூகுளாக மட்டுமே இருந்த நிறுவனத்தை, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து "ஆல்ஃபபெட்" என்னும் தனி நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் இயங்கிவருகிறது. 

அதன் கீழ் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. மோட்டோரோலா நிறுவனத்தை லேனோவோவிடம்  விற்ற பிறகு பிக்சல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது கூகுள். இது தவிர எதிர்கால தொழில்நுட்பங்களான வெறும் மென்பொருள் மட்டும் என இல்லாமல், மொபைல், ஸ்மார்ட் டிவைஸ்கள் என ஹார்டுவேர் கோதாவிலும் குதித்துவிட்டது. எதிர்காலத்தை ஆளப்போகும் AI, ஆக்மெண்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, தானியங்கி கார்கள், IoT என அனைத்து துறைகளிலும் கூகுளின் தயாரிப்புகள் 'உள்ளேன் ஐயா' சொல்லிக்கொண்டிருக்கின்றன. 

தொழில்நுட்ப புரட்சியில் அழிக்கவே முடியாத ஒரு 'History' கூகுளின் சாதனைப் பயணம். எதிர்காலத்தில், ஒரு நிறுவனமாக கூகுள் எப்படி இருக்கப் போகிறது என்பதிலும் சரி, ஒரு பயனாளருக்கு கூகுள் எப்படி இருக்கப்போகிறது என்பதிலும் சரி; இரண்டிலுமே நிறைய ஆச்சர்யங்களுடன் காத்திருக்கிறது. 
 

அடுத்த கட்டுரைக்கு