Published:Updated:

கைவிரல், முகம் தேவையில்லை... இனி இதயத்துடிப்பை வைத்தே கேட்ஜெட்களை லாக் செய்யலாம்!

நம்முடைய மொபைலையோ கணினியையோ மற்ற கேட்ஜெட்டையோ நமக்குத் தெரியாமல் யாரோ  உபயோக்கிறார்கள் என்று தெரிந்தால் இயல்பாக துடிக்கும் இதயம் இரண்டு மடங்கு வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். உலகில் நடைபெறும் திருட்டுகளில் மிகவும் ஆபத்தானது தகவல் திருட்டுதான். நம்முடைய இரகசியங்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம்தான் மரண பயத்தை விட கொடுமையானது என்று கூட சொல்லலாம். நாமும் செக்யூரிட்டி பின், கடவுச் சொல், கைரேகை என்று பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விட்டோம். ஆனால் இன்னமும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியவில்லை.
இதற்குத் தீர்வாக இதுவரை இரகசியங்களை பூட்டி வைத்து வந்த இதயங்களே இனிமேல் இந்தத் தகவல்களையும் பாதுகாக்கப் போகின்றன.

ஆனால் சமீபத்திய பஃபோலா (buffalo) பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லூனர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அவ்வாறுதான் கூறுகின்றன. டாப்ளர் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ரேடார்களே இதயத்தையும், இதயத்திலிருந்து வரும் சமிக்ஞைகளையும் கண்காணிக்கின்றன. ஒவ்வொருவரின் இதயத்தையும் ஆய்வு செய்து அதன் அளவு, வடிவம், துடிக்கும் விதம் முதலியவற்றை முதன்முதலாக பதிவு செய்ய 8 நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த ரேடார்கள், அதன் பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் தானாகவே அந்த இதயத்தைக் கண்காணிக்கத் தொடங்கிவிடுகின்றன.

உலகில் ஒருவரை போன்றே ஏழு நபர்கள் இருப்பது உண்மையானாலும், ஒவ்வொரு இதயத்தின் செயல்பாடும் அதன் சமிக்ஞைகளும் தனித்துவமானது. இப்படி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் இந்த இதய சமிக்ஞைகளே இந்த ஆராய்ச்சிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து கூறும் கணினி அறிவியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் Wenyao Xu “இந்தத் தொழில்நுட்பம் எவ்வித உடல்நல பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது. இதிலிருந்து வரும் கதிர்வீச்சின் வேகம் நாம் பயன்படுத்தும் WIFI வேகத்தை விட மிக மிக குறைவு. 5 மில்லி கிராம்கள் மட்டும் தான். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சில் 1 சதவீதத்தை கூட இவை வெளியிடுவதில்லை” என்கிறார்.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் இதை உபயோகிக்கும் போது நீங்கள் மின்னணு உபகரணத்தின் அருகில் நின்றாலே போதுமானது. அதைத் தொட வேண்டிய அவசியம் கூட இல்லை. அருகில் நிற்கும் போதே உங்களின்  இதய சமிக்ஞைகளை அடையாளம் கண்டு கொள்ளும். 

அதுவே உங்களுக்கு பதிலாக வேறு யாரும் உங்களின் உபகரணத்தை திறக்க நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதனால் நீங்கள் பக்கத்தில் இல்லையென்றாலும் உங்களின் இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

NEW ATLAS மேற்கொண்ட முதற்கட்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்தத் தொழில்நுட்பம் 98.61% துல்லியமாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது 30மீட்டர் தூரம் வரை அதாவது 98 அடி வரை செயல்படகூடியதாக இருப்பதால் விமான நிலையங்களின் தடுப்பரண் போன்ற பாதுகாப்பு செயல்களிலும் இதைப் பயன்படுத்த முடியுமாம்.

“தனிநபர் உரிமைப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறி ஆகிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறலாம். ஏனெனில் தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் அவசியமானது ஒன்றல்லவா” என்கிறார் Xu

இந்த ஆராய்ச்சி குறித்த அறிக்கை வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உட்டாவில் நடைப்பெறவிருக்கும் தேசிய மாநாட்டில் வழங்கப்படவுள்ளது.  அதைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பம் போன்களிலும், கணினிகளிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

இனி இதயத்திலும் மொபைலுக்கு இடமுண்டு.

பின் செல்ல