Published:Updated:

“நாளை இந்த இடத்தில் செயின் பறிப்பு நடக்கலாம்..!” - குற்ற முன்னறிவிப்பு செய்யும் பிக் டேட்டா #CrimePrediction

“நாளை இந்த இடத்தில் செயின் பறிப்பு நடக்கலாம்..!” - குற்ற முன்னறிவிப்பு செய்யும் பிக் டேட்டா #CrimePrediction
“நாளை இந்த இடத்தில் செயின் பறிப்பு நடக்கலாம்..!” - குற்ற முன்னறிவிப்பு செய்யும் பிக் டேட்டா #CrimePrediction

பிக் டேட்டா எந்தளவுக்கு நமக்குப் பயன்படும் என்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் நந்தன் நீல்கேனி பேசிய ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடுகிறேன். 

“இந்தியா முதலில் டேட்டா குறைவான ஒரு நாடாக இருந்தது; ஆனால் இனி டேட்டா நிறைவான ஒரு நாடாக மாறும். ஜி.எஸ்.டி. நெட்வொர்க் மூலம் இந்தியாவில் முதல்முறையாக 8 மில்லியன் பிசினஸ்கள், ஒரே அமைப்பின் கீழே இயங்கப்போகின்றன. அனைத்து வரிகளையும் ஒரே அமைப்பின் கீழே செலுத்தப் போகிறார்கள். இதனால் மறைமுக வரி செலுத்துபவர்களின் விவரங்கள் அனைத்துமே முறையாகப் பதிவு செய்யப்படும். எந்தப் பொருள் வாங்குகிறார்கள், எந்த சேவைக்கு வரி செலுத்துகிறார்கள் என்பதைக்கூட ஜி.எஸ்.டி நெட்வொர்க் மூலமாக நம்மால் பதிவு செய்யமுடியும். இதன் துணையுடன் நம் நாட்டின் பொருளாதார நிலையைத் துல்லியமாக அறிந்துகொள்ளவும், திட்டமிடவும், ஆய்வு செய்யவும் முடியும். 20-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு எண்ணெய் வளம்தான் அடித்தளமிட்டது. அப்படி 21-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு இந்த டேட்டாதான் அடித்தளமிடப்போகிறது."

ஆம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு டேட்டாதான் காரணமாக அமையப்போகிறது. இதை நந்தன் நீல்கேனி மட்டுமல்ல; பல்வேறு தொழில்நுட்ப ஆர்வலர்களும் இதே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கின்றனர். அந்தளவுக்கு எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது பிக் டேட்டா. ஆன்லைன் ஷாப்பிங் தொடங்கி நாட்டின் பொருளாதாரத்தைக் கண்காணிப்பது வரையிலும் இந்த பிக் டேட்டா பயன்பட்டு வருகிறது. அதில் காவல் துறையும் ஒன்று. “நாளைக்கு மழை வரும், வராது” என எப்படி வானிலை ஆராய்ச்சி மையங்கள் முன்னறிவிப்பு செய்து, மக்களை உஷார்படுத்துகிறதோ, அதைப் போலவே “நாளை இங்கே குற்றங்கள் நடக்கலாம்" என காவல் துறையினரை உஷார் படுத்துகிறது இது. இதுமட்டுமில்லாமல் குற்றவாளிகளைப் பிடிக்கவும் கைகொடுக்கிறது.

டேட்டாவைப் பயன்படுத்தி காவல்துறை குற்றவாளிகளைப் பிடிப்பதும், குற்றங்களைக் கணிப்பதும் புதிய விஷயமல்ல. உலகளவில் பல நாடுகளின் காவல் அமைப்புகள் இதுபோன்ற பிக் டேட்டா மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றன. கணிதம், புவியியல், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் பெறப்படும் தகவல்கள் மற்றும் தியரிகளைக் கொண்டு இவற்றைச் செய்துவந்த காவல் துறையினருக்கு, இந்த நூற்றாண்டில் வரமாக அமைந்தது ஒரு டெக்னாலஜி. அது, செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI. இவற்றைச் சிறிய உதாரணங்கள் மூலம் காண்போம்.

காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளிகள் பற்றிய தகவல் தொகுப்புதான் பிக் டேட்டா. ஓர் இடத்தில் குற்றம் நடந்துவிடுகிறது. உடனே காவலர் என்ன செய்வார்? குற்றம் நடந்த இடம், நடந்த சம்பவம் போன்றவற்றை ஒப்பிட்டு, இந்தக் குற்றவாளிதான் இதைச் செய்திருப்பார் என யூகிப்பார். இது குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இவர்தான் செய்திருப்பார் என யூகிப்பதற்கும் உதவியாக இருக்கும். இது குற்றவாளியைப் பிடிப்பதற்கு. இனி குற்றங்களை யூகிப்பதற்கான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

ஓர் ஊரில் வருடந்தோறும் திருவிழா நடக்கும் சமயங்களில் மட்டும், அதிகளவில் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என வைத்துக்கொள்வோம். உடனே அந்தப் பகுதியில் இருக்கும் காவல் நிலையம் என்ன செய்யும்? அந்தத் திருவிழாவுக்கு, இன்னும் கூடுதலாக காவலர்களை அனுப்பி கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார்கள். வருடந்தோறும் நடக்கும் சம்பவங்கள் என்பதால், இந்த வருடமும் அப்படி நடக்கலாம் என யூகித்து இந்தப் பணிகள் நடைபெறும். இவை இரண்டுமே ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பழைமையான விஷயங்கள். இதே இரண்டு விஷயங்கள் பிக் டேட்டா + AI இருந்தால் எப்படி மாறும்?

குற்றவாளிகளின் தகவல்கள், நகரில் குற்றம் நடைபெற்ற இடங்கள் மற்றும் சம்பவங்கள், காவலர்களின் தொடர்பு விவரங்கள், நகரில் தினந்தோறும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் போன்ற முக்கியமான தகவல்கள் அனைத்தும் கணினியில் அடங்கியிருக்கும். புதிய தகவல்கள் அனைத்தும் இணையத்தின் உதவியுடன் பதிவேற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களையும் கணினி மூலம் எளிதாகக் கண்டறிந்துவிடலாம். இதுபோக இன்னும் கடினமான பணிகளைக் கூட துல்லியமாக பிக் டேட்டா உதவியுடன் கண்டறிய முடியும். நகரின் ஏதேனும் தெருக்களில் திடீரென குவியும் மக்கள் கூட்டம், வாகன நெரிசல், குற்றவாளிகளின் நடமாட்டம், விபத்துகள் போன்ற பல்வேறு சம்பவங்களை மிக விரைவில் நம்மால் கண்காணிக்க முடியும். மேலும், அதிகம் குற்றம் நடைபெறும் இடங்கள், நாள், நபர் ஆகியவற்றைப் பொறுத்து, எங்கே எப்போது குற்றம் நடக்கலாம் என்பதையும் முன்கூட்டியே கணிக்க முடியும். நகரத்துக்குள் நடக்கும் குற்ற சம்பவங்கள் மட்டுமின்றி, தீவிரவாதிகளின் தாக்குதல்கள், சதித்திட்டங்கள் போன்றவற்றையும் யூகிக்க முடியும். இப்படி ரியல் டைமில் குற்றங்களைக் கண்காணிப்பதும், நொடிப்பொழுதில் அது பற்றிய விவரங்களைப் பெற முடிவதுதான் இந்த பிக் டேட்டா மென்பொருள்களின் ப்ளஸ். இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும், இதில் குறைகளும் ஏதாவது இருக்குமே என்கிறீர்களா? அதுவும் இருக்கிறது. 

வருங்காலங்களில் இவற்றின் பயன்பாடும், வீச்சும் அதிகரிக்கும்போது, மக்களை செயற்கை நுண்ணறிவு மூலம் இன்னும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். இதனால் தனிநபர் உரிமை பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆதார் கார்டு விஷயத்தில் ஏற்கெனவே இந்தப் பிரச்னை இருக்கும் சமயத்தில், இவை இன்னும் அந்த சந்தேகத்தை வலுப்பெறச் செய்யும். இதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியமான குறையாக முன்வைக்கப்படுகிறது. தேவையான தகவல்களைத் திரட்டுவது, அவற்றைத் திறம்படக் கையாள்வது, தொழில்நுட்பங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்குவது போன்றவை இந்தத் திட்டத்துக்கு முன்னால் இருக்கும் சவால்கள். 

இது சாத்தியமான நடைமுறையா?

அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தக் குற்றத் தடுப்பு முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் டெல்லியில் கூட குற்றங்களை முன்னறிவிப்பு செய்ய மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது நூறு சதவிகிதம் வெற்றிகரமான நடைமுறை இல்லைதான் என்றாலும், குற்றங்களை யூகிப்பதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. வருங்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும். 

இந்தியாவிலும் அடுத்த ஆண்டு முதல் இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், கேரளா, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தவிருக்கிறது. அதன்பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

பின் செல்ல